Published:Updated:

துபாயில் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்... வெளிநாட்டு ஷாப்பிங் டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
துபாயில் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்... வெளிநாட்டு ஷாப்பிங் டிப்ஸ்!
துபாயில் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்... வெளிநாட்டு ஷாப்பிங் டிப்ஸ்!

"துபாயில் தங்க நகைக்கு சேதாரம் கணக்கிடப்படாததால் தங்க நகையின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. தங்க நகையை மதிப்பிடுவதற்கு சர்வதேச அளவில் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன் அடிப்படையிலும் நமக்கு லாபகரமாக அமைய வாய்ப்புள்ளது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இந்த சென்ட் லண்டன்ல வாங்கினது, இந்த ஹேண்ட் பேக் சிங்கப்பூர் டூர் போனப்ப வாங்கினது, இந்தத் தங்க வளையல் போன மாசம் துபாய் போனப்ப வாங்கினது!" என வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த பொருள்களை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் காட்டி பெருமைப்படுவதே தனி மகிழ்ச்சிதான். ஷாப்பிங் இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் நிறைவடையாது. ஆனால், இங்கு போல வெளிநாட்டில் ஷாப்பிங் செய்துவிட்டு அனைத்துப் பொருள்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிட முடியாது. சுங்கத்துறை அனுமதி, சுங்கவரி, எண்ணிக்கை, எடை எனப் பல தடைகளைக் கடந்துதான் இந்தியாவுக்குள் கொண்டுவரவே முடியும். வெளிநாட்டுச் சுற்றுலா செல்லும்போதும், ஷாப்பிங் செய்யும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்து, டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தென்மண்டல தலைவர் ஷாகுல் ஹமீத் கூறுவதாவது...

துபாயில் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்... வெளிநாட்டு ஷாப்பிங் டிப்ஸ்!

``அமெரிக்க டாலர், சர்வதேச அளவில் பிரபலமானது. எனவே, வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் பொதுவாக இந்திய ரூபாயை அமெரிக்க டாலராக மாற்றி எடுத்துச் சென்றால் பணப்பரிமாற்றம் செய்ய எளிதாக இருக்கும். கூடுமானவரை அந்தந்த நாடுகளில் புழக்கத்திலுள்ள பணமாக மாற்றிக்கொள்வது நல்லது. அப்படிச் செய்தால் தரகுக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். 

வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது அதிகபட்சமாக 10,000 அமெரிக்க டாலர் வரை எடுத்துச் செல்லலாம். அதில் 3,000 டாலரை கரன்சியாகவும், மிச்சத்தை டிராவலர்ஸ் செக், பிரீலோடட் கார்டு உள்ளிட்ட வேறு சில முறைகளில் எடுத்துச் செல்லலாம். அந்தத் தொகைக்கான ரசீது ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். வேறு நாட்டு கரன்சியெனில், 10,000 அமெரிக்க டாலருக்கு இணையான தொகையை எடுத்துச் செல்லலாம். இதற்குமேல் எடுத்துச் செல்வதாக இருந்தால், அதுகுறித்த விவரங்களை சுங்கவரித் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

துபாயில் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்... வெளிநாட்டு ஷாப்பிங் டிப்ஸ்!

நம் நாட்டிலிருந்து 10,000 டாலர் வரை எடுத்துச் செல்ல அனுமதிப்பதுபோல், நாம் செல்லும் நாடுகளிலும் அனுமதிப்பதற்கு குறிப்பிட்ட தொகை வரம்பு உள்ளது. இந்த வரம்பு, நாட்டுக்கு நாடு வேறுபடும். அதைத் தெரிந்துகொண்டே பயணம் செல்ல வேண்டும். இல்லையென்றால், சுங்கவரித் துறையினரின் சந்தேகத்துக்கும் வரிவிதிப்புக்கும் ஆளாக நேரிடும். 

எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை நமது நாட்டின் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டத்துக்குப் பொருத்தமான வரம்பில் வாங்க வேண்டும். எலெக்ட்ரானிக் சாதனங்கள் 50 ஹெர்ட்ஸ் (hertz), 220 வோல்ட்ஸ் (volts) என்ற அளவுக்கு மிகாததாகப் பார்த்து வாங்க வேண்டும். அதேபோல, உலகளாவிய உத்தரவாதம் அல்லது நம் நாட்டில் செல்லத்தக்க உத்தரவாதம் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும். 

வெளிநாடுகளிலிருந்து 50,000 ரூபாய் சுங்க மதிப்புள்ள பொருள்கள் வரைதான் சுங்கவரி இல்லாமல் வாங்கி வர முடியும். அதுவும் நமது சொந்தப் பயன்பாட்டுக்கானதாக இருக்க வேண்டும். வியாபார நோக்கில் வாங்கியதாகத் தெரிந்தால், அதை அனுமதிக்க மாட்டார்கள். ஒரு நபருக்கு, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அனுமதி. நேபாளம், பூடான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. 

துபாயில் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்... வெளிநாட்டு ஷாப்பிங் டிப்ஸ்!

சுங்கவரி செலுத்தவேண்டிய பொருள்களை நாம் வாங்கியிருந்தால், சுங்கவரித் துறையில் அதைத் தெரிவிக்க வேண்டும். தெரிவிக்காமல்விட்டு சோதனையின்போது தெரியவந்தால், அது குற்றமாகக் கருதப்படும். எனவே இன்னொருவருக்கு உதவி செய்வதாகக் கருதி அவர்களது லக்கேஜ்களை நாம்  எடுத்துவருவதும்கூட நமக்குப் பாதகமாகக்கூடும். வெளிநாட்டுச் சுற்றுலா என்பது மனமகிழ்ச்சிக்காக இருக்கவேண்டுமே தவிர, வியாபார நோக்கில் இருக்கக் கூடாது. நம் நாட்டுக்குள் வரும் பொருள்கள், சரியான வழிமுறையில், நம் நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வரவேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே சுங்கவரித் துறை செயல்படும். 

