Published:Updated:

அமேசான் ஆட்டம் காணும்... ஃப்ளிப்கார்ட் பீதியடையும்... ரிலையன்ஸ் கனவு சாத்தியமா?!

அமேசான் ஆட்டம் காணும்... ஃப்ளிப்கார்ட் பீதியடையும்... ரிலையன்ஸ் கனவு சாத்தியமா?!
அமேசான் ஆட்டம் காணும்... ஃப்ளிப்கார்ட் பீதியடையும்... ரிலையன்ஸ் கனவு சாத்தியமா?!

தொழிலைத் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய ஆன்லைன் சந்தையில் போட்டியாக உள்ள அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைக் காலி செய்யும் நடவடிக்கைகளை ரிலையன்ஸ் தீவிரப்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாது, ஆன்லைன் வர்த்தகத்தில் நுழையும் திட்டத்துக்கு முன்னர், விற்பனைக்காக அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட ரிலையன்ஸ் பிராண்ட் துணிகள், ஆடைகள், ஷூக்கள் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருள்களைத் திரும்ப வாங்கத் தொடங்கி விட்டது.

ன்னும் சில மாதங்களில், ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் தடம் பதிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். தொலைத்தொடர்பு சேவையில்  நுழைந்தபோது மொபைல் போன் சேவை சந்தையை ஜியோ எப்படிப் புரட்டிப் போட்டதோ, அதேபோன்ற வெற்றியை ஆன்லைன் வர்த்தகத்திலும் பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பில், களம் இறங்கத் தயாராகி வருகிறது. ஆனால், ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் போட்டி கடுமையாக உள்ள நிலையில், அதன் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு நிறைவேறும் என்பது குறித்து இத்துறை நிபுணர்கள் மாறுபாடான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். 

அமேசான் ஆட்டம் காணும்... ஃப்ளிப்கார்ட் பீதியடையும்... ரிலையன்ஸ் கனவு சாத்தியமா?!

குஜராத்தில், கடந்த ஜனவரி 18-ம் தேதி, `துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ஆர் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் நிறுவனங்கள் இணைந்து, புதிதாக ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நுழைய இருப்பதாக அறிவித்தார். 

முதலாவதாக, குஜராத்தில் தொடங்கப்பட உள்ள இந்த ஆன்லைன் வர்த்தகம், படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், மக்கள் செய்யும் ஆர்டர்களுக்கான பொருள்களைச் சிறு வியாபாரிகளிடமிருந்து பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்திருந்தார். 

ஆடிப்போன அமேசான்... பீதியடைந்த ஃப்ளிப்கார்ட்

முகேஷ் அம்பானியின் இந்த அறிவிப்பு,  இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் கோலோச்சி வரும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், ஆர் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் நிறுவனங்கள் மூலம், இந்தியா முழுவதும் பரந்துபட்ட அளவிலான நெட்வொர்க்கை வைத்திருப்பதால், இ-காமர்ஸ் சந்தையில் நுழைவது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எளிதான ஒன்றாகவே இருப்பதோடு, போட்டியும் அதிகரிக்குமே என்ற கவலையில் ஆழ்ந்தன. 

இந்திய ஆன்லைன் சந்தையின் வர்த்தகம், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 30 பில்லியன் டாலரைத் தொட்டுள்ள நிலையில், 2028-ல் இது சுமார் 200 பில்லியன் டாலரைத் தொடும் எனச் சர்வதேச நிதி நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி மதிப்பிட்டுள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு இந்தியா, 83 கோடி ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களைக் கொண்டிருக்கும் என சிஸ்கோ சிஸ்டம்ஸ் என்ற பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள், மொபைல் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் முதல் ஆடைகள் வரை, எத்தகைய மிகப் பெரிய ஆன்லைன் சேவைக்கான சந்தை வாய்ப்பை இந்தியா கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன. 

அமேசான் ஆட்டம் காணும்... ஃப்ளிப்கார்ட் பீதியடையும்... ரிலையன்ஸ் கனவு சாத்தியமா?!

இப்போது புரியும், முகேஷ் அம்பானி ஏன் இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பினார் என்று. இந்த  நிலையில், முகேஷ் அம்பானியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும், ஆன்லைன் வர்த்தகத்திலும், அது தொடர்பான தகவல்களைத் திரட்டிக் கொடுப்பதிலும்  திறமை வாய்ந்த ஆட்களைத் தேடிப்பிடித்து பணியில் அமர்த்தும் நடவடிக்கைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.

