வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்கிறவர்கள் பணக்காரர்கள் அல்ல. சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு நிதித் தட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவர்கள்தான் உண்மையாகவே பணக்காரர்கள். நிதித் தட்டுப்பாடு இல்லாமல் யாரால் வாழமுடியும் என்றால், நிதி சார்ந்த திட்டமிடலைச் சரியாகச் செய்கிறவர்கள் மட்டுமே எனச் சொல்ல முடியும். நிதித் திட்டமிடலின் ஐந்து நிதிச் சக்கரங்களை பழக்கமாக்கிக்கொண்டவர்கள் எல்லோருமே பணக்காரர்கள்தான். இவர்களுக்கு நிதித் தட்டுப்பாடு எப்போதும் வருவதே இல்லை. நீங்களும் பழகிக்கொள்ள வேண்டிய அந்த பஞ்ச நிதிச் சக்கரங்கள் என்னென்ன எனப் பார்ப்போம்.

பட்ஜெட் திட்டமிடல் (Budget Planning)
நிதிச் சிக்கலில் பெரும்பாலோர் மாட்டிக்கொள்வது இந்தச் சக்கரத்தில்தான். தினசரி திட்டமிடலைச் (வரவு-செலவு) சரியாகப் பராமரித்தாலே, பல சிக்கல்களை நம்மால் தவிர்க்க முடியும். ஒரு நிறுவனத்தின் வரவு செலவுகளைச் சரியான நேரத்தில் நிர்வகித்தால், அந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும் தெளிவாக இருக்கும். அதுபோல, தனிநபர் மற்றும் குடும்பத்திற்கான வரவு செலவுகளைத் தினமும் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு ஒரு சின்ன குறிப்பேட்டினை வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் டிஜிட்டல் புலி என்றால், வரவு செலவுகளைக் குறித்து வைத்துக் கொள்ளும் செயலியை உங்கள் போனில் பதிவிறக்குங்கள். உங்களின் தினசரி வரவு மற்றும் செலவு விவரங்களை அதில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். முதலில், கொஞ்சம் சோம்பலாக இருந்தாலும் தொடர்ந்து செய்யுங்கள். அது உங்கள் வரவு செலவு வரலாற்றையே சொல்லும். நீங்கள் எதற்கெல்லாம் அதிகமாகச் செலவிடுகிறீர்கள், எங்கிருந்து உங்களுக்கான வரவு வருகிறது என்பதை இந்த நிதிச் சக்கரம் சொல்வதுடன், நீங்கள் செலவாளியா அல்லது சிக்கனவாதியா என்பதையும் துல்லியமாக எடுத்துச் சொல்லும்.
நிதி இலக்கிற்கான திட்டமிடல் (Financial Goal Planning)
நிதி இலக்குகள் என்பது தொழில் செய்யும் நிறுவனத்திற்கு மட்டுமல்ல. தனிநபருக்கும், குடும்பத்திற்கும் நிதி இலக்குகள் அவசியமானவை. நமது சேமிப்புப் பழக்கம் தொன்றுதொட்டு இன்றுவரை நீடிப்பதற்குக் காரணம், நம்முடைய சிறு தேவைகளும் விருப்பங்களும்தான். பெண்கள் தங்கள் குடும்பத் தேவைக்கான தொகையைச் சிறுகச் சிறுகச் சேமித்து அதனைப் பூர்த்திசெய்வதும் ஒரு நிதி இலக்குத்தான்.

