Published:Updated:

நாளை முதல் `சிப்' இல்லாத ஏடிஎம் கார்டுகள் வேலைசெய்யாது! #Alert

தெ.சு.கவுதமன்
நாளை முதல் `சிப்' இல்லாத ஏடிஎம் கார்டுகள் வேலைசெய்யாது! #Alert
நாளை முதல் `சிப்' இல்லாத ஏடிஎம் கார்டுகள் வேலைசெய்யாது! #Alert

ஏடிஎம் கார்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. அனைத்து வங்கிகளும் மேக்னடிக்-ஸ்ட்ரிப் ஏடிஎம் கார்டுகளை இஎம்வி சிப் கார்டுகளாக டிசம்பர் 31, 2018 தேதிக்குள் மாற்றும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அந்த காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது. இஎம்வி எனப்படுவது யூரோபே, மாஸ்டர் கார்டு & விசா சிப் என்பதன் சுருக்கமாகும். இதைக் கேட்டதும் என்னவோ ஏதோவென்று குழம்ப வேண்டாம்.


 

ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மேக்னடிக் கார்டுகளில் கறுப்பு நிற மேக்னடிக் ஸ்ட்ரிப் மட்டும் இருக்கும். அதை ஸ்வைப் செய்து பயன்படுத்துவார்கள். தற்போது இந்தக் கார்டுகளில் கூடுதலாக முன்புறம் ஒரு மைக்ரோபிராசஸர் சிப் பொருத்தப்படும். ஸ்வைப்பிங் மெஷின்களில் ஏடிஎம் கார்டின் சிப் பகுதியை மட்டும்  செருகி எடுக்கும் முறை வந்துவிட்டது. உங்களுடைய கார்டில் ஏற்கெனவே சிப் பொருத்தப்பட்டிருந்தால் மாற்றத்தேவையில்லை. அது இல்லாதவர்கள்தான் மாற்றியாக வேண்டும். இல்லையென்றால், நாளை முதல் ஏடிஎம் கார்டு வழியாக பணப்பரிமாற்றம் செய்ய இயலாது.

 இது உலகளாவிய பயன்பாட்டு முறையாகும். கடந்த சில ஆண்டுகளாக, வங்கிகள் இந்த இஎம்வி சிப் பயன்பாட்டைத் தொடங்கிவிட்டாலும் முழுமையாக அனைத்துக் கார்டுகளும் மாற்றப்படவில்லை. எனவேதான் ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்து முடுக்கிவிட்டது. இந்த இஎம்வி கார்டுகள், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பைத்தருகின்றன. ஏடிஎம் மெஷின் வழியான திருட்டுகளைத் தடுக்க உதவுகிறது. ஏடிஎம் கார்டுகளை இஎம்வி கார்டுகளாக மாற்றுவதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அந்தந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பித்து, புதிய இஎம்வி சிப் கார்டுகளைப் பெறலாம்.