Published:Updated:

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

பிஸினஸ் வரலாறு

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

பிஸினஸ் வரலாறு

Published:Updated:
பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!
பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

பிஸினஸ் செய்வது நகரத்தார்களின் ஜீனில் உள்ளது என்பதை ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறோம். அந்த சமூகத்தில் பிறந்த பிஸினஸ் ஜாம்பவான்கள் பலரது வெற்றிகரமான வாழ்க்கை வரலாற்றையும் விளக்கமாகவே கடந்த வாரங்களில் பார்த்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
னால், பங்குச் சந்தை முதலீட்டிலும் ஆரம்பம் முதல் மிகப் பெரிய அளவில் ஈடுபட்டவர்கள் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த வர்கள். இன்றைக்கு பங்குச் சந்தை தொழிலில் அதிக அளவில் இருப்பதும் அவர்களே. இந்த வரலாற்றுப் பின்னணியைப் பற்றி சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன்.

''பங்குச் சந்தை முதலீட்டில் ஆரம்பம் தொட்டே நகரத்தார் இருந்தார்கள் என்பதை எடுத்துச் சொல்ல என் தந்தையையே ஒரு உதாரணமாகக் காட்டலாம். 1939-லேயே காரைக்குடியில் பங்குச் சந்தை புரோக்கிங் அலுவலகத்தை வைத்திருந்தார் என் தந்தை வள்ளியப்ப செட்டியார். கமலா அண்ட் கோ

என்கிற பெயரில் நடந்துவந்த அந்த நிறுவனத்தின் பார்ட்னராக இருந்தார் தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் பழ.கருப்பையாவின் தந்தையார் பழனியப்பன் செட்டியார். தொலைபேசி, இன்டெர்நெட் போன்ற எந்த வசதியும் பெரிய அளவில் இல்லாத அந்த காலத்தில் அவர்கள் பங்குச் சந்தை தொழிலை வெற்றிகரமாகச் செய்தனர். காரைக்குடியில் இருந்தபடியே லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பங்குகளை வாங்கி, விற்று லாபம் பார்த்தார்கள் என்பது, இன்று பலருக்கும்  ஆச்சரியம் ஊட்டும் தகவல்.  

நகரத்தார்கள் ஆரம்பம் தொட்டே பங்குச் சந்தையில் ஈடுபட்டதை ஒரு இயற்கையான வளர்ச்சியாகவே நான் பார்க்கிறேன். நகரத்தார்களின் குலத்தொழிலே பிஸினஸ்தான். ஒரு மனிதனால் எத்தனை பிஸினஸ்களை செய்ய முடியும்?

பருத்தி விற்கலாம்; ரப்பர் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடலாம்; பணம் கொடுத்து, வாங்கலாம். இதற்கு மேலும் அந்த மனிதனே முன்னின்று பல தொழில்களைச் செய்ய முடியுமா என்றால் சிரமம்தான்.

ஆனால், தாம் செய்ய நினைக்கும் தொழிலை வேறு ஒருவர் செய்யும்போது அதில் பணத்தைப் போட்டு பார்ட்னராகச் சேர்ந்தால் என்ன என்று நகரத்தார்கள் நினைத்ததன் விளைவே அவர்கள் பங்குச் சந்தை முதலீட்டில் நுழையக் காரணம். அவர்கள் பங்குகள் வாங்குவதை வெறும் முதலீடாகப் பார்க்காமல், தங்கள் தொழிலை பலவிதமாகப் பிரித்துக் கொள்ளும் டைவர்சிஃபையிங் டெக்னிக்காகப் பார்த்தார்கள்.

இப்படி செய்வதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். ரிஸ்க் எடுக்கிற துணிவும் சக்தியும் வேண்டும். ரிஸ்க் எடுப்பது நகரத்தார்களுக்கு காலந்தொட்டு இருந்துவரும் வழக்கம். கப்பல் போக்குவரத்து பெரிய அளவில் வளராத அந்தக் காலத்திலேயே வெளிநாட்டுக்கு பயணம் கிளம்பியவர்கள் நகரத்தார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த நாட்டின் மொழி தெரியாது. அங்கு நல்லவர் யார், கெட்டவர் யார் என்பது தெரியாது. ஆனாலும், அங்கு போய் பிஸினஸ் செய்து, ஒரு ரூபாயை நூறு ரூபாயாக மாற்றிக் காட்டினார்கள். அவர்கள் அப்போது எடுத்த ரிஸ்க்கிற்கு கிடைத்தப் பரிசுதான் அவர்கள் சேர்த்த பெருஞ்செல்வம்.

