ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..
வீடியோகான் நிறுவனத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில், வங்கியின் தலைவராக இருந்த சந்தா கோச்சார்மீது மோசடிக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அந்தக் கடனில் ரூ.2,800 கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படாததால் அது வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. எனவே, இந்த மோசடியில் அவரின் கணவருக்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சந்தா கோச்சார், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் என மூவர்மீதும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து அவர்களது அலுவலகங்களில் கடந்த ஜனவரியில் சி.பி.ஐ சோதனை நடத்தி, மூவர் மீதும் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்தது. மேலும், சந்தா கோச்சாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. லுக் அவுட் நோட்டீஸை இந்திய விமான நிலையங்களுக்கும் அனுப்பியது. பெரிய அளவிலான குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லாமல் தடுப்பதற்காக இந்த லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்படுவது வழக்கம். தற்போது அமலாக்கத்துறை சார்பாக, கூடுதல் தகவல்களைத் திரட்டுவதற்காக சந்தா கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் இல்லங்களில் இன்று காலையிலிருந்து சோதனை நடத்திவருகிறார்கள்.