Published:Updated:

முதல் மாதச் சம்பளம்... எப்படிச் சேமிப்பது, எப்படிச் செலவழிப்பது?!

முதல் மாதச்சம்பளம் என்பது ரயில் வண்டியின் எஞ்சின் போன்றது. தொடர்ச்சியாகச் செய்யவேண்டிய நிதிச்சேமிப்பின் தொடக்கப் புள்ளி இதுவேயாகும். முதலில் உங்கள் குடும்பத்தின் நிதிநிலை என்னவென்று கணக்கிடுங்கள். உங்களுடைய கல்விக்காக ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தால் அந்தக் கடனை மாதத்தவணையில் அடைப்பதற்காகக் கணக்கிட்டு அதற்கான தொகையை முதலில் ஒதுக்குங்கள்.

முதல் மாதச் சம்பளம்... எப்படிச் சேமிப்பது, எப்படிச் செலவழிப்பது?!
முதல் மாதச் சம்பளம்... எப்படிச் சேமிப்பது, எப்படிச் செலவழிப்பது?!

``எனக்கு செமஸ்டர் ஃபீஸ் கட்டணும்பா!", ``அப்பா, எனக்கு புது செருப்பு வாங்கணும்!" - அப்பாவிடம் வாங்கியே செலவழித்து வளர்ந்து வந்தவர்களுக்கு, வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பணியில் சேர்ந்து வாங்கும் முதல் மாதச் சம்பளம் என்பது, காதலியிடமிருந்து பெறும் முதல் பரிசுபோல பெருமிதம் வாய்ந்தது. முந்தைய மாதம் வரை அப்பாவையோ, அம்மாவையோ சார்ந்து வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுவது என்பது, கூட்டுப்புழுவிலிருந்து வெளியேறும் வண்ணத்துப்பூச்சியின் சந்தோஷத்துக்கு ஈடானது. கூடுடைத்து வெளியேறிய வண்ணத்துப்பூச்சி, எங்கு சென்றிருக்கும்? எந்த இலக்கை நோக்கிச் சென்றிருக்கும்? நாம் அறிவதில்லை. 

முதல் மாதச் சம்பளம் பெறுவோரிடம் `என்ன இலக்கு?' எனக் கேட்டால், `அதை இன்னும் தீர்மானிக்கவில்லை' என்றே பதில் வரும். ஆம், பெரும்பாலான இளைஞர்களிடம் இன்றைய நாளில் இருக்கும் பிரச்னை இதுதான். கடும் உழைப்பு, உழைப்புக்கேற்ற சம்பளம் இருந்தாலும் மாதக் கடைசி நெருக்கடியை ஒவ்வொரு மாதமும் எதிர்கொள்வதே வாடிக்கையாக இருக்கும். சம்பாதிக்கத் தெரிந்த நம்மால் அதை முறையாகச் செலவழிக்க, சிக்கனப்படுத்த, முறையாக முதலீடு செய்யத் தெரிவதில்லை. 

அப்பாவிடம் கணக்காக வாங்கிச் செலவழித்த காலம் வரை, புதுத்துணி, செருப்பு, செல்பேசி என எதை வாங்குவதானாலும் பெற்றோரின் பட்ஜெட் கணக்குக்குள் இருக்கும். அது பெரும்பாலும் பிள்ளைகளின் ஆசையோடு ஒப்பிடுகையில் சிறிய அளவாகவே இருக்கும். எனவே, முதல் மாதச் சம்பளம் கைக்கு வந்ததுமே வாங்குவதற்கான கனவுப்பட்டியல் என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். அந்தப் பட்டியலை  சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு, முதல் மாதச் சம்பளத்தை எப்படித் திட்டமிட்டுப் பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

முதல் மாதச் சம்பளம் என்பது, ரயில் வண்டியின் இன்ஜின் போன்றது. தொடர்ச்சியாகச் செய்யவேண்டிய நிதிச் சேமிப்பின் தொடக்கப்புள்ளி இதுவே. முதலில் உங்கள் குடும்பத்தின் நிதிநிலை என்னவெனக் கணக்கிடுங்கள். உங்களுடைய கல்விக்காக ஏதேனும் கடன் வாங்கியிருந்தால் அந்தக் கடனை மாதத் தவணையில் அடைப்பதற்காகக் கணக்கிட்டு அதற்கான தொகையை முதலில் ஒதுக்குங்கள். உங்களுடைய முதல் மாதச் சம்பளத்தில் பெற்றோருக்கு இனிப்போ துணிமணியோ எடுத்துக் கொடுப்பதைவிட இதுவே சிறப்பான பரிசு. 