கூடவே இணையதளம், மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் எந்த விஷயத்தை அதிகம் பார்க்கிறார்கள் அல்லது தேடுகிறார்கள் என்பதை வைத்து, சம்பந்தப்பட்டவர்களின் தேவையைக் கண்டறிந்து மார்க்கெட்டிங் டீமுக்குப் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொடுக்கும்  செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence) சேவைகளை வழங்கும் சிறிய நிறுவனங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாகத்தான் அண்மையில், சுமார் 101 மில்லியன் டாலர் மதிப்பில் 'ஹாப்டிக் இன்ஃபோடெக்'  நிறுவனத்தை வாங்கி, அதை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது. 

இப்படிப் பல வகையிலும், தொழிலைத் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய ஆன்லைன் சந்தையில் போட்டியாக உள்ள அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைக் காலி செய்யும் நடவடிக்கைகளை ரிலையன்ஸ் தீவிரப்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாது, ஆன்லைன் வர்த்தகத்தில் நுழையும் திட்டத்துக்கு முன்னர், விற்பனைக்காக அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட  ரிலையன்ஸ் பிராண்ட் துணிகள், ஆடைகள், ஷூக்கள் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருள்களைத் திரும்ப வாங்கத் தொடங்கி விட்டது. 

ஜியோ உத்தி மீண்டும் கைகொடுக்குமா? 

இந்த நிலையில், ஜியோ மொபைல் போன் சேவையில் கடைப்பிடித்த அதே விலைக் குறைப்பு, அதிரடி சலுகைகள் உள்ளிட்ட உத்தியை, தற்போது ஆன்லைன் வர்த்தகத்தைத் தொடங்கும்போதும் ரிலையன்ஸ் பின்பற்றும் எனத் தெரிகிறது. ஆனால், அதே வெற்றி ஆன்லைன் வர்த்தகத்திலும் கிடைக்குமா என்பது குறித்து இத்துறை நிபுணர்கள் மாறுபாடான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். 

அமேசான் ஆட்டம் காணும்... ஃப்ளிப்கார்ட் பீதியடையும்... ரிலையன்ஸ் கனவு சாத்தியமா?!

ரிலையன்ஸ் நிறுவனம், ஏற்கெனவே அதன் ஃபேஷன் தளமான அஜியோ.காம் ( Ajio.com) மற்றும் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்.காம் (Reliancetrends.com) போன்றவற்றின் மூலம் ஆன்லைன் சேவையில் இயங்கி வரும் நிலையில், விரைவிலேயே சில்லறை விற்பனைக்கான ஆன்லைன் சேவையையும் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ``ஜியோவில் கடைப்பிடித்த அதே உத்தி நீண்ட காலத்துக்கு சந்தையில் நிலைத்து நிற்க உதவாது. ஏனெனில், இந்திய ஆன்லைன் சந்தையில் 90 சதவிகிதத்தை ஏற்கெனவே அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் கைப்பற்றி விட்ட நிலையில், விலைக் குறைப்பு சலுகையை வைத்துக் கொண்டு நீண்ட நாள்களுக்குச் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாது" என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள். 

``டெலிகாம் சந்தையில் ஜியோ வெற்றி பெற்றதற்கு, அத்துறையில் ஏற்கெனவே ஈடுபட்டிருந்த மற்ற நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்ததால், விலைக் குறைப்பு உள்ளிட்ட சலுகைகளால் ஈர்க்கப்பட்ட வாடிக்கையாளர்கள், அந்த நிறுவனத்திடம் குவிந்தனர். ஆனால், சில்லறை விற்பனையில் அந்தக் கதை நடக்காது" என்கிறார் கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றின் நிறுவனரான ஆனந்த் ஷர்மா.  

அமேசான் ஆட்டம் காணும்... ஃப்ளிப்கார்ட் பீதியடையும்... ரிலையன்ஸ் கனவு சாத்தியமா?!

ஆனால், ``ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் ரிலையன்ஸ் வருகை நிச்சயம் சந்தையைப் புரட்டிபோடும் விதத்தில் இருக்கும். இதற்கு அதனிடம் உள்ள ஒருங்கிணைந்த அணுகுமுறை, நாடு முழுவதும் இருக்கும் அதன் பரந்துபட்ட நெட்ஒர்க், ரிலையன்ஸ் சில்லறை விற்பனைக் கடைகள், ஜியோ டிவி போன்றவற்றின் மூலம் கிடைத்த அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் கைகொடுக்கும். இதுமட்டுமல்லாது ஜியோ சேவையைப் பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்களும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும். ஏனெனில் ஜியோ வாடிக்கையாளர்களில் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இதனால், வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பது மிகவும் சுலபமாக அமைந்துவிடும்" என்றார் கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றின் சிஇஓ-வான கோதண்ட ரெட்டி. 

போட்டி எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவை கிடைத்தால் சரிதான்! 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு