Published:Updated:

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

திருமதி எஃப்.எம்.


இந்த வாரம் சித்ரா சிவக்குமார், திருவண்ணாமலை.

பத்தாயிரம் வருமானம் வந்தாலும் சரி, ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்தாலும் சரி, அதைச் சரியான விதத்தில் திட்டமிட்டு குடும்பச் செலவுகளை செய்வதில்தான் பெண்களின் திறமை இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பவர் திருவண்ணாமலை சித்ரா சிவக்குமார். இந்த வாரத்தின் திருமதி ஃபைனான்ஸ் மினிஸ்ட்டரான இவர் தனது குடும்ப நிர்வாகத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
''நா
னும் என் கணவரும் எம்.இ. பி.ஹெச்.டி. முடித்துவிட்டு திருவண்ணாமலையில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறோம். எங்களுக்கு காவ்யாஸ்ரீ, தனிஷ்குமார் என இரண்டு குழந்தைகள். காவ்யாஸ்ரீ எல்.கே.ஜி. படிக்கிறாள். பையனுக்கு இரண்டு வயதாகிறது. எங்கள் இருவரின் சம்பளம் அறுபதாயிரத்திற்கு மேல்.

திருவண்ணாமலையில் காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு என்பதால் எங்க குடும்பச் செலவுகளும் குறைவுதான். வருமானத்திற்கு குறைவில்லை என்பதால் இஷ்டத்திற்குச் செலவு செய்து ஆடம்பரமாக இருக்க முடியும். ஆனால், எங்கள் இரண்டு பேருக்குமே அது பிடிக்காது. வீட்டு வாடகை, கரன்ட், மளிகை சாமான்கள், பால் என மொத்தமாகப் பதினைந்தாயிரம் ரூபாய் போய்விடும். எனது மாமியார் தனியாக இருப்பதால் அவருக்கு ஒரு ஐந்தாயிரம் ரூபாய் போய்விடும். மீதமிருக்கும் பணத்தில் பெரும்பாலும் சேமிப்புக்குப் போய்விடும்.

என் கணவருக்கு நான்கு தம்பிகள், ஒரு தங்கை. எல்லாரையும் நன்றாக படிக்க வைத்து நல்ல வேலையில் இருக்காங்க. என் கணவர்தான் வீட்டிற்கு மூத்தவர் என்பதால் என் நாத்தனாருக்கு திருமணம் செய்து வைக்க தனியாகச் சேமித்து வருகிறோம்.    

சேமிப்பு என்று வரும்போது அதை வெறும் சேமிப்பாக நாங்கள் கருதுவதில்லை.  ஏறக்குறைய ஒரு முதலீட்டு நோக்கில்தான் பணத்தைக் கையாள்கிறோம். தபால் நிலைய சேமிப்பு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பலவிதமான சேமிப்பு அம்சங்களில் முதலீடு செய்து வருகிறேன்.

திருமதி எஃப்.எம்.

பொதுவாக, பெண்கள் தங்கத்தைதான் வாங்க நினைப்பார்கள். என்னைப் பொறுத்தவரை தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யமாட்டேன். நகைக் கடையில் சீட்டு போட்டிருக்கேன் அதில் கொஞ்சம் நகை வாங்கிக் கொள்வேன். என்னுடைய அம்மா எனது கல்யாணத்திற்கு சீதனமாகப் போட்ட சவரனுடன் கூடுதலாகப் பத்து சவரன் நகை போட்டு என் மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் போதும் என நினைக்கிறேன். அதற்காகத்தான் அந்த நகை சீட்டும்.

ஆனால், எங்கள் கவனமெல்லாம் ரியல் எஸ்டேட்டில்தான் இருக்கிறது. குழந்தைகள் இரண்டு பேருக்கும் வீடு கட்டித் தரவேண்டும். அதற்காக தனியாக நிலம் வாங்கி போட்டிருக்கிறோம். எங்களுக்கு வீடு கட்டுவதற்கும் நிலம் வாங்கிவிட்டோம். இன்னும் ஆறு மாதத்தில் அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிடுவோம். நிலம் வாங்க மூன்றில் ஒரு பங்கு பணம் எங்கள் கையிலிருப்பதால் கடன் வாங்கியாவது வீட்டை கட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம். பிறகு அந்த கடனை அடைத்துவிடலாம் என்பது எங்கள் திட்டம். நிலத்தின் முதலீடுதான் கண் மூடித் திறப்பதற்குள் எகிறி விடுகிறது. எனவே, என் சாய்ஸ் ரியல் எஸ்டேட்தான்.

திருவண்ணாமலையில் கோயில், மலையைத் தவிர வேறு பெரிய பொழுதுபோக்கு என்று எதுவும் இல்லை. பொழுதுபோக்கு என்று பார்த்தால் மாதம் ஒருமுறை கோயில், சினிமா, ஓட்டலுக்குப் போவோம். சின்ன ஊர் என்பதால் பெரிதாக கார் மாதிரி எதுவும் வச்சுக்க வேண்டியதில்லை. வீட்டில் ஒரு டூவீலர் இருக்கிறது. ஆனால், நாங்கள் இரண்டு பேருமே கல்லூரி பேருந்தில்தான் கல்லூரிக்குப் போய் வருகிறோம்.

திருமதி எஃப்.எம்.

பெட்ரோல் விற்கிற விலையில டூவீலரைகூட நாங்கள் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. வீட்டு வாடகையில்கூட கணிசமான தொகையை மிச்சப்படுத்துகிறோம். நாங்கள் விரும்பினால் 5,000 ரூபாய்க்குகூட வாடகைக்கு இருக்கலாம். ஆனால், 2,500 ரூபாயைத்தான் வாடகைக் கென்றே செலவு செய்கிறோம். மீதமுள்ள பணத்தை அப்படியே முதலீட்டுக்கு கொண்டு சென்று விடுகிறோம்.

திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. இந்த ஏழு வருஷத்தில் மாத பட்ஜெட் போட்டு செலவு செய்வது நான்தான். பண்டிகை காலங்கள் வருகிறதெனில் அதற்கு பட்ஜெட் போட்டு அதற்குள் செலவை செய்து முடித்துவிடுவேன். இந்த மாதம் 20,000 ரூபாய்க்குள் எல்லா செலவுகளையும் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டால், அந்த பட்ஜெட்டைத் தாண்டி ஒரு ரூபாய்கூட போகாது.

இப்படி சிக்கனமாகச் செலவு செய்ய எனக்கு கற்றுத் தந்தது என் அம்மாதான். என் பெற்றோருக்கு மூன்று பெண் குழந்தைகள். அப்பா அக்கவுன்டன்ட்-ஆக பணிபுரிந்து ரிட்டையர் ஆனவர். என் அப்பாவின் குறைந்த சம்பளத்தில் எங்கள் மூன்று பேரையும் நன்கு படிக்க வைத்து ஆளுக்கு முப்பது சவரன் நகையும் போட்டு திருமணமும் செய்து வைத்தார். எங்க அம்மாவின் சிக்கனம்தான் என்னையும் பணத்தின் மேல் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வைத்தது. அவர்களுடைய வழிகாட்டுதல்தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

என் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, தொழிலதிபர் ஆக்க வேண்டும். அவர்கள் சம்பளத்திற்காக வேலைக்குச் செல்வதில் எனக்கு இஷ்டமில்லை. அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை சிக்கனமாக செலவு செய்யவும் கற்றுக் கொடுக்க வேண்டும். எந்த விஷயமும் குழந்தைப் பிராயத்திலேயே சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நீங்களும் உங்கள் குழந்தையை இந்த மாதிரி வளர்த்துப் பாருங்க! பிரமாதமான ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்!''

-பானுமதி அருணாசலம், ரா. ராபின்மார்லர்
படங்கள்: கந்தகுமார்

திருமதி எஃப்.எம்.