Published:Updated:

லண்டனில் வீதிகளில் மாறுவேட நிரவ் மோடி..! என்னங்க சார் நடக்குது?

லண்டனில் வீதிகளில் மாறுவேட நிரவ் மோடி..! என்னங்க சார் நடக்குது?
லண்டனில் வீதிகளில் மாறுவேட நிரவ் மோடி..! என்னங்க சார் நடக்குது?

லண்டனில் வீதிகளில் மாறுவேட நிரவ் மோடி..! என்னங்க சார் நடக்குது?

ஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு, நாட்டைவிட்டுத் தப்பியோடிய நிரவ் மோடி, லண்டனில் வைர வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு உதவுவது யார் என்பது குறித்த விசாரணையை இந்திய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

இந்தியாவைச் சோ்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியிடம்  சட்டவிரோத பரிவர்த்தனை மூலம்13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பிச் சென்றாா். இன்னும் அவா் நாடு திரும்பவில்லை. இதுதொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவுசெய்தது. அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள நிரவ் மோடி, தன் குடும்பத்துடன் சுவிட்சர்லாந்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. அவரது மனைவி அமியும், நிரவ் மோடியின் தொழில் பங்குதாரரும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெஹல் சோஸ்கியும் வெளிநாடு சென்றுள்ளனர். இவர்களில் அமி அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். மோடியின் சகோதரர் நிஷால் பெல்ஜியம் நாட்டுக் குடியுரிமை பெற்றவர்.

இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்த நிலையில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டைப் பிறப்பித்திருந்தது. இதையடுத்து, நிரவ் மோடி  உள்ளிட்டவர்களைக் கண்டுபிடிக்க இன்டர்போலின் உதவியை சி.பி.ஐ நாடியது. அதைத் தொடர்ந்து கடந்த வருடம், இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக `ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிட்டது.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சோ்ந்த `தி டெலிகிராப்’ நாளிதழ், இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில், லண்டனில் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் நிரவ் மோடி, முழுக்க முழுக்க தனது தோற்றத்தை மாற்றியுள்ளாா். முரட்டு மீசை, தாடி என்று தன் வெளி அடையாளத்தை மாற்றிக்கொண்டு சிரித்த முகத்துடன் வீடியோவில் பேசுகிறாா். செய்தியாளரின் பல கேள்விகளுக்கு `நோ கமென்ட்’ என்றே பதிலளித்தார்.

மோடி, லண்டனில் வெஸ்ட் எண்ட் பகுதியில் உள்ள ஆடம்பரக் குடியிருப்பு ஒன்றில் வசிப்பதாகவும், ஸோகோ என்ற இடத்தில் அலுவலகம் அமைத்து வைர வியாபாரம் செய்து வருவதாகவும், அலுவலகத்துக்கும் அவர் தங்கியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கும் சில அடி தூரம்தான் உள்ளது என்றும் அந்தப் பத்திாிகை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் தேடப்படும் நபர், இன்டர்போல் போலீஸாரால் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நபர், இங்கிலாந்தில் சுதந்திரமாக வலம்வருவது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

தன் மீதான சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக நிரவ் மோடி, லண்டனில் தன் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதாகவும், மிகக் குறுகிய காலத்தில் அவர் 3 முறை வீடு மாறியிருப்பதும் தெரிய வந்துள்ளது. 

`லண்டனின் மத்தியப் பகுதியிலிருந்து மான்செஸ்டர் பகுதிக்கு மாறிய மோடி, அதன் பின்னர் தற்போது தங்கி உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறியுள்ளார். அவர் லண்டனைச் சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளார். லண்டனில் மோடி வைர வியாபாரம் செய்வதற்கு அந்த நிறுவனம்தான் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிறுவனம் பணக்காரர்களுக்கு ஆலோசனை கூறுவதில் நிபுணத்துவம் பெற்றது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோடிக்கு இந்தியாவிலிருந்து யாராவது உதவுகிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது ’ என சி.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த பணத்தில் 934 கோடி ரூபாயை தனது சொந்த வங்கிக் கணக்கிலும், மனைவி மற்றும் தந்தையின் பெயரிலான வங்கிக் கணக்கிலும் மடை மாற்றிவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, 560 கோடி ரூபாய் மோடியின் சொந்த வங்கிக் கணக்கிலும், 200 கோடி ரூபாய் அவரது மனைவியின் வங்கிக் கணக்கிலும், 174 கோடி ரூபாய் அவரின் தந்தை தீபக் மோடியின் வங்கிக் கணக்கிலும் போட்டு வைத்திருந்ததாக, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நிரவ் மோடி லண்டனில் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்நாட்டு உள்துறைச் செயலாளரை இந்திய அமலாக்கத்துறை தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது. அப்போது, உள்துறைச் செயலாளர் சஜித் ஜாவித், மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்ததாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. 

விரைவில் அமலாக்கத்துறை மற்று சி.பி.ஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று நிரவ் மோடி மற்றும் இதே போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி லண்டனில் தங்கியுள்ள விஜய் மல்லையா ஆகிய இருவரையும், இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் எனத் தெரிகிறது. 

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான உத்தரவை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி பிறப்பித்தது. இருப்பினும், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அவருக்கு 14 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடிக்கு எதிரான நடவடிக்கையிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

அடுத்த கட்டுரைக்கு