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நாம் இயல்பாக அணியும் அணிகலன்களை மட்டுமே அணிந்துகொள்வது நல்லது. மிகவும் ஆடம்பரமாக நகைகளை அணிந்திருப்பதால் சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு நம் மீது சந்தேகம் ஏற்பட்டால் விசாரணையின்போது அதற்கான ஆதாரத்தைக் காட்டி நிரூபிக்கவேண்டியிருக்கும். இதனால் கால விரையமும் மன உளைச்சலும் ஏற்படும். 

துபாயில் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்... வெளிநாட்டு ஷாப்பிங் டிப்ஸ்!

துபாயில் தங்க நகைக்கு சேதாரம் கணக்கிடப்படாததால் தங்க நகையின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. தங்க நகையை மதிப்பிடுவதற்கு சர்வதேச அளவில் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன் அடிப்படையிலும் நமக்கு லாபகரமாக அமைய வாய்ப்புள்ளது. துபாய்க்கு சுற்றுலா செல்பவர்கள், புதிய தங்க நகை வாங்குவார்கள் அல்லது பழைய தங்க நகையைக் கொடுத்து புதிய நகை வாங்குவார்கள். இங்கே தங்க நகையை மதிப்பிடுவதற்கு சர்வதேச அளவில் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுவதாலும் விலை மலிவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. 

ஹாங்காங், கங்ஷூ, ஷென்ஷென், பாங்காக் ஆகிய நகரங்களில் எலெக்ட்ரானிக் பொருள்களை தரமாகவும் விலை மலிவாகவும் வாங்க முடியும். அப்படி வாங்கும்போது, ஒரிஜினல் பிராண்டட் பொருள்தானா, அவற்றுக்கான உத்தரவாதம் இந்தியாவில் பயன்படுத்த ஏதுவானதா என்பதையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஷாப்பிங் என்றாலே பேரம் பேசுவது நம் வழக்கம். வெளிநாடுகளில் பெரும்பாலும் ஃபிக்ஸட் பிரைஸ் என்றே வைத்திருப்பார்கள். துபாயில் துபாய் ஷாப்பிங் ஆஃபர் வழங்குவார்கள். அதில் பங்கேற்கும் ஷாப்பிங் கடைகள் அனைத்திலும் 30 முதல் 90% வரைகூட தள்ளுபடி விற்பனை நடக்கும். அதேபோல் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சீசனல் ஆஃபர் வழங்குவார்கள். தங்கள்வசமுள்ள அனைத்துப் பொருள்களையும் விற்றுத் தீர்ப்பதற்காக இந்தத் தள்ளுபடி விற்பனை நடைபெறும். பலரும் இதுபோன்ற சீசனைக் கணக்கில்கொண்டு ஷாப்பிங் செய்யச்செல்வதும் உண்டு.

துபாயில் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்... வெளிநாட்டு ஷாப்பிங் டிப்ஸ்!

பாங்காக் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விதவிதமான துணி ரகங்களை ஷாப்பிங் செய்யலாம். அதிக வேலைப்பாடுமிக்க வெள்ளி ஆபரணங்களையும், இளைஞர்களைக் கவரும் மிரட்டலான தோற்றமுள்ள டாலர் செயின்களையும் அங்கே வாங்கலாம். உணவுப்பொருள்களில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்கள் துபாயிலும், சவுதி அரேபியாவிலும் அதிக அளவில் கிடைக்கும். சிங்கப்பூர், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தொழில்துறைக்குத் தேவையான பொருள்களை அங்கு நடக்கும் விற்பனைக் கண்காட்சிகளில் வாங்கலாம்.

ஆபரணங்களாக இல்லாத தங்கத்துக்கு அனுமதி கிடையாது. எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்கி வருவதாக இருந்தால், வகைக்கு ஒன்று மட்டுமே அனுமதி உண்டு. வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டுவருவதற்கு அவற்றின் உடல்நலச் சான்றிதழ், தடுப்பூசி போட்ட விவரங்களை அளிக்க வேண்டும். தீப்பிடிக்கக்கூடிய பொருள்கள், ஆயுதங்கள், உயிருள்ள செடிகள், வாக்கிடாக்கி போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. டிவி, ஏர்கண்டீஷனர், ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களுக்கு 25% வரிவிதிக்கப்படும். இந்தப் பொருள்களின் விலை 1,50,000 ரூபாயைவிட அதிகமானாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைக் கொண்டுவந்தாலோ தோராயமாக 62% வரை சுங்கவரி விதிக்க வாய்ப்புள்ளது.

சுங்கவரி விதிமுறைகளைத் தெளிவாகத் தெரிந்துவைத்துக்கொண்டால், நமது வெளிநாட்டுப் பயணத்தின்போது எந்தவிதச் சிக்கலும் நேராமல் பயணம் நன்முறையில் அமையும். அதேபோல, எந்தெந்த நாடுகளில் எவற்றை ஷாப்பிங் செய்வது என்ற தெளிவும் கிடைத்தால் அதற்கேற்ப நமது சுற்றுலாவைச் சிறப்பாக்கலாம்!’’ என்றார் ஷாகுல் ஹமீத். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு