Published:Updated:

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

'உன் யோசனை மிகவும் உயர்ந்தது. அதை முழுவதுமாகத் தொடர நான் உன்னை ஊக்குவிக்கிறேன். உன் முயற்சியில் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்' என்று ஆசீர்வதித்தார்.

என்ன சொல்லப் போகிறாரோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஆனந்திற்கு அவரது ஆலோசகரின் கருத்து இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் மகிழ்ந்து போனார். 1996-ல் மாணவர் அந்தஸ்தில் இருந்த ஆனந்த், ஒரு தொழில் முனைபவராக, இல்லை, ஒரு தொடர் தொழில் முனைபவராகவே மாறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

1996-ல் ஜங்கிளி கார்ப் பரேஷன் (Junglee Corporation) என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இணையதளத்தில் பொருள் வாங்குவோருக்கு பல வலைதளங்களை ஒரே நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து, அதன் மூலம் யார் குறைந்த விலையில் விற்கிறார்கள் என்று கண்டறியும் தொழில்நுட்பத்தை இவ்வுலகிற்கு முதன்முதலாக அறிமுகம் செய்த பெருமை அந்த நிறுவனத்தையே சேரும்.

ஆரம்பித்த இரண்டு வருடங் களிலேயே அந்த நிறுவனத்தின் சேவை, மிகப் பிரபலம் அடைந்தது. அதைப் பார்த்தது அமேஸான் டாட் காம் (Amazon.com). இணையதள உலகில் உலவுகிற அனைவருக்குமே இந்த நிறுவனம் தெரியும்.  இணையதள வர்த்தகத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் நிறுவனம் அமேஸான்.  முதலில் ஒரு புத்தகம் விற்கும் தளமாக தொடங்கினாலும், இன்று அந்நிறுவனம் பன்மடங்கு விரிவடைந்து பலதரப்பட்ட பொருட்களையும் (கணினி, ஆடைகள், திரைப் படங்கள், பாடல்கள், அழகுப் பொருட்கள், அன்பளிப்பு சாமான்கள், முதலியன) வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!
##~##
ஜங்கிளி கார்ப்பரேஷன் உருவாக்கிய தொழில்நுட்பம் அவர்கள் பிஸினஸ் வளர்வதற்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்று அமேஸான் நினைத்தது. அதனால், ஆகஸ்ட் 1998-ல் ஜங்கிள் நிறுவனத்தை ஆனந்த் மற்றும் அவருடைய கூட்டாளி வெங்கி ஹரிநாராயணிடமிருந்து விலைக்கு வாங்கியது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது தெரியுமா?  இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து இருநூற்று ஐம்பது கோடி ரூபாய். இந்த அசாதாரண விலை மதிப்பீட்டை வைத்தே ஆனந்த் மற்றும் அவர் கூட்டாளி உருவாக்கிய தொழில்நுட்பம் எப்படி பட்டதாக இருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்.

தன்னுடைய நிறுவனத்தை விற்றதன் தொடர்ச்சியாக ஆனந்த் அமேஸான் நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குநராக சிறிது நாட்கள் பணியாற்றினார். பின்னர் அமேஸான் நிறுவனத்தை விட்டு விலகி, காம்பிரியன் வென்ச்சர்ஸ் (Cambrian ventures) என்கிற வென்ச்சர் கேப்பிட்டல் துணிகர நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் மூலம் பல தொடக்க நிலை நிறுவனங்களை மதிப்பீடு செய்து அதில் நிதி முதலீடு செய்தார். அவர் செய்த முதலீடுகளில்   பேஸ்புக், இண்டியா இன்ஃபோலைன், த ஃபைண்ட் டாட்காம் (TheFind.com)  ஆகிய பிரபல நிறுவனங்களும் அடங்கும்.

அதன்பிறகு 2005-ல் காஸ்மிக்ஸ் (Kosmix) என்கிற கம்பெனியைத் தொடங்கினார். இணையதளத்தில் உள்ள தலைப்புகளை வரிசைப்படுத்தி வழங்கும் தொழில்நுட்பத்தை  உருவாக்கும் முயற்சியில் இக்கம்பெனி மூலம் அவர் ஈடுபட்டார். இந்தத் தொழில்நுட்பத்தின் பலனை அறிந்த வால்மார்ட் நிறுவனம் 2011-ல் காஸ்மிக்ஸ் நிறுவனத்தை ஆனந்த் மற்றும் அவர் கூட்டாளி வெங்கியிடமிருந்து வாங்கியது. இம்முறை கை மாறிய தொகை இந்திய ரூபாயில் சுமார் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய். உலகின் மிகப் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் யோசிக்காமலேயே இத்தனை கோடி ரூபாய் கொடுத்து அந்நிறுவனத்தை வாங்கியது. அந்நிறுவனத்தின் வருட வருவாய் பல சிறிய நாடுகளின் வருவாயைவிட அதிகமாகும்.

வால்மார்ட்டிடம் காஸ்மிக்ஸ் நிறுவனத்தை விற்றதைத் தொடர்ந்து ஆனந்த்  காஸ்மிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இரண்டுமுறை தான் உருவாக்கிய நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, அதன் பின்னர் வெற்றிகரமாக விற்றதன் மூலம் பெரும் செல்வமும் ஆனந்திற்குக் கிடைத்தது. தொழில் முனைபவராகும் கனவு காணும் பல இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறார் ஆனந்த். இந்த திறமையை அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத் திற்குச் செல்லாமல் சாதித்திருக்க முடியுமா என்றால் சந்தேகம்தான்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாமல் போனாலும் அங்கு படிக்கும் போதும், வசிக்கும் போதும் கிடைத்த தொழில்நுட்பத்தின் போக்கை உணரும் திறன், சக நண்பர்களின் பரிச்சயம், பேராசிரியர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனை ஆகியவை அவரின் வெற்றிக்கு அடிக்கல்லாக அமைந்தது.

''என்ன சார் நீங்க,  அசாத்திய திறன், அனுபவம், பொருள் பலம் கொண்டவர்களைப் பற்றியே சொல்றீங்க. நாங்க சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவங்க. பக்கத்து வீட்டுப் பசங்களை உதாரணமா காட்ற மாதிரி யாரையாவது சொல்லுங்க!'' என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. மாறன் மற்றும் ரத்தினகுமார் என்கிற இரு நண்பர்களின் வெற்றிக் கதையை உங்களுக்குச் சொல்லும்முன், தொழில் முனைபவர்களுக்கு எத்தகைய படிப்பு உகந்ததாக இருக்கும் என்பதைச் சொல்லி விடுகிறேன்.

தொழில் முனைபவர்கள் இன்ன படிப்புதான் படிக்க வேண்டுமென்பதில்லை. அவர்கள் செய்யும் தொழிலுக் கேற்ப படிக்க வேண்டிய படிப்பும் மாறும். தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பிஸினஸ் என்றால், அத்தொழிலுக்கு ஆதாரமான தொழில்நுட்ப பயிற்சியைக் கற்றுக்கொள்வது நல்லது. உதாரணமாக, நீங்கள் தோல் பதனிடும் தொழில் செய்ய விரும்பினால் லெதர் டெக்னாலஜிக்கான படிப்பு இன்றியமையாததாக இருக்கும். அதேபோல கட்டடப் பணித் துறையில் தொழில் தொடங்க விரும்பினால் அதற்குண்டான பொறியியல் படிப்பை படித்தி ருந்தால் மிகுந்த பயனளிக்கும்.

தொழில்நுட்பத்தைப் பெரிதும் சார்ந்திராத பிஸினஸ் பல உண்டு. உதாரணமாக, டிராவல் அண்ட் டூர்ஸ், ஆடை தயாரிப்பு, சில்லரை வர்த்தகம் போன்ற தொழில்களைச் சொல்லலாம்.