நிதி இலக்குகளை வெறும் கனவாகக் கண்டால் மட்டுமே பூர்த்தி ஆகாது. மாறாக, நிதி இலக்குகளைத் துல்லியமாகக் கணக்கிடுவது அவசியமாகும். உங்களுக்கான நிதி இலக்கிற்கு ஒரு தலைப்பைக் கொடுங்கள். உதாரணமாக, சிம்லா சுற்றுலா, குமாரின் மேற்படிப்பு, செல்வியின் திருமணச்செலவு, எங்கள் ஓய்வுக்காலம் என்பதுபோல. பிறகு இலக்கை அடையத் தேவையான தொகையை இன்றைய மதிப்பில் கணக்கிடுங்கள். இலக்கை அடையும் காலம் மற்றும் இலக்கிற்கான தொகையை எப்படி மாதந்தோறும் ஒதுக்குவது என்பதும் அவசியம்.
முதலீட்டுத் திட்டமிடல் (Investment Planning)
நிதி இலக்கிற்கான அனைத்து விவரங்களையும் தொகுத்துக் கொண்டு, நாம் அடையும் காலத்தில் அதன் மதிப்பு எவ்வளவு (Maturity Value) என்பதைத் தெளிவாகக் கணக்கிட வேண்டும். இவற்றில்தான் நம்மில் பலர் கோட்டைவிடுகின்றனர். இங்கு மனக் கணக்கெல்லாம் வேலை செய்யாது. நிதி இலக்கை நிறைவேற்று வதற்கான சரியான தொகைதான் நமக்கு முக்கியம்.
பணவீக்கம், எதிர்பார்க்கும் வட்டி வருவாய் மற்றும் முதலீட்டு ரிஸ்க் போன்ற காரணிகளைக் கணக்கிடவேண்டும். நாம் ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காகத் தொடர் முதலீட்டை மேற்கொண்டு வந்திருப்போம். இடைப்பட்ட காலத்தில் முதலீட்டின் மீதான வருவாய் குறையலாம் அல்லது பணவீக்க விகிதங்கள் மாறுபட்டி ருக்கலாம். இதனை முதலீடு செய்யும்போது கருத்தில்கொள்ள வேண்டும்.
குறுகிய கால நிதி இலக்கிற்கு ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டுச் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அதுபோல, முதலீட்டுப் பாதுகாப்பு எனச் சொல்லி, குறைவான வட்டி வருமானத்தைக்கொண்ட முதலீட்டு வாய்ப்பை நீண்டகால இலக்கிற்குப் பயன்படுத்துவதும் சிறந்ததல்ல. நீண்ட கால நிதி இலக்குகளைக் கொண்டிருப்பவர்கள் அஸெட் அலோகேஷன் என்று சொல்லப்படும் முதலீட்டுப் பரவலாக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நம்மில் சிலர் குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று நினைத்து பொன்சி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இது நம் வருமானம் அனைத்தையும் இழக்கச் செய்துவிடும்.
ஓய்வுக்காலத் திட்டமிடல் (Retirement Planning)
உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பைவிட, உங்களின் ஓய்வுக்காலம் முக்கியத்துவமானது. நீங்கள் எந்தவொரு நிதி இலக்கு களைக் கொண்டிருக்கா விட்டாலும் பரவாயில்லை; ஓய்வுக்காலம் என்பது மிக முக்கியம் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். காரணம், ஓய்வுக் காலம் என்பது திட்டமிடா விட்டாலும் அது உங்களை வந்துசேரும். குடும்பச் செலவுகளைத் தற்காலிக மாகச் சரிசெய்துகொள்ளலாம். செலவு செய்து குழந்தைகளைப் படிக்க வைக்காவிட்டாலும், இளம்தலைமுறை தானாகக் கற்றுக்கொண்டு, முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்று ஏராளம். ஆனால், உங்கள் ஓய்வுக்காலத்தை நீங்கள்தான் திட்டமிட வேண்டும். வயதான காலத்தில் பிள்ளைகளின் நிதியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல.
மற்ற நிதி இலக்குகளைத் தீர்மானிப்பது போன்று, ஓய்வுக்காலத்திற்கான நிதியைத் துல்லியமாகக் கணக்கிடுவது அவசியமானது. வயதான காலத்தில் எதிர்பாராத மருத்துவச் செலவுகளும் போக்குவரத்து செலவுகளும் அதிகம் வரலாம். எனக்குப் பூர்வீகச் சொத்துகள் உள்ளன; அவற்றைக் கொண்டு ஓய்வுக்காலத்தைக் கழிப்பேன் என்பதும் சரியான திட்டமிடல் அல்ல. நடைமுறைச் சிக்கல் இல்லாமல், எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல், ஓய்வுக் காலத்திற்கான திட்டமிடல் இருக்கவேண்டும். இதுதான் உங்களின் பிரம்மாஸ்திர சக்கரம்.
எஸ்டேட் திட்டமிடல் (Estate Planning)
உங்களுக்கு ரியல் எஸ்டேட் பற்றி தெரிகிறதோ, இல்லையோ, எஸ்டேட் திட்டமிடல் பற்றி கண்டிப்பாகத் தெரிந்திருக்கவேண்டும். நம் செல்வத்தை நமக்குப்பிறகு யார் அனுபவிக்க வேண்டும் எனச் சரியாக அடையாளம் காட்ட வேண்டும். நிதி சார்ந்த சொத்துகளில் வாரிசுகளை (Nomination, Heirs) நியமிப்பது அவசியமாகும்.

நம்மில் சிலர், குடும்ப நபர்களுக்குத் தெரியாமல் காப்பீடு வாங்குவதும் முதலீடுகளைச் செய்வதும் உண்டு. எதிர்பாராத சூழ்நிலையில், அது யாருக்கும் பயன்படாமல் போவதுண்டு. இதனைத் தவிர்க்க நிதி சார்ந்த விஷயத்தில் குடும்ப நபர்களுடன் இணைந்து முடிவெடுப்பது சிறந்தது. இன்று நீதிமன்றத்தில் பெரும்பாலான குடும்ப வழக்குகள் நிலம் மற்றும் வாரிசுகளின் சொத்து சார்ந்ததாகவே உள்ளன. நாம் உயிருடன் இருக்கும்போதே நமது காலத்திற்குப்பிறகு நம் சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும் எனத் திட்டமிடுவது (உயில் எழுதி வைத்தல்) நல்லது.
நாம் மற்றொருவரிடமிருந்து ஒரு சொத்தினை பெறும்போது அல்லது குடும்பத்திலுள்ள நபருக்குச் சொத்து மாறும்போது, தகவல்கள் சரியாக மாற்றப்பட்டுவிட்டனவா என அறிவது அவசியம். வருவாய் அலுவலகத்தில் தகவல்கள் அனைத்தும் சரியாக மாற்றப்பட்டுள்ளனவா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த பஞ்ச நிதிச் சக்கரங்களை உங்கள் விரல்நுனியில் சுழற்ற நீங்கள் தயாராகிவிட்டால் நீங்களும் பணக்காரர்தான்!