Published:Updated:

நிலையில்லா வருமானம்... வீடு - அலுவலக வேறுபாடு... ஃப்ரீலான்ஸருக்கான சிக்கல்கள், தீர்வுகள்!

வீட்டிலேயே அமர்ந்து பணி செய்யும்போது சோம்பேறித்தனத்தால் வேலையில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த காலத்திற்குள் முடிக்கமுடியாமலும் போகலாம். நாம் செய்யும் வேலையின்மீது தீவிர ஈடுபாடு இருந்தால் மட்டுமே எவ்விதக் கண்காணிப்பும் இல்லாதபோதும் அதை நன்கு செய்துமுடிக்க இயலும்.

நிலையில்லா வருமானம்... வீடு - அலுவலக வேறுபாடு... ஃப்ரீலான்ஸருக்கான சிக்கல்கள், தீர்வுகள்!
நிலையில்லா வருமானம்... வீடு - அலுவலக வேறுபாடு... ஃப்ரீலான்ஸருக்கான சிக்கல்கள், தீர்வுகள்!

ன்லைன் மூலமாக உலகமே சுருங்கியுள்ள சூழலில், உள்நாட்டு வாடிக்கையாளர்கள் என்றில்லாமல் உலகளாவிய அளவிலும் வாடிக்கையாளர்களை, பணி ஆர்டர்களைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகம் என்ற சட்டகத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளாமல், தனியாக ஓர் அலுவலகத்தையும் நிர்வகிக்காமல், ஒன் மேன் ஆர்மியாகச் செயல்படும் சுதந்திரப் பறவைகளே ஃப்ரீலான்ஸர்கள். இவர்கள் மீது நமக்குப் பொறாமை ஏற்படலாம். ஆனால், இந்தச் சுதந்திரப் பறவைகளுக்கு இந்தச் சுதந்திரமே எதிரியாகவும் அமைய வாய்ப்புள்ளது. பலரும் ஃப்ரீலான்ஸ் தொழில்முனைவோராக முயன்று ஆர்வத்தோடு களமிறங்கி, ஓரிரு வருடங்களில் `போதும்டா இந்தப் பொழப்பு!' என நொந்துபோய் மீண்டும் அலுவலகத்தில் ஒரு பணியாளராக தங்களது வாழ்க்கையைத் தொடர்வதுண்டு. ஃப்ரீலான்ஸராக தொழில்செய்வதில் அப்படி என்ன சிக்கல்கள்? தொடர்ந்து பார்ப்போம்.

நிலையில்லாத வருமானம்

ஃப்ரீலான்ஸர்களைப் பெரிதும் பாதிக்கும் காரணியாக இருப்பது நிரந்தரமில்லாத வருமானம். மாதச் சம்பளதாரராக இருந்த வரையில் குறிப்பிட்ட தேதிக்கு மாத வருமானம் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டிருக்கும். ஆனால், ஃப்ரீலான்ஸர்களைப் பொறுத்தவரை நாம் முடித்துக் கொடுக்கும் பணிக்கு வாடிக்கையாளர்கள் பணம் தந்தால் மட்டுமே வருமானம். சிலநேரம் மிகப்பெரிய புராஜெக்ட் நம் கைவசம் கிடைத்தால், பெரிய வருமானம் கிடைக்கும் வாய்ப்பு வரும். நாம் அலுவலகத்தில் வாங்கும் சம்பளத்தைவிட பலமடங்கு அதிகம் பெற முடியும். அதேவேளை, ஒவ்வொரு தொழிலுக்கும் ஆர்டர் குறைவாகவும் அதிகமாகவும் கிடைக்கும் ஒரு சீஸன் இருக்கும். அந்த சீஸனுக்கேற்ப ஆர்டர் குறைவாகக் கிடைக்கும் காலகட்டத்தில் வருமானம் பாதிக்கப்படும். அதற்கேற்ப நமது நிதி நிர்வாகம் இருந்தால் மட்டுமே அதைக் கடந்துவர இயலும். உங்களுடைய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் வரை இத்தகைய நிதிச்சிக்கலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதுவரை திட்டமிட்டுச் செலவழிக்க, சேமிக்கக் கற்றுக்கொள்வது அவசியம்.

இலக்குகளைத் தீர்மானித்தல்

அலுவலகங்களைப் பொறுத்தவரை, இலக்குகளைத் தீர்மானிக்கவும் விரட்டவும் ஒரு நிர்வாகக் குழு இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால், ஃப்ரீலான்ஸர் பணியில் வாடிக்கையாளர் டெட்லைன் கொடுப்பதோடு சரி. அதற்கேற்ப ஒவ்வொரு கட்டப் பணியையும் எந்தெந்தத் தேதிக்குள் முடிப்பது என இலக்குகளை வரையறுப்பதும், செயல்படுத்துவதும் உங்களது வேலையே. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தேதிக்கும் முன்னதாகவே இலக்கை நிர்ணயித்துக்கொள்வது நல்லது. அதன் பிறகு, பிழைதிருத்தங்களுக்காக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். அதையும் முடித்துக் குறித்த நேரத்தில் ஒப்படைப்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