அடுத்ததாக, திடீர்ச் செலவுகளை எதிர்கொள்வதற்கான சேமிப்பு, மிகவும் அவசியம். அந்தந்த மாதத்தில் மருத்துவச் செலவு, சுக-துக்க நிகழ்வுகளுக்கான செலவு, திடீர் பயணச் செலவு எனப் பல்வேறு செலவுகள் பட்ஜெட்டை மீறி வரக்கூடும். இதற்காக பணம் ஒதுக்கவில்லையே என நினைத்து, வேறொரு சேமிப்புக்கான பணத்தை இதில் போட்டு உருட்டக்கூடிய வேலைதான் பெரும்பாலான வீடுகளில் நடக்கிறது. அத்தகைய தவறுகள் நேராதிருக்கத்தான் திடீர்ச் செலவுக்கான சேமிப்பு என்பது. இதை உடனுக்குடன் எடுக்க முடிந்த முதலீட்டுத் திட்டத்தில் சேமிக்கலாம்.

இன்ஷூரன்ஸ் என்பது வருமான வரிச் சேமிப்புக்கான திட்டம் என்றும், அலுவலகத்தில் அவர்களாக நமக்கு ஏற்பாடு செய்துதருவார்கள் என்றும் பரவலான கருத்து, மாதச் சம்பளக்காரர்கள் மத்தியில் இருக்கிறது. உண்மை அதுவல்ல. இன்ஷூரன்ஸ் என்பது, நமது மருத்துவத் தேவைக்கான மருத்துவக் காப்பீடு மற்றும் நமக்கான ஆயுள் காப்பீடு என இருவிதமான திட்டங்களும் இருக்கவேண்டியது அடிப்படைத்தேவை. இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் கட்டுவதை இளம்வயதிலேயே தொடங்கினால் ப்ரீமியம் தொகை குறைவாக இருக்கும். முதல் மாதச் சம்பளத்திலேயே இன்ஷூரன்ஸைத் தொடங்குவது புத்திசாலித்தனமான முடிவு.

அடுத்ததாக, முதலீடு. நமது வருமானத்தைச் சேமித்து மட்டுமே காலம்காலமாக நாம் பின்பற்றும் பழக்கம். முன்பெல்லாம் முதலீட்டுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் தற்போது, வங்கி வைப்புத்தொகை, தங்கம், ரியல் எஸ்டேட், தங்கப்பத்திரங்கள், மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை எனப் பலவிதமான முதலீட்டு வாய்ப்புகள் பெருகியுள்ளன. இவற்றில் நமக்குத் தோதான, நம்பிக்கையான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, முதல் மாதச் சம்பளத்திலிருந்தே முதலீட்டைத் தொடங்குவது அவசியம். எந்தவிதமான முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது, எவ்வளவு முதலீடு செய்வது என்ற குழப்பமிருந்தால் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையை நாடலாம். 

எத்தகைய நிதிச் சிக்கலையும் சமாளிப்பதற்கும், எதிர்காலத் தேவைக்காகவும் நிதித் திட்டமிடலை வகுத்த பிறகு, உங்களுடைய ஆசைக்கான, கேளிக்கைக்கான செலவுகளுக்குத் திட்டமிடுங்கள். கொண்டாட்டமான செலவாக இருந்தாலும் அதை அதிகபட்ச இலக்கு வைத்துச் செலவழிப்பதுதான் மாதக் கடைசித் திண்டாட்டத்தில் தள்ளாமல் வைத்திருக்க உதவும். அது விலை உயர்ந்த பிராண்டட் உடையாகவோ, செல்போனாகவோ, எதுவாகவோ இருக்கட்டும். உங்கள் வருமானத்துக்கேற்ப செலவிடுங்கள். தேவைப்பட்டால் மட்டுமே தவணைமுறைத் திட்டத்தைப் பயன்படுத்துங்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தவணைகளைக் கட்டுவதைத் தவிருங்கள். ஏதேனும் வேலையிழப்பு, சம்பளப் பட்டுவாடா தாமதம் போன்ற பிரச்னைகளால் பெரும்பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.

இனி உங்களுக்கு யாருடைய யோசனையும் அறிவுரையும் தேவைப்படாது. உங்களுடைய மாதச் சம்பளத்தைத் திறமையாகப் பயன்படுத்தும்வகையில் நீங்களே உருவாகியிருப்பீர்கள்.