Published:Updated:

அமேசான், ஃப்ளிப்கார்ட், பே டிஎம் நிறுவனங்களின் விற்பனையில் சரிவு... ஏன்?

``தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறை மாற்றங்கள், இத்தகைய தள்ளுபடி, கேஷ்பேக் சலுகை மற்றும் பிரத்யேக விற்பனை போன்றவற்றைத் தடைசெய்கிறது. எனவே, இவர்களால் வாடிக்கையாளர்களைக் கவரும் வழிமுறைகள் சிக்கலுக்குள்ளாகின்றன.’’

அமேசான், ஃப்ளிப்கார்ட், பே டிஎம் நிறுவனங்களின் விற்பனையில் சரிவு... ஏன்?
அமேசான், ஃப்ளிப்கார்ட், பே டிஎம் நிறுவனங்களின் விற்பனையில் சரிவு... ஏன்?

க்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் பணப்பரிமாற்றம் என்று மாறிக்கொண்டிருக்கும் சூழலில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தம், தற்போது பே டிஎம் நிறுவனத்தையும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் விற்பனையகங்களை நடத்திவரும் சிறு, பெரு வணிகர்களை ஆன்லைன் விற்பனைத்தளங்களின் வளர்ச்சி நேரடியாகப் பாதிப்பதாக, மத்திய அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. குறிப்பாக அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத்தளங்களின் வருகைக்குப் பின் இந்திய வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் பக்கமாக மாறத்தொடங்கினர். வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக கேஷ்பேக் ஆஃபர், அதிரடித் தள்ளுபடி மற்றும் சில தயாரிப்புகள் ஆன்லைன் தளங்களில் மட்டுமே விற்பனை, ஒருநாள் அதிரடி விற்பனை எனப் பல்வேறு வியாபாரத் தந்திரங்களை இந்த நிறுவனங்கள் செயல்படுத்தின. ஆன்லைனில் பொருள் வாங்குபவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளின் வழியாகவும், பேடிஎம் போன்ற பேமன்ட் டொமைன்களின் மூலமாகவும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

ஆனால், மறுபக்கம், இந்த ஆன்லைன் நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யும் சிறு வணிகர்கள், தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்களின் பொருள்களை இந்த ஆன்லைன் விற்பனைத்தளங்களின்மூலம் விற்க முனையும்போது, அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை இந்த ஆன்லைன் நிறுவனங்கள் விதித்தன.

குறிப்பாக, குறுகிய காலக்கெடுவுக்குள் டெலிவரி, தங்களது சேமிப்புக்கிடங்குகளில் பொருள்களை இருப்புவைக்க வாடகை, பிரத்யேக விற்பனை எனப் பல்வேறுவிதமாக சிறு வணிகர்களை தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தார்கள். தற்போது அவற்றுக்கெல்லாம் இந்த திருத்தப்பட்ட புதிய விதிமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சிறு வியாபாரிகள் ஆன்லைன் விற்பனைத் தளங்களைவிட்டு வெளியேறி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பேடிஎம் நிறுவனத்தின் மூலமான விற்பனையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பேமன்ட் நிறுவனத்தின் மூலம் மளிகைப்பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்களை சலுகை விலையில் வாங்கிவந்தவர்கள், தற்போது அந்தச் சலுகைகள் தடைப்பட்டதால் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். இதன் எதிரொலியாக இவர்களின் வருமானம் பெருமளவு இழப்பைச் சந்தித்துவருகிறது.  

`புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப பேடிஎம், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது விற்பனை முறையை மாற்றிக்கொள்வதுதான் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும்’ என்கிறார் பேமன்ட்ஸ் டொமைன் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் என்.சபாபதி.

``பேடிஎம் நிறுவனம் தனது வாலட் மூலமாகப் பொருள்களை வாங்குபவர்களுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வழங்கி வந்தது. கேஷ்பேக் சலுகைத் தொகையை அதன் வாலட்டில் ஏற்றிவைத்து வாடிக்கையாளர்களைத் தொடர்ச்சியாகப் பொருள்களை வாங்க ஊக்குவித்துவந்தது. இது அவர்களின் மார்க்கெட்டிங் உத்தி. 

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறை மாற்றங்கள், இத்தகைய தள்ளுபடி, கேஷ்பேக் சலுகை மற்றும் பிரத்யேக விற்பனை போன்றவற்றைத் தடைசெய்கிறது. எனவே, இவர்களால் வாடிக்கையாளர்களைக் கவரும் வழிமுறைகள் சிக்கலுக்குள்ளாகின்றன. இதனால் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற விற்பனைப் பாதிப்பைத்தான் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் சந்திக்கின்றன. சில்லறை விற்பனையாளர்களுக்குக் கைகொடுக்கும் விதமாகத்தான் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. எனவே, தற்போது இந்தப் புதிய சூழலுக்கேற்ப தங்களது விற்பனை உத்திகளை மாற்றிக்கொள்வதன் மூலம்தான் விற்பனைச் சரிவைத் தவிர்க்க இயலும். இவர்கள் தங்களைச் சரிசெய்துகொண்டு விரைவில் மீண்டு வருவார்கள்’’ என்றார்.

ஆன்லைனில் பொருள்களை வாங்கும்போது விலை குறைவாகக் கிடைத்தது வாடிக்கையாளர்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயம்தான் என்றாலும், சிறு வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு அதிகம். சிறு வணிகர்களைக் காப்பாற்றும் விதமாகக் கொண்டுவந்துள்ள இந்த மாற்றங்களை நாம் ஏற்க வேண்டும். மக்களிடையே ஆன்லைன் விற்பனை மீதான மோகம் குறைவது உள்ளூர் விற்பனையாளர்களின் வணிகம் மேம்படவும் வாழ்க்கைத்தரம் மேம்படவும் உதவும் என்பதால், இந்தப் புதிய விதிமுறை மாற்றங்களை நாம் வரவேற்க வேண்டும். அதேபோல், ஆன்லைன் விற்பனைத்தளங்களும் தங்களது விற்பனை உத்திகளில் இனி நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பார்கள் என்று நம்பலாம்.