Published:Updated:

வருமான வரியை முறையாகச் செலுத்தினால் வங்கிக்கடன் பெறுவது எளிது!

சிறுதொழில்முனைவோர்களும் முறையாக வங்கிக்கணக்கு வைத்து, வருமான வரியைத் தவறாமல் செலுத்தி வரவேண்டும். நாம் செலுத்தும் வருமான வரியின்மூலமாக நிறுவனத்தின் டர்ன் ஓவர் தெரிந்துவிடும். வரியைக் குறைப்பதற்காக வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருந்தால் வங்கிக்கடன் வாங்கும்போது எதிர்பார்த்த அளவு கிடைக்காது. எனவே அத்தகைய செயல்பாடுகளைக் கைவிட வேண்டும்.

வருமான வரியை முறையாகச் செலுத்தினால் வங்கிக்கடன் பெறுவது எளிது!
வருமான வரியை முறையாகச் செலுத்தினால் வங்கிக்கடன் பெறுவது எளிது!

தொழில்முனைவோராகக் களமிறங்கி தொழிலில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டால், அடுத்தகட்டமாகத் தொழிலை விரிவுபடுத்தியாக வேண்டும். அதற்கென கூடுதல் நிதித்தேவைக்காக வங்கிக்கடன் பெறவேண்டியிருக்கும். வங்கிக்கடன் என்றாலே பலருக்கும் ஒருவித தயக்கம் வந்துவிடுகிறது. அவர்களுடைய தொழிலுக்கு வங்கிக்கடன் கிடைக்குமா, வங்கி அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் உரிய பதில் தர முடியுமா, வங்கி அதிகாரிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வங்கிக்கடனைப் பெற்றுவிட முடியுமா என அடுத்தடுத்து எழும் கேள்விகளால், வங்கிகளை அணுகாமல் வேறு ஏதேனும் நிதி நிறுவனங்களிலோ, வட்டிக்கு விடும் தொழில் நடத்துவோரிடமோ கூடுதல் வட்டிக்குக் கடன் வாங்கி நாளடைவில் பெருத்த கடன் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

வங்கிக்கடன் பெறுவதில் இருக்கும் நடைமுறைகள் குறித்த தெளிவு இல்லாததே இத்தகைய சிக்கல்களுக்கு அடிப்படை. எளியமுறையில் வங்கிக்கடன் பெறுவதற்கு என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

வருமான வரியை முறையாகச் செலுத்தினால் வங்கிக்கடன் பெறுவது எளிது!

முதலில் உங்களுக்கு வங்கிக்கடன் அவசியம்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு எவ்வளவு தொகை கடனாகப் பெறுவது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். கடனாகப் பெறும் தொகையை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்ற தெளிவும் இருக்க வேண்டும்.

நீங்கள் எதிர்பார்க்கும் வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு உங்களுடைய தொழிலில் வருமானம் இருக்கிறதா, திட்டமிட்டு வருமானத்தைப் பெருக்க முடியுமா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் நிறுவனத்தை முறையாகப் பதிவுசெய்து நடத்த வேண்டும். பலர் சிறிய அளவில் தொடங்கி நிறுவனம் வளர்ச்சியடையும் நிலையிலும் முறையாகப் பதிவுசெய்யாமல் விட்டுவிடுவார்கள். தற்போது ஜி.எஸ்.டி நடைமுறையிலிருக்கும் சூழலில், நிறுவனத்தைப் பதிவுசெய்வதோடு, நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளையும் முறையாகச் செய்துவர வேண்டும். ஜி.எஸ்.டி வரி வரம்புக்கு மிகாமலிருப்பவர்களும்கூட நிறுவனத்தின் கணக்குகளை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

வருமான வரியை முறையாகச் செலுத்தினால் வங்கிக்கடன் பெறுவது எளிது!

வங்கிக்கடன் தருபவர்கள் உங்களுடைய தொழிலில் கிடைக்கும் லாப சதவிகிதம் குறித்த கணக்கீடுகளை கவனத்திற்கொள்வார்கள். வருமானம் நல்ல நிலையில் இருந்தால் வங்கிக்கடன் எளிதில் கிடைக்கக்கூடும். லாப சதவிகிதம் குறைவாக இருந்தால் வங்கிக்கடன் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைப்பது கடினம். 

நீங்கள் ஏற்கெனவே வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அந்தத் தவணைகளை முறையாகச் செலுத்திவர வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நமது சிபில் ஸ்கோர் குறைந்து வங்கிக்கடன் கிடைப்பது கடினமாகிவிடும்.

வருமான வரியை முறையாகச் செலுத்தினால் வங்கிக்கடன் பெறுவது எளிது!

சிறுதொழில் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் பெறுவதற்கு முக்கியமாகப் பின்பற்றவேண்டிய நடைமுறை குறித்து முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பனிடம் கேட்டபோது,

``வாராக்கடன் பிரச்னையில் விஜய் மல்லையா போன்ற சிலர் ஏமாற்றியபோதும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி வங்கிகள் ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுக்க முழுக்க வங்கிக்கணக்கு மூலமாகவே பணப்பரிமாற்றங்களைச் செய்கிறார்கள். ரொக்கமாகப் பரிமாற்றம் செய்வதில்லை. எனவே, அந்த நிறுவனத்தின் உண்மையான டர்ன்ஓவர் உள்ளிட்ட அனைத்து நிதி நிலவரங்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன. கடனைத் திருப்பியளிக்கக்கூடிய திறனும் தெரிந்துவிடுகிறது. எனவே, அதன் அடிப்படையில் நம்பிக்கையோடு வங்கிக்கடன் தருகிறார்கள். ஆனால், சிறுதொழில் நிறுவனங்கள் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆர்வம்காட்டாததால்தான் வங்கிக்கடனுக்காக முயலும்போது நிறைய கேள்விகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

எனவே, சிறுதொழில்முனைவோர்களும் முறையாக வங்கிக்கணக்கு வைத்து, வருமானவரியை தவறாமல் செலுத்தி வரவேண்டும். நாம் செலுத்தும் வருமானவரியின் மூலமாக நிறுவனத்தின் டர்ன் ஓவர் தெரிந்துவிடும். வரியைக் குறைப்பதற்காக வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருந்தால் வங்கிக்கடன் வாங்கும்போது எதிர்பார்த்த அளவு கிடைக்காது. எனவே, அத்தகைய செயல்பாடுகளை கைவிட வேண்டும். சரியான வருமானத்தைக் காட்டி முறையாக வருமானவரியை ஆண்டுதோறும் கட்டிவந்தாலே வங்கிக்கடனும் அதற்குத் தகுந்தாற்போல் எளிதில் பெறலாம்" என்றார்.

சிறுதொழில்முனைவோர்களின் தொழிலில் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். அதற்கு அனைத்து விதமான பணப்பரிமாற்றத்தையும் வங்கியின் மூலமாகச் செயல்படுத்துவது அவசியம். இந்நிலையில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மேலாளருக்கு உங்களுடைய தொழில்குறித்த அனைத்து விவரங்களும் நீங்கள் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். நீங்கள் அவர்களது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களாக இருந்தால் வங்கிக்கடன் கிடைப்பது மிகவும் எளிமையானதாக இருக்கும்.

வருமான வரியை முறையாகச் செலுத்தினால் வங்கிக்கடன் பெறுவது எளிது!

சிறுதொழில்முனைவோர்கள் வங்கிகளை அணுகும்போது என்னென்ன முன் தயாரிப்புகளோடு இருக்க வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் சிவகுமாரிடம்

வருமான வரியை முறையாகச் செலுத்தினால் வங்கிக்கடன் பெறுவது எளிது!

கேட்டபோது, ``வங்கிகளைப் பொறுத்தவரை, தொழில்நுட்பச் சாத்தியக்கூறு மற்றும் பொருளாதார நம்பகத்தன்மை (technical feasibility and economic viability) குறித்துத்தான் கவனத்தோடு இருப்பார்கள். அதற்கேற்ப வங்கிக்கடன் பெற விரும்பும் சிறுதொழில்முனைவோர்கள், வங்கிகளை அணுகும்போது, வங்கிக்கடனைப் பயன்படுத்துவது தொடர்பான `விரிவான திட்ட அறிக்கை' (detailed project report) எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். வங்கிகள் எதிர்பார்ப்பது இதைத்தான்.

வங்கிக்கடனை எப்படித் திட்டமிட்டுப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதுகுறித்த முழு விவரத்தையும் ஆடிட்டரிடம் கூறி அதற்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றைத் தயாரிக்கவேண்டியது அவசியம். அந்த அறிக்கையில் வங்கிகளுக்கு என்னென்ன தேவையோ, அந்த விஷயங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்குத் தேவையான நிதி உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இவை அனைத்தையும் கவனத்தில்கொண்டுதான் வங்கிக்கடன் வழங்கப்படும்.

சிறுதொழில்முனைவோர்கள், தங்கள் தொழிலை ஒரு கட்டத்துக்குமேல் எடுத்துச் செல்வதற்கு தொழில்நுட்ப ஆலோசகர்களை வைத்துக்கொள்வது அவசியம். உலகளாவிய சந்தை நிலவரம், தொழில்நுட்ப மாற்றங்கள், எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை தொழில்நுட்ப ஆலோசகர்களிடம் இருக்கும். அவர்களை ஆலோசனைக்கு வைத்துக்கொண்டால் தொழில்முனைவோர்கள் தங்களது தொழிலை மிகவும் நன்முறையில் விரிவாக்கம் செய்ய முடியும். சிறுதொழில்முனைவோர்கள் சிலர் கூட்டாக அமைப்பு போல இணைந்துகொண்டு, அந்த அமைப்புக்கு பொதுவாக தொழில்நுட்ப ஆலோசகர்களை வைத்துக்கொண்டால் சிக்கனமாக இருக்கும். வங்கிகளைப் பொறுத்தவரை, கடன் கொடுத்தவுடன் அதைத் திரும்பப் பெறுவதில்தான் மிகுந்த கவனத்தோடு இருப்பார்கள். தொழிலை விரிவாக்கம் செய்வது தொழில்முனைவோரிடம்தான் உள்ளது" என்றார்.

நமது தொழில் வளர்ச்சிக்கு ஒருவர் கடன் கொடுக்கிறார் என்றால், அதற்குத் தகுதியான முறையில் தொழில் நடத்துகிறோமா என்று பார்ப்பது இயல்பான ஒன்றுதான். மேலும், பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை நமது தொழில் நிறுவனத்தின் மூலம் அரசுக்கு வரி வருமானம் நன்முறையில் இருக்கும்பட்சத்தில் நமக்குக் கடன் தருவதற்குத் தயங்க மாட்டார்கள். சிறுதொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் தங்களது நிறுவனத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பலருக்கும் தொழில் வாய்ப்பு, அரசாங்கத்துக்கு வரி வருமானம் ஆகியவற்றைப் பெருக்க முடியும். இதன்மூலம் நம் நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்துகிறோம் என்ற மனநிறைவு கிடைக்கும். எனவே, மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி வங்கிக்கடன் பெற்று தங்கள் நிறுவனத்தோடு நாட்டையும் முன்னேற்றுவது அனைத்துத் தொழில்முனைவோர்களின் கடமை.

Vikatan