Published:Updated:

பணத்தை நிர்வகிப்பதில் பெண்கள் செய்யும் 5 தவறுகள்!

திருமணத்துக்கு முன்பாக, பெண்களுக்கு சமையல் கற்றுக் கொள்வது எப்படி முக்கியமாக கற்பிக்கப்படுகிறதோ , அதைவிடவும் பணத்தை நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வதும் கற்பிக்கப்பட வேண்டும்.

பணத்தை நிர்வகிப்பதில் பெண்கள் செய்யும் 5 தவறுகள்!
பணத்தை நிர்வகிப்பதில் பெண்கள் செய்யும் 5 தவறுகள்!

வைஷ்ணவிக்குத் திருமணமாகி, நான்கு ஆண்டுகளிலேயே விவாகரத்தும் ஆகிவிட்டது. திருமணத்துக்கு முன்பு வரை, குடும்பப் பொருளாதாரத்தை அவரின் தந்தைதான் கவனித்துக்கொண்டார். திருமணத்துக்குப் பிறகு அவருடைய கணவர் அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். ஆனால், இப்போது கணவரும் அவளுடன் இல்லை... தந்தையும் இறந்துவிட்டார் என்பதால், பொருளாதாரச் சூழ்நிலையை அவரால் சமாளிக்க முடியவில்லை. பணத்தை நிர்வகிப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் அவருக்கு. இப்படித்தான் பெண்களில் பெரும்பாலானோர், குடும்பப் பொருளாதாரத்தில் கலந்துகொள்வதேயில்லை. இதனால் பணத்தை நிர்வகிக்கத் தெரியாமல், நிறைய தவறுகளைச் செய்கிறார்கள். பெண்கள் பொதுவாக என்ன மாதிரியான தவறுகளைச் செய்கிறார்கள், அந்தத் தவறுகளை சரிசெய்வதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

திருமணத்துக்கு முன்பாக, பெண்களுக்குச் சமையல் கற்றுக்கொள்வது எப்படி முக்கியமாகக் கற்பிக்கப்படுகிறதோ, அதேபோல பணத்தை நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வதும் கற்பிக்கப்பட வேண்டும் என்பது நிதி ஆலோசகர்களின் பொதுவான கருத்து.

1. கடனுக்கு முக்கியத்துவம், முதலீட்டுக்கு இல்லை. 

பெண்களின் மனநிலை, கடன் இருக்கக் கூடாது என்பதுதான். ஆண்களைவிடப் பெண்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிப்பார்கள். ஆனால், கடனை வேகவேகமாக அடைப்பதில் காட்டும் அதே ஆர்வத்தை, வருமானத்தைப் பெருக்குவதிலும் அல்லது முதலீட்டு விஷயங்களிலும் காட்டினால் நன்றாக இருக்கும். ஆனால், அதை எப்போதுமே பெண்கள் செய்ய மாட்டார்கள். கடனை முழுவதுமாக அடைத்துவிட்டு, அதற்குப் பிறகுதான் முதலீட்டைத் தொடங்க வேண்டும் என்பது, நல்ல அணுகுமுறைதான். அப்போதுதான் முதலீடும் தொந்தரவு இல்லாமல் தொடரும். ஆனால், கடன் கட்டுவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்திவிட்டு, காலம் தவறி முதலீடுகளை மேற்கொண்டால், அது பயன்தராமல்போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக்கொண்டே, ஓய்வுக்காலம் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டையும் ஆரம்பிப்பதுதான் புத்திசாலித்தனம்.