எத்தகைய படிப்பு பிஸினஸ் பற்றி ஒரு ஒட்டுமொத்தமான செய்நுட்ப அறிவைத் தருகிறதோ, அவை அனைத்தும் தொழில் முனைபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பிஸினஸ் பற்றிய பல்வேறு படிப்புகளில் இன்று மிகவும் பிரபலமாக இருப்பது எம்.பி.ஏ. படிப்புதான். இது ஒரு மல்டி வைட்டமின் போன்றது. மிகவும் குறுகிய காலத்தில் (ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே) பிஸினஸ் செய்வதற்குத் தேவையான அனைத்து துறைகளிலும் (மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஆபரேஷன்ஸ், தகவல் தொழில்நுட்பம், மனிதவளம் என பல முக்கிய துறைகள் பற்றி ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கிறது. பாரம்பரியமாக எம்.பி.ஏ. இரண்டு வருடப் படிப்பு என்றாலும், தற்போது பல இடங்களில் ஒரு வருடப் படிப்பாகவும் கற்பிக்கப்படு கிறது. இந்தியாவில் இன்று எம்.பி.ஏ. படிக்கும் வசதி பல பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ளது. எம்.பி.ஏ. ஒரு முதுகலை பட்டப் படிப்பு என்பதால் அதற்கு முன்னால் ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இளங்கலை அளவில் பிஸினஸ் பற்றி பிரபலமடைந்து வரும் ஒரு படிப்பு பி.பி.ஏ. ஆகும். பிளஸ் டூ முடித்தவுடன் இதில் சேரலாம்.

தொழில் முனைவதற்காகவே சில கல்லூரிகளில் தனிப் பட்டப் படிப்பே இருக்கிறது. குறிப்பாக, சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.எஸ். (ஆன்ட்ரபிரனர்ஷிப்) என்கிற படிப்பு தொழில் முனைபவர் களுக்காக வழங்கப்படுகிறது. இவ்வாறு கல்லூரியில் சேர்ந்து படிப்பதில் வேறொரு ஆதாயமும் உண்டு. இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள் நலனுக்காக ஆன்ட்ரபிரனர்ஷிப் கிளப் போன்ற இயக்கங்கள் உள்ளன. இச்சங்கங்களின் மூலம் ஒத்த மனநிலையை உடைய நண்பர்களைச் சந்திக்க முடியும். அவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வது உங்களின் பல கேள்விகளுக்கு விடை அளிக்கும்.

இச்சங்கங்கள் அவ்வப்போது நடத்தும் கருத்தரங்குகளில் பல அனுபவமிக்கத் தொழில் முனைபவர்கள் பேச வருவார்கள். அவர்களுடன் உரையாடி அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்குப் பல வகைகளில் நன்மை அளிக்கும்.

சரி, பல வருடங்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இல்லையா? கல்லூரிக்குச் செல்லும் வயதைத் தாண்டிவிட்டீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இன்று பல குறுகிய கால பயிற்சிப் பள்ளிகள் இத்தகையோருக்காக உள்ளன. மிகவும் பிரபலமான கல்லூரிகளிலும் குறுகிய கால சர்ட்டிபிகேட் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவை ஒரு நாளிலிருந்து ஒரு வருடம் வரை பல்வேறு காலகட்டங்களில் உள்ளது. உங்களுக்குத் தகுந்த பயிற்சியை தேர்ந்தெடுத்துக்  கொள்ளலாம். உதாரணமாக, பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பெண் தொழில்முனைபவர்களுக்காக நான்கு வாரப் பயிற்சி வகுப்பு ஒன்று நடத்தப்படுகிறது.

இவ்வாறு குறுகிய கால பயிற்சியின் மூலம் தகுந்த அனுபவம் பெற்று இன்று தொழில் முனைபவர்களாக ஓஹோ என்று கொடி கட்டிப் பறப்பவர்கள்தான் மாறனும், ரத்தின குமாரும். இவர்களைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.    

(தொழில்முனைவோம்)

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!