Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:

 திவால் திகிலில் கிங்ஃபிஷர்!

வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கே நம்மைத் தேடி வந்துவிட்டார் ஷேர்லக். ''இரவு தாஜ் ஓட்டலில் ஒரு விருந்து. எனவே, சீக்கிரமே வந்துவிட்டேன்'' என்று சொல்லிவிட்டு அமர்ந்தவரிடம், ''சந்தை சரிய ஆரம்பித்துவிட்டதே, இனி என்ன நடக்கும்'' என்று கேட்டோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதோ, அதோ என கடந்த சில நாட்களாகவே நான் எதிர்பார்த்த சரிவு கடைசியில் வந்தேவிட்டது. அடுத்த வாரம் பாசிட்டிவ் செய்திகள் ஏதும் வந்தால் மட்டுமே சந்தை மேல் நோக்கிச் சொல்லும். ஆனால், சின்னச் சின்ன செய்திகளால்கூட சந்தை இறங்கிவிட வாய்ப்புண்டு. அடுத்த வாரத்தில் சந்தை முதலிரண்டு நாட்களில் தொடர்ந்து இறங்கினால் நிஃப்டி 5000 புள்ளிகள் வரை செல்லவும் வாய்ப்புண்டு என்கிறார்கள் என்னுடைய டெக்னிக்கல் நண்பர்கள். அப்படி இறங்கினால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் முதலீடு செய்வதே நல்லது.

ஆனால், ஒவ்வொரு நாளும் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய உங்கள் கார்த்திகேயனின் 'இன்று மார்க்கெட் எப்படி’யை காலையில் எழுந்தவுடன் கேட்பது நல்லது. கடந்த வியாழனன்று எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி. மதியம் 2.59-க்கு சந்தையில் ஒரு மாற்றம் வரலாம் என அவர் சொன்னார். அவர் சொன்ன மாதிரியே சந்தை பெரிதாகச் சரிந்தது கண்டு நான் ஆச்சரியமாகிப் போனேன். அவருக்கு என் வாழ்த்துக்கள். தொடரட்டும் அவர் பணி!'' என்றவருக்கு மொறுமொறு மணப்பாறை முறுக்கைத் தந்தோம்.

''கிஃங்பிஷர் நிறுவனம் உச்சகட்ட சிக்கலில் இருக்கிறது போலிருக்கிறதே! பிழைத்து மீண்டும் பறப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா?'' என்று கேட்டோம். முறுக்கை ரசித்து சாப்பிட்டபடி நம் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

##~##
''கிங்ஃபிஷர் திவால் திகிலில் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் அகர்வாலே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வதந்தி. மேலும், இதுவரை அந்நிறுவனம் லாபமே ஈட்டியதில்லை. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க கையில் பணமும் இல்லை. எனவேதான் விமானங்களை கேன்சல் செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. பிஸினஸ் கிளாஸ் கஸ்டமர்கள் கிங்ஃபிஷர் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். முக்கிய  விமானிகளும் அந்நிறுவனத்தை விட்டு விலகிவிட்டார்கள். இந்நிலையில் 6,000 கோடிக்கு மேல் வாங்கிய கடனை அந்நிறுவனம் அடைக்க வழியே இல்லை. இனி எப்படி அந்த நிறுவனம் பிழைக்கும்'' என்றார்.

''இன்னொரு சத்ய மாக மாறியிருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா என்று கேட்கிறார்கள் முதலீட்டாளர்கள். அவர் களுக்கு என்ன பதில் சொல்வது?'' - வாசகர்கள் பலரும் கேட்ட கேள்வியை ஷேர்லக்கிடம் கேட்டோம்.

''சத்யத்தையும் கிங்ஃபிஷரை யும் ஒப்பிடுவது தவறு. சத்யத்தில் பிரச்னை முதலாளி. ஆனால், அங்கு லாபம் இருந்தது. கிங்ஃபிஷரில் முதலாளி பிரச்னை இல்லை. ஏர்லைன்ஸ் பிஸினஸே பிரச்னை. உலகம் முழுவதுமே இந்த பிஸினஸ் இப்போது சிறப்பாக இல்லை. கிங்ஃபிஷருக்கு மட்டுமல்ல, ஏர்-இந்தியாவுக்கும் கஷ்டகாலம்தான். மற்ற விமான நிறுவனங்களும் முழி பிதுங்கிக் கொண்டுதான் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது முற்றிலும் தவறு. சத்யம் நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கியது போல இந்நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏற்கெனவே வாங்கி வைத்திருப் பவர்கள் இனிமேலும் தாமதிக்காமல் விற்றால் தப்பிக்கலாம்!'' என்றார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''கிங்ஃபிஷர் பிரச்னையில் சில வங்கிகளும் மாட்டித் தவிக்கிறதே!'' என்றோம்.

''ஒன்றல்ல, இரண்டல்ல, எஸ்.பி.ஐ. உள்பட                   18 வங்கிகள் கிங்ஃபிஷருக்கு கடன் தந்திருக்கிறது. இதில் எஸ்.பி.ஐ.யின் பங்குதான் அதிகம். எஸ்.பி.ஐ. இந்த நிறுவனத்திற்கு 1,500 கோடி கடன் தந்ததைப் பற்றிதான் எல்லோரும் பேசுகிறார்களே ஒழிய, இந்த நிறுவனத்தின் 5.6 சதவிகிதப் பங்குகளை வாங்கி வைத்திருப்பது பற்றி யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இந்த பங்குகளின் இன்றைய மதிப்பு வெறும் 72 கோடி ரூபாய்தான். கொடுத்த கடனும் வரவில்லை; வாங்கிய பங்கும் படுபாதாளத்தில். என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறது எஸ்.பி.ஐ.

ஷேர்லக் ஹோம்ஸ்

ஆனால், எஸ்.பி.ஐ. தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ. (5.30%), ஐ.டி.பி.ஐ. (3.51%), பேங்க் ஆஃப் இந்தியா (1.75%), யூகோ பேங்க் (1.40), பி.என்.பி. (1.14%) உள்ளிட்ட பல வங்கிகளும் கிங்ஃபிஷரின் பங்குகளை வைத்திருக்கிறது. 64 ரூபாய் இருந்தபோது இந்த வங்கிகள் இந்த பங்கை வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது அந்த பங்கு 25 ரூபாய்க்கு வந்துவிட்டதால் அல்ரெடி 60 பெர்சன்ட் அவுட்!''

''போதும் கிங்ஃபிஷர் புராணம். வேறு செய்திகளைச் சொல்லும்!'' என்றோம்.

''ஆரக்கிள் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் டீலிஸ்ட் செய்யப் போவதாக அறிவித்திருப்பது, சந்தையில் அனைவரும் அறிந்த செய்திதான். அதன் காரணமாகத்தான் வெள்ளிக்கிழமை அன்று அந்த பங்கு 16% உயர்ந்தது. இத்தனைக்கும் என்ன விலையில் பங்குகளை வாங்கப் போகிறது என்று அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. தற்போது 2,583 ரூபாயில் வர்த்தகமாகும் இந்த பங்கு, 3,500 ரூபாய்க்குத் திரும்பி வாங்க வாய்ப்பிருப்பதாக என் சோர்ஸ்கள் சொல்கின்றன. இந்த தகவலை கேட்டவுடன், குஷியாக இந்த பங்குகளை ஒரேயடியாக வாங்கிவிட வேண்டாம்.

ஒரு நிறுவனத்தில் புரமோட்டர்களிடம் 75 சதவிகிதத்திற்கு மேல் பங்கு இருக்கக் கூடாது என செபி சொல்லி வருகிறது. ஆனால், இந்நிறுவனத்தின் புரமோட்டர்கள்                    80 சதவிகித பங்குகளை வைத்திருக்கின்றனர். இதற்கும் கீழே தங்களுடைய பங்குகளைக் குறைக்க விருப்பம் இல்லாமல்தான் டீலிஸ்ட் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது அந்நிறுவனம். இதற்கு 2013 ஜூன் வரை நேரமும் இருக்கிறது. பங்கு விலை அதிகரித்தபிறகு டீலிஸ்ட் செய்யும் முடிவை தள்ளிப் போடக்கூட வாய்ப்புண்டு. எனவே, ஜாக்கிரதை!''

''சந்தை சரிந்து கொண்டிருக்கிறது. இந்த முறை ஷேர் டிப்ஸ் உண்டா, இல்லையா?'' என்று கேட்டோம்.

''உண்டு, உண்டு'' என்றவர் ஒரு துண்டுச் சீட்டை தந்துவிட்டு பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism