Published:Updated:

கள்ள நோட்டு பயம் - இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை!

நேபாளத்தின் ராஷ்டிர பேங்க் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நேபாள வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நோட்டுகளில், 100 ரூபாய் நோட்டுக்கு மேற்பட்ட 200, 500, 2,000 ரூபாய் நோட்டுகளை நேபாள பயணிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் வாங்கவோ, பரிமாற்றம் செய்யவோ தடைவிதிப்பதாக கூறியுள்ளது.

கள்ள நோட்டு பயம் - இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை!
கள்ள நோட்டு பயம் - இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மற்றும் புதிய நோட்டுகள் அறிமுகத்தால் ஏற்பட்ட பாதிப்பு, இந்தியர்களை விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு கூறிவந்த பல்வேறு காரணங்களில் ஒன்று, கள்ள நோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. ஆனால், புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாள்களிலேயே கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிட்டன. அதிலும் குறிப்பாக 2,000 ரூபாய் நோட்டுகளில்தான் அதிக கள்ள நோட்டுகள் புழங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்தியாவின் 2,000, 500 & 200 ரூபாய் நோட்டுகளைத் தடைசெய்வதாக நேபாள அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேபாளத்தின் ராஷ்டிர பேங்க் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நேபாள வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நோட்டுகளில், 100 ரூபாய் நோட்டுக்கு மேற்பட்ட 200, 500, 2,000 ரூபாய் நோட்டுகளை நேபாள பயணிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் வாங்கவோ, பரிமாற்றம் செய்யவோ தடைவிதிப்பதாக கூறியுள்ளது. இதன்காரணமாக, நேபாள மக்கள், இந்த ரூபாய் நோட்டுகளை இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு நேபாளத்தில் வர்த்தகர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

'நேபாளத்துக்கு வருக' என்ற பிரசார இயக்கத்தின்மூலம் 2020-ம் ஆண்டில் 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நோக்கமானது பெரிய பாதிப்பைச் சந்திக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவர்களது பணத்தை பரிமாற்றம் செய்வது கடினமானதாக இருக்கக்கூடும். 

ஓர் ஆண்டுக்கு 12 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் நிலமார்க்கமாக நேபாளத்துக்கு வருகை தருகிறார்கள். வான்வழியாக சராசரியாக 160,132 இந்திய சுற்றுலாப் பயணிகள் நேபாளத்துக்குச் செல்கிறார்கள். சராசரியாக நபர் ஒருவர் செலவழிக்கும் தொகை ரூ.11,310 என உள்ளது. இந்த நிலையில், ரூபாய் நோட்டுகள் தடை காரணமாக இந்தச் சுற்றுலாத்துறை பெரிதும் பின்னடைவைச் சந்திக்கக்கூடுமெனத் தெரிகிறது. ஏற்கெனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டபோதும் இந்திய, நேபாள சுற்றுலாப்பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். தற்போது புதிய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் பெருக்கத்தால் 'முதல் கோணல் முற்றும் கோணலாக' பாதிப்புகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.