இப்படி ரிஸ்க் எடுத்தே பல பிஸினஸ்களை கற்றுக் கொண்டவர்கள் என்பதால், பங்குச் சந்தையில் யாரோ ஒருவர் செய்யும் தொழிலில் பணத்தைப் போடுவதற்கு அவர்கள் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. தவிர, பங்கு முதலீடு போன்ற விஷயங்களின் அடிப்படை களை வெளிநாடுகளிலேயே அவர்கள் கற்றுக் கொண்டவர்கள் என்பதால் நம் நாட்டில் அந்த முதலீடு தொடங்கிய காலத்திலேயே அதற்குள் எளிதாகப் புகுந்து வெற்றி காண முடிந்தது.

கன்சாலிடேட்டட் காபி என்று ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தைப் பிற்காலத்தில் டாடா காபி நிறுவனம் வாங்கியபோதுதான் தெரிந்தது, அந்நிறுவனத்தின் பங்குகளில் பெரும் பகுதி நகரத்தார்களின் கையில் இருக்கிறது என்று.

நமக்குத் தெரிந்த தொழிலில் முதலீடு செய்தால் தோல்வி இல்லை என்பார் வாரன் பஃபெட். நகரத்தார்கள் மலேசியாவில் தேயிலைத் தோட்டங்களை வைத்து அனுபவம் பெற்றவர்கள். இந்தியாவில் உற்பத்தியான பருத்தியை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்தவர்கள். இதனால்தான் காபி, டீ, டெக்ஸ்டைல் போன்ற நிறுவனங்களின் பங்குகளை தேடித் தேடி வாங்கினார்கள். நல்ல லாபத்தையும் சம்பாதித்தார்கள்.  

அதேபோல, நிதி பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களும் நகரத்தார்களுக்கு அத்துபடி என்பதால், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட போதும் நகரத்தார்களின் பணமே பெருமளவில் இருந்தது.

தவிர, குறுகிய காலத்தில் முதலீடு செய்கிற வழக்கம் நகரத்தார்களிடம் இல்லை. நல்ல கம்பெனியாக ஆராய்ந்து பார்த்து வாங்கி, நீண்ட காலத்திற்கு வைத்திருப்பார்கள். இன்றும்கூட டாடா ஸ்டீல் பங்குகளை பெருமளவில் நீண்ட காலமாக வைத்திருப்பவர்களை நானே அறிவேன்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்யவே நாம் பயப்படும் போது, பட்டியலிடப்படாத பல பங்குகளில் எக்கச்சக்கமாக முதலீடு செய்து வைத்திருப்பவர்கள் நகரத்தார்கள். இதற்கொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஏ.வி. தாமஸ் நிறுவனத்தைச் சொல்லலாம்.

பிற பங்கு முதலீட்டாளர்களுக்கும் நிறைய லாபம் சம்பாதித்துத் தந்தவர்கள் நகரத்தார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு முருகப்பா குழுமம் இ.ஐ.டி. பாரி நிறுவனத்தை வாங்கியது. அப்போது அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை சுமார் 20 ரூபாய். இத்தனை ஆண்டுகளில் நிறைய டிவிடெண்ட், போனஸ் என்று நிறைய லாபம் தந்த பிறகும், இப்போது அந்த நிறுவனத்தின் பங்கு விலை 199 ரூபாயாக இருக்கிறது. எவ்வளவு பெரிய லாபம்!'' என்று முடித்தார் வி.நாகப்பன்.

தமிழகத்திலும், இந்திய அளவிலான பிஸினஸ் வரலாற்றிலும் நகரத்தார்களின் பங்கு மிகப் பெரிது. நீண்ட நெடுங்காலத்திற்கு இந்த பிஸினஸ் பாரம்பரியம் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனிவரும் வாரங்களில் மிக முக்கியமான பிஸினஸ் சமூகமாக விளங்கும் நாயுடு சமூகத்தினரை பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

(அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism