பிரீமியம் ஸ்டோரி

முதலீட்டைப் புரிந்துகொள்ளுங்கள்!

நா
ன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி மூன்றாண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்றேன். அப்போது எனக்கு ரூ.10 லட்சம் பணம் கிடைத்தது. மூன்று வருடங்களுக்குப்பிறகு என் மகளின் திருமணத்துக்குத்தான் அந்தப் பணம் தேவைப்பட்டது. ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைக்கலாம் என முடிவு செய்த நிலையில், என் நண்பர் ஒருவர் பணத்தை இரண்டு மடங்காக ஆக்க நிறைய முதலீடுகள் இருக்கின்றன என்று சொல்லி, முன்னணி புரோக்கிங் நிறுவனம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்.

என் பணம் என் அனுபவம்!

அங்கிருந்தவர்கள் சொன்னது எதுவும் எனக்குப் புரியவில்லை. ஈக்விட்டி, கமாடிட்டி, கரன்சி என அவர்களுடன் என் நண்பர்தான் பேசினார். விவரமான நண்பர் உடன் இருப்பதால், அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் கையொப்பம் போட்டேன். மூன்று மாதங்களுக்குமுன், என் மகள் திருமணத்துக்காகப் பணத்தை எடுக்க  அந்த புரோக்கிங் அலுவலகத்துக்குச் சென்றேன். ரூ.8.7 லட்சம்தான் கிடைக்கும். ஐந்து வருடங்கள் பொறுத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்கள். அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்ட என் நண்பரிடம் போன் போட்டு சொன்னேன். “அவர்கள் சொல்வது சரிதான். நீங்கள் முதலீடு செய்தபோது மார்க்கெட் நன்றாக இருந்தது. இடையில் மார்க்கெட் இறங்கிவிட்டதே” என புரோக்கிங் நிறுவனத்தினர் சொன்னதையே சொன்னார். பிறகு சந்தை நிலவரங்கள் தெரிந்த ஒருவரிடம் நடந்த விவரங்களைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.

என் பணம் என் அனுபவம்!“அந்த புரோக்கிங் நிறுவனம் உங்களை ஏமாற்றவில்லை. உங்கள் ஒப்புதலுடன்தான் முதலீடுகளைச் செய்துள்ளது. சந்தை சார்ந்த முதலீடுகளை நீங்கள் புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்ததும் உங்களின் பணத் தேவைகளைப் பற்றி புரிந்துகொள்ளாத மேதாவித்தனமான உங்கள் நண்பரை நம்பியதும்தான் நீங்கள் செய்த தவறு” என்று சொன்னார். நீங்களாவது முதலீடுகளை நன்கு புரிந்து கொண்டு செய்யுங்கள் என்பதற்காகவே இதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

-ராமதுரை, திருச்சி

என் பணம் என் அனுபவம்!

நாமே களமிறங்கினால் காசு மிச்சம்!

ங்கள் வீட்டில் கார் பார்க்கிங் செய்ய மெட்டல்ஷீட் செட்  போட வேண்டியிருந்தது. கான்ட்ராக்ட் முறையில் செய்துதரும் இரண்டு மூன்று நபர்களிடம் கொட்டேஷன் கேட்டேன். ரூ.30,000 ஆகும் என்றார்கள். என் மைத்துனர், ‘‘நீங்களே களத்தில் இறங்கி செய்தால் 20% வரை பணம் மிச்சமாகும்’’ என்றார். உடனே வெல்டிங் பட்டறை ஒன்றில் பேசினேன். இடத்தை அளந்து பார்த்துவிட்டு கூலி மட்டும் ரூ.4,000 ஆகும் என்றார்கள். தேவையான மெட்டீரியல்களை ஹார்டுவேர்ஸ் டிப்போக்களில் பேரம் பேசி, 18,000 ரூபாயில் வாங்கி முடித்தேன்.

மொத்தமாக 22,000 ரூபாயில் கார் செட்டை முடித்து விட்டேன். சோம்பலை ஒதுக்கிவிட்டு மெனக்கெட்டதால் ரூ.8,000 பணம் மிச்சமானது.

-செந்தில்குமார், சேலம்

என் பணம் என் அனுபவம்!

ஒரே கம்பெனி... ஒரே நேரம்... ஒன்றாகப் பயணம்!

நா
னும் என் நண்பன் சிவாவும் சென்னை புறநகரில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறோம். என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் சிவாவின் வீடு உள்ளது. 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கம்பெனிக்கு சொந்த காரில்தான் சென்று வந்தோம். ஒருநாள் என் கார் ரிப்பேர் ஆகிவிட, சிவா என் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் சென்றான். சில வாரங்களில் அவனுடைய கார் பஞ்சர் ஆகிவிட, நான் அவன் வீட்டுக்குச் சென்று அவனை அழைத்துச் சென்றேன். அப்போதுதான் எனக்கு அந்த ஐடியா தோன்றியது. சிவாவிடம் பேசினேன். அவனும் ஒப்புக்கொண்டான். இப்போது ஒரு வாரம் என் காரிலும், இன்னொரு வாரம் அவன் காரிலும் கம்பெனிக்குப் போய் வருகிறோம். இப்போது எங்கள் இருவரின் மாத பட்ஜெட்டிலும் டீசல் செலவு பாதியாகிவிட்டது. மாதம் ரூ.3,000 மிச்சம். ஒரே கம்பெனி, ஒரே நேரம் என்கிறபோது ஒன்றாகப் பயணம் செய்வது குறித்து நீங்களும் யோசிக்கலாமே!     
                    
 -சந்திரன், சென்னை

என் பணம் என் அனுபவம்!

நம்பரைச் சொல்லாதீர்கள்!

மீபத்தில் எனக்கு  மிகப் பெரிய பொதுத்துறை வங்கியிலிருந்து பேசுவதாக ஒருவர் பேசினார். ‘உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டது. அதைச் சரிசெய்தால்தான் நீங்கள் அந்த கார்டைப் பயன்படுத்த முடியும். அந்த கார்டில் உள்ள 16 இலக்க நம்பரைச் சொல்லுங்கள்’ என்றார். அந்தக் குறிப்பிட்ட வங்கியின் கார்டு என்னிடம் இல்லை. ஆனாலும், அந்தப் பித்தலாட்டக்காரரை கொஞ்சம் எரிச்சல் மூட்டுவோம் என்று நினைத்து, ஏதோ ஒரு 16 நம்பரைச் சொன்னேன். அவருக்குச் சந்தேகம் வந்துவிட்டதுபோல. மறுபடியும் நம்பரைத் சொல்லச் சொன்னார். நான் வெறொரு 16 இலக்க எண்ணைச் சொன்னேன். உடனே எதிராளிக்குக் கோபம் வந்து என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். பிராடு செய்கிறவருக்கு நாம் உஷாராக இருக்கிறோம் என்பதைவிட, அவரைக் கலாய்த்ததைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிதி தொடர்பான விவரங்களை யாரிடமும் தரக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
                                
-கேசவன், விழுப்புரம்

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு