Published:Updated:

மோடி Vs ராகுல்... காத்திருக்கும் பொருளாதார சவால்கள்... கரை சேர்வது எப்படி?

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க-வும் சரி, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் சரி, ஆட்சிக்கு வந்த பின்னர், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன. அதிலும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.12,000 வருமானத்தை உறுதிசெய்யும் 'நயாயா' திட்டத்துக்கு, குறைந்தபட்சம் ஆண்டுச் செலவு ரூ. 3,60,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மோடி Vs ராகுல்... காத்திருக்கும் பொருளாதார சவால்கள்... கரை சேர்வது எப்படி?
மோடி Vs ராகுல்... காத்திருக்கும் பொருளாதார சவால்கள்... கரை சேர்வது எப்படி?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கின்றன. ஆனால், `இதுபோன்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருந்திருக்கின்றன என்பதால், இதை ஏற்பதற்கில்லை!' என்ற குரல்களும் எழுகின்றன. பா.ஜ.க கூட்டணியோ, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியோ எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அந்த அரசுக்கு 23-ம் தேதிக்குப் பிறகு கடும் பொருளாதார சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள். 

மோடி Vs ராகுல்... காத்திருக்கும் பொருளாதார சவால்கள்... கரை சேர்வது எப்படி?

புதிய அரசுக்குக் காத்திருக்கும் சவால்கள் மற்றும் அது கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்த அலசல் இங்கே...

பட்ஜெட் பற்றாக்குறை

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க-வும் சரி, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் சரி, ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன. அதிலும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள  ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ரூ. 12,000 வருமானத்தை உறுதிசெய்யும் `நயாயா' திட்டத்துக்கு, குறைந்தபட்சம் ஆண்டுச் செலவு 3,60,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்றுதான் பா.ஜ.க அறிவித்துள்ள திட்டத்துக்கும் செலவாகும். அரசின் வருவாய், பெரும்பாலும் வரி வசூலை நம்பிதான் உள்ளது. அதிலும், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19-ம்  நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட வரி வசூலை எட்ட முடியாமல்போனதால், கடைசிக்கட்டத்தில் வருமானவரித்துறை பல்வேறு கெடுபிடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும், இலக்கு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையின் இலக்கு ஜிடிபி-யில் 3.4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்கள், இதை உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன. இதில் ஏதாவது கணக்குப் பிழையாகிப்போனால், அது தேசத்தை இன்னும் கடன் சுமையில் தள்ளிவிடும். 

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 2017-18-ம் ஆண்டுகளில் 6.1% அதிகரித்திருப்பதாக மத்திய புள்ளிவிவர ஆணையம் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கையை நிராகரித்த மோடி அரசு, அதை வெளியிடாமல் முடக்கி வைத்துவிட்டது. ஆனாலும், அந்த விவரம் வெளியில் கசிந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இது 7.6 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தனியார் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதனால், மத்தியில் பதவியேற்கவுள்ள அரசு, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகும்.

மோடி Vs ராகுல்... காத்திருக்கும் பொருளாதார சவால்கள்... கரை சேர்வது எப்படி?

வர்த்தகம்

2002-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் இந்தியா, கடைசியாக உபரி வர்த்தகத்தைக் கண்டது. அதற்குப் பிறகு நடந்த வேகமான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி குறைவாகவே இருந்துவருகிறது. இந்தியா மிக அதிகமாக இறக்குமதி செய்யும் பொருள்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கச்சா எண்ணெய்தான். இதுதான், கடந்த நிதியாண்டில்கூட ஜிடிபி-யில் 2 சதவிகிதத்துக்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்குக் காரணமாக அமைந்து, பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரித்து இந்தப் பற்றாக்குறையைக் குறைக்க இந்தியா முயன்றுவருகிற போதிலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்துவரும் வர்த்தகப் போர் போன்றவற்றால் அதைக் கடினமாக்கியுள்ளது. 

முதலீடு

ஜிடிபி-யில் 30 சதவிகிதப் பங்களிப்பைக்கொண்ட நிரந்தர முதலீடுகள், கடந்த நான்கு ஆண்டுகளாகவே தேக்கநிலையில் உள்ள நிலையில், சமீப காலமாக அந்நிய நேரடி முதலீட்டு வரத்தும் குறைந்துள்ளது. இதற்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிவு குறித்து காணப்பட்ட நிச்சயமற்ற நிலையும், நிர்வாகச் சிக்கல்களும் ஓரளவு காரணமாக அமைந்தன. அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வரி விதிப்பு போட்டியால், தென்கிழக்கு ஆசியாவுக்கு இடம் மாறிய அந்நிய முதலீடுகளை தன் பக்கம் இழுக்க இந்தியா தவறிவிட்டது. அடுத்து  அமையவிருக்கும் அரசு நிலையானதாக இருந்து, ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களைப் பின்பற்றினால்தான், அந்நிய முதலீட்டை ஈர்க்க முடியும். 

மோடி Vs ராகுல்... காத்திருக்கும் பொருளாதார சவால்கள்... கரை சேர்வது எப்படி?

வங்கிகள்

நாட்டில் வழங்கப்படும் புதிய கடன்களில் மூன்றில் ஒரு பங்கு தனியார் நிதி நிறுவனங்களால்தான் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டில், நிதிச் சேவைகள் அளிக்கும் ஐஎல்&எஃப்எஸ் உள்ளிட்ட வங்கி அல்லாத பல்வேறு நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டன. மேலும், இதுபோன்ற நிதி நிறுவனங்களில்தான் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களும் முதலீடு செய்கின்றன என்பதால், அந்தத் துறையிலும் இது குறித்த கவலை ஏற்பட்டது. இது ஒருபுறமிருக்க, பொதுத் துறையின் வாராக்கடன் பிரச்னை, ரிசர்வ் வங்கியுடனான மோதல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, வங்கித் துறையையும் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய பொறுப்பு, தேர்தல் முடிவுக்குப் பிறகு, பதவியேற்க இருக்கும் அரசுக்கு உள்ளது.

இத்தகைய சவால்களுக்கு மத்தியில்தான் மே 23-க்குப் பிறகு, புதிய அரசு பொறுப்பேற்கவுள்ளது. அது மோடியோ, ராகுல் காந்தியோ இந்தியாவை கரை சேர்த்தாக வேண்டிய பெரும் பொறுப்பைச் சுமக்கத் தயாராக வேண்டும்!