Published:Updated:

வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பங்குச்சந்தையில் சரிவு!

வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பங்குச்சந்தையில் சரிவு!
வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பங்குச்சந்தையில் சரிவு!

வாராக்கடன் பிரச்னையால் சிக்கித்தவிக்கும் இந்திய வங்கித்துறையை சீர்படுத்துவதற்காக நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். மத்திய கேபினட் அமைச்சரவை நேற்று இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளுக்கு அடுத்து இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி விளங்கும். 

இந்த இணைப்புத் திட்டத்தின்படி, பங்குகளை இடம்மாற்றும்போது, தேனா வங்கியின் பங்குகளில் 27% வரை தள்ளுபடியும், விஜயா வங்கியின் பங்குகளில் 6% தள்ளுபடியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து இன்றைய பங்குச்சந்தையில் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியின் பங்கு மதிப்பு சரிவைக்கண்டது. தேனா வங்கியின் பங்கு மதிப்பு 19.8 சதவிகிதமும், விஜயா வங்கியின் பங்கு மதிப்பு 8 சதவிகிதமும் சரிவடைந்தன.

இந்த இணைப்பானது, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கி என்ற பெருமையை இந்த புதிய வங்கி பெறக்கூடும்.