2. ரிஸ்க் உள்ள முதலீடுகளைத் தவிர்ப்பது

பெண்களின் சேமிப்பு எல்லாம், அஞ்சல் அலுவலகச் சேமிப்பு திட்டங்கள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள், சீட்டுப் போடுவது, தங்க நகைச் சீட்டு எனக் குறுகிய வட்டத்துக்குள்ளாகவே இருக்கும். ஏனெனில், இதற்கான ரிஸ்க் அளவு குறைவு. பெரும்பாலான பெண்கள் முதலீட்டு விஷயங்களில் பயம்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே அவர்களால் துணிந்து முடிவெடுக்க முடிவதில்லை. ரிஸ்க் குறைவாக உள்ள முதலீடுகளும் சேமிப்புகளும் நீண்டகாலம் மேற்கொண்டாலும்கூட, குறைவான லாபத்தையே கொடுக்கும். ஆனால், ரிஸ்க் அதிகமுள்ள முதலீடுகளைக் குறுகியகால அளவில் மேற்கொண்டாலும், அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். வயதுக்கு ஏற்றார்போல முதலீடுகளையும் ரிஸ்க் அளவுகளையும் தேர்ந்தெடுத்து அதன்படி முதலீடுகளை மேற்கொள்ளலாம். நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடுகளை ஆரம்பிக்கவில்லை என்றாலும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இன்றைய நிலையில் நிறைய வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகள் ஏராளம் இருக்கின்றன.

3. தங்கம் மட்டும்தான் முதலீடு என நினைப்பது...

பெண்களில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, கையில் காசு இருந்தால் உடனே தங்க நகைகளை முதலீடாக நினைத்து வாங்கி வீட்டு அலமாரிகளில் பூட்டிவைத்துக்கொள்வதுதான். இன்ஷூரன்ஸையும் தங்க நகைகளையும் எப்போதுமே முதலீட்டுக் கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது.

நகைகளாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என எக்கச்சக்கமான பணம் விரையமாகிவிடும். முதலீட்டிலிருந்து வருமானம்தான் கிடைக்க வேண்டுமே தவிர, முதலீட்டின் தொடக்கத்திலேயே பணம் விரையமாகக் கூடாது. தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், கோல்டு இ.டி.எஃப்., ஃபண்டுகளில் முதலீட்டை ஆரம்பிக்கலாம். நேரடி தங்கம் கொடுக்கும் லாபத்தைவிட பல மடங்கு லாபம் இந்த ஃபண்டுகளில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

4. முதலீடுகளை உணர்வுரீதியில் கையாள்வது...

பெண்கள், எப்போதுமே உணர்வுபூர்வமானவர்கள். ஆனால், முதலீடு விஷயங்களில் உணர்வுசார்ந்து எடுக்கும் முடிவுகள் பிரச்னைக்கு வழிவகுக்கும். சாதாரணமாக, கோபத்திலோ அல்லது குழப்பமான மனநிலையிலோ எடுக்கும் முடிவுகள் தவறாவதைப்போல, உணர்வுரீதியில் செய்யும் முதலீடுகள், லாபத்தைக் கொடுக்காமல் போகலாம். அதனால் முதலீடு என்று வரும்போது அல்லது பிறருக்குக் கடன் கொடுக்கும்போது உணர்வுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, அறிவார்ந்த சிந்தனையுடன் முடிவெடுங்கள்.

5. ஷாப்பிங் தவறுகள்

பெண்கள் எப்போதெல்லாம் தங்களை பலவீனமாக உணர்கிறார்களோ அப்போதெல்லாம் ஷாப்பிங் மேற்கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு. ஆனால், ஷாப்பிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகு பெரும்பாலான பெண்கள், `தேவையில்லாம செலவு செய்துவிட்டோமா!' என யோசிக்காமல் இருப்பதில்லையாம். இந்த மனநிலையை மாற்றிக்கொள்ளாமல்போனால், நிதியைக் கையாளும் விஷயத்தில் பெரும்குழப்பத்தை இது ஏற்படுத்தும். அதற்காக ஷாப்பிங் செய்யக் கூடாது என்றில்லை. குடும்பப் பொருளாதாரத்தை பாதிக்காத வரை, தேவையான பொருள்களை தேவையான நேரத்தில் வாங்கிக்கொள்வதில் தவறேதும் இல்லை.

இதே மனநிலை ஆண்களுக்கும் இருந்தாலும், செலவு செய்யும் விகிதம் பெண்களைவிட மிகவும் குறைவாகவும், அவர்களின் நாட்டம், உணவு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்து செலவு செய்வதில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் பெண்கள் ஷாப்பிங் விஷயங்களில் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டியது அவசியம்.

உடலின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் உங்களுக்கும் உங்களுடைய பணத்துக்குமிடையே இருக்கும் புரிதலும். அதனால் இனி, பணத்தைச் செலவு செய்யும்போதும் சரி, சேமிக்கும்போதும் சரி ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, சரியான முடிவை தயக்கமில்லாமல் எடுங்கள்.