புறக்கணிப்பை எதிர்கொள்வது அவசியம்

அலுவலகங்களைப் பொறுத்தவரை அனைத்து வேலைகளும் முறைப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படும். வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் ஆர்டரை முடித்துக் கொடுக்கும் வரை ஒவ்வொரு படிநிலையும் ஏற்கெனவே முறைப்படுத்தப்பட்டு குழுவாகச் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு படிநிலையும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, தவறு நேராதவாறு பார்த்துக்கொள்ளப்படும். ஆனால், ஃப்ரீலான்ஸராக ஒரு ஆர்டரை எடுத்துச் செய்யும்போது வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவது மிகவும் கடினம். அவர்களின் நம்பிக்கையைப் பெறும்வரை நிறைய திருத்தங்களைச் செய்துதரவேண்டியிருக்கும். சில நேரம் திருப்தியில்லாமல் அந்த ஆர்டரே கைவிட்டுப்போகக்கூடும். அத்தகைய சூழலிலும் மனம் தளராமல் அடுத்த பணியில் செம்மையாகச் செயல்படும் உறுதி வேண்டும். நமக்கு பணிசெய்ய மட்டுமல்லாமல், வாடிக்கையாளரிடம் பேசும் திறமையும் வேண்டும்.

பணியில் தீவிர ஈடுபாடு

ஃப்ரீலான்ஸர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே வைத்து வேலைசெய்யும்போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. யாரேனும் உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வந்தால் அதன்மூலம் நம்முடைய பணியில் பாதிப்பு ஏற்படும். இன்னொரு முக்கியமான விஷயம், சோம்பேறித்தனம். வீட்டிலேயே அமர்ந்து பணி செய்யும்போது சோம்பேறித்தனத்தால் வேலையில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாமலும் போகலாம். நாம் செய்யும் வேலையின்மீது தீவிர ஈடுபாடு இருந்தால் மட்டுமே எந்தவித கண்காணிப்பும் இல்லாதபோதும் அதை நன்கு செய்து முடிக்க இயலும்.

வீடு-அலுவலகம் வேறுபாடு

ஏற்கெனவே சொன்னதுபோல, வீட்டுக்கும் அலுவலகத்துக்குமான வேறுபாட்டை உணர்ந்து பணிசெய்வது அவசியம். ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றுவோருக்கு வீடு என்பது ஒரு விர்ச்சுவல் அலுவலகம் போன்றதே. கூடுமானவரை வீட்டின் ஓர் அறையை அலுவலகமாகவே பாவித்து அதற்கேற்ப உள்கட்டமைப்பை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த அறையினுள் வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தாமல் தனித்த அறையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மின்சாரம், ஆன்லைன்

எந்தப் பணிக்கும் அடிப்படை, மின்சாரம் மற்றும் ஆன்லைன் வசதி. நமது வீடு அமைந்துள்ள பகுதியில் இந்த இரண்டும் சிக்கலில்லாததாக இருக்க வேண்டும். மின்வெட்டுப் பிரச்னைகள் அதிகமிருக்கும் என்றால், இன்வெர்ட்டர் போன்ற மாற்று ஏற்பாடுகள் அவசியம். இணையத் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கோப்புகளை இணையத்தின் வழியாகப் பரிமாறுவது எளிது. பணி செய்யும் அறைக்குள் வெளி உலகின் சத்தங்கள் அதிகம் கேட்காதபடியிலான உள்கட்டமைப்பு அவசியம். அப்படியிருந்தால்தான் கவனச்சிதறல்கள் அதிகம் ஏற்படாது. உங்களுடைய வீடு, போக்குவரத்து வசதியுள்ள நகரின் முக்கியப் பகுதியாக இருந்தால், உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு உங்களை நேரில் சந்தித்து பணி கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

திறன் மேம்பாடு

அலுவலகத்தில் பணியாற்றும்போது அப்டேட்டான விஷயங்கள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். மேலும், அவ்வப்போது பயிற்சி வகுப்புகளையும் நடத்தி நமது திறனை மேம்படுத்துவார்கள். ஆனால், ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றும்போது நாம்தான் தேடித் தேடிக் கற்றுக்கொண்டு நம் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது அறிவுத்திறனை வளர்ப்பதோடு நாம் பயன்படுத்தும் மென்பொருள்களையும் அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டே வர வேண்டும். அப்போதுதான் நம்மால் க்ரியேட்டிவ்வாகச் செயல்பட முடியும்.

`எனக்குத் தொழில் தெரியும், ஓரளவு வாடிக்கையாளர்களும் கைவசம் இருக்கிறார்கள்' என்ற நம்பிக்கையில் ஃப்ரீலான்ஸராக முயற்சி செய்பவர்கள், மேலே கூறியவற்றையும் கவனத்தில்கொண்டால் வெற்றிகரமாகச் செயல்பட முடியும். அனைத்துக்கும் மேலாக, தன்னம்பிக்கையே உங்களுடைய மூலதனம் என்பதை மனதில்கொள்ளுங்கள். அப்படியிருந்தால் எந்தப் பின்னடைவும் உங்கள் முயற்சியை அசைத்துப்பார்க்க முடியாது.