Published:Updated:

கடன், பட்ஜெட், முதலீடு... கணவன், மனைவி சேர்ந்தே திட்டமிட வேண்டும்... ஏன்?

கடன், பட்ஜெட், முதலீடு... கணவன், மனைவி சேர்ந்தே திட்டமிட வேண்டும்... ஏன்?
கடன், பட்ஜெட், முதலீடு... கணவன், மனைவி சேர்ந்தே திட்டமிட வேண்டும்... ஏன்?

பட்ஜெட் போடுவது பெண்களுக்கு எளிதாக வரக்கூடிய ஒன்று. ஒவ்வொன்றையும் அவர்கள் யோசித்துச் செய்வார்கள். எனவே, அந்த வேலையை அவர்களிடம் தந்துவிட்டு, பின்பு அதை இருவரும் கலந்தாலோசிக்கலாம்.  அதேமாதிரி முதலீடுகள் பற்றி...

ன்றைய பொருளாதாரச் சூழல், கணவன் - மனைவி இருவரையும் வேலைக்குச் செல்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. பணத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள அல்லது ஓரளவுக்குத் தாக்குப்பிடிக்க இருவரின் சம்பளமும் இன்று முக்கியம். ஆனால், திட்டமிடல் என வரும்போது மட்டும் ஆண் தனித்துச் செயல்படுகிறான். இது பண விஷயத்தில் தவறான அணுகுமுறை, வீட்டு பட்ஜெட் போடுவதிலிருந்து முதலீடு தொடர்பான முடிவுகளை எடுப்பது வரை கஷ்ட நஷ்டங்களில், சுக துக்கங்களில் சரிபாதியாகத் தன் மனைவியையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். அப்போதுதான், குடும்பத்தின் பணக்கஷ்டங்கள், விரைவில் குறையும். கடன் பிரச்னைகள் இருக்குபட்சத்தில் அதிலிருந்து எளிதில் வெளிவர முடியும்.

பிராக்டிகலான விஷயங்கள்!

பட்ஜெட் போட்டு செலவுசெய்வது, வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்குவது, பெரிய செலவுகளை இருவரும் சேர்ந்து முடிவெடுப்பது, எந்தக் கடனை வாங்கலாம், எதைத் தவிர்க்கலாம் எனக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது, வாங்கும் கடனை ஒருவரது பெயரில் வாங்கினால் என்ன நன்மை, இருவரும் சேர்ந்து வாங்கினால் என்ன நன்மை எனப் பார்த்து முடிவெடுப்பது, முதலீட்டு முடிவுகளை இருவரும் சேர்ந்தே எடுப்பது,  யாருக்கு எந்தப் பொறுப்பு எளிதாக வருகிறதோ, அதை மனம் மகிழ்ந்து செய்வது என கணவனும் மனைவியும் சேர்ந்து செயல்பட  பிராக்டிகலான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இதைக் கடைப்பிடிக்கும்போது, குடும்பத்தின் தேவை என்ன, எது இலக்கு என்பதில் தெளிவு கிடைத்து, அதை நோக்கிப் பயணிக்க முடியும். 

வருமானம் - சேமிப்பு = செலவு!

சேமிப்பு விஷயத்தில் பெரும்பாலானோரின் செயல்பாடு இப்படி இருக்கும், `வருமானம் - செலவு = சேமிப்பு'. இதை `வருமானம் - சேமிப்பு = செலவு' என மாற்றினால், பணப்பிரச்னைகள் என்றைக்கும் வராது. முதலில் எல்லாவிதமான வங்கிக் கணக்குகளையும் ஜாயின்ட் அக்கவுன்ட்டாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒருவர்மேல் ஒருவர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்து, பொறுப்புகள் பிரிக்கப்பட்டு எது ஒருவருக்கு எளிதாக வருகிறதோ, அதை அவரிடமே விட்டுவிட வேண்டும். உதாரணமாக, பட்ஜெட் போடுவது பெண்களுக்கு எளிதாக வரக்கூடிய ஒன்று. ஒவ்வொன்றையும் அவர்கள் யோசித்துச் செய்வார்கள். எனவே, அந்த வேலையை அவர்களிடம் தந்துவிட்டு, பிறகு அதை இருவரும் கலந்தாலோசிக்கலாம். 

அதே மாதிரி முதலீடுகள் பற்றி ஆண்கள் நிறைய தெரிந்துவைத்திருப்பார்கள். அந்த முதலீட்டு யோசனைகளை இருவரும் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்கலாம். இந்த விஷயத்தில் யார் எந்தப் பொறுப்பு எடுத்துக்கொண்டாலும் இருவரும் இணைந்துதான் முடிவு எடுக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருங்கள். இல்லாவிட்டால், `எல்லாவற்றையும் நானே பார்க்க வேண்டுமா?' என்ற சலிப்பான வார்த்தைகள் எழுந்து, குடும்ப அமைதி கெடுவதற்கு அதுவே ஒரு காரணமாக அமைந்துவிடும்.

ப்ளஸ் பாயின்ட்ஸ்!

1. ஒரு பிசினஸில் இரண்டு பார்ட்னர் ஒவ்வொரு செயல்களையும் கலந்தாலோசித்து முடிவு செய்வதுபோல், எல்லா விஷயங்களிலும் மனைவியையும் கலந்து முடிவு எடுக்கலாம். ஒருவர் முடிவைவிட இருவரது முடிவு பெரும்பாலான நேரத்தில் ப்ளஸ் மற்றும் மைனஸ்களை அலசுவதால் சரியாக அமைய வாய்ப்பு அதிகம். 
2. பொறுப்பு பகிர்ந்தளிக்கப்படும்போது அவரவர் தங்களுடைய பொறுப்பைச் சரியாகவும் காலம் தவறாமலும் நிறைவேற்ற முடியும். மேலும், பொறுப்புகள் பகிரப்படுவதால் சுமைகள் குறைகின்றன. இது மன அழுத்தத்தை பெருமளவு குறைப்பதால், தரமான வாழ்வு மேம்படுகிறது.
3. மூலதனம் ஒரே இடத்தில் இருப்பதால், கண்காணிப்பது மிகவும் சுலபமாகிவிடுகிறது.
4. தனித்தனியாக வீட்டுக்கடன் வாங்குவதைவிட, இருவரது சம்பளமும் சேரும்போது நமக்கு கூடுதல் பலம் கிடைப்பதால் பெரிய வீடு அல்லது கொஞ்சம் வசதி அதிகமாகக் கிடைப்பதற்கு சாத்தியம் உருவாகிறது.

இன்று நம்முடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதற்கு மிகப்பெரிய காரணமே இருவரும் சேர்ந்து செயல்படுவதுதான். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பல மடங்கு பரந்துவிரிந்து காணப்படுவது, ஒருவரால் மட்டுமே சாத்தியமல்ல. இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இணைந்து செயல்படுவதால்தான். அதேபோல, குடும்பத்தில் செல்வம் செழிக்க வேண்டுமானால், கடன் பிரச்னைகள் தீர வேண்டுமானால் கணவனும் மனைவியும் சேர்ந்தே திட்டமிடுங்கள். அப்போதுதான் ஒருவருடைய குறைகள் மற்றவரால் நிறையாகும்.

அடுத்த கட்டுரைக்கு