Published:Updated:

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

பிஸினஸ் வரலாறு

பிரீமியம் ஸ்டோரி
பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!


பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு!

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

தமிழக பிஸினஸ் வரலாற்றில் நாயுடு சமூகத்தினருக்கு மிக முக்கிய இடமுண்டு. விவசாயத்தையே பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்த நாயுடு சமூகத்தினர் பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி, பிஸினஸ் உலகில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கினர்.

##~##
ந்த சமூகத்தின் முதல் பிஸினஸ்மேன் என்றால் அது பி.எஸ்.கோவிந்த சாமி நாயுடுதான். 1856-ல் இன்று கோவையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட பீளமேட்டில் பிறந்தார். கோவிந்தசாமி நாயுடுவின் பரம்பரை அந்த பகுதியில் அப்போதே பிரபலம். பெரிய வீடு என்று சொன்னாலே போதும், கோவிந்தசாமி நாயுடுவின் தாத்தா வெங்கடராம நாயுடுவின் தாத்தாவின் வீடு என எல்லோருக்கும் தெரியும். வெங்கடராம நாயுடுவின் இரண்டாவது மகன் சாம நாயுடு. இந்த சாம நாயுடுவின் மூன்றாவது மகன்தான் கோவிந்தசாமி நாயுடு.

பெரிய வீடு சாம நாயுடு கோவிந்தசாமி என்பதன் முதல் மூன்று எழுத்துக்கள்தான் இன்றைக்கு கோவையில் புகழ் பெற்று விளங்கும் பி.எஸ்.ஜி. கல்லூரியின் பெயராக இருக்கிறது.

அந்த நேரத்தில் கோவிந்த சாமி நாயுடுவிடம் இருந்த இடம் வெறும் 14 ஏக்கர் நிலம்தான். இந்த இடமும் வளம் கொழிக்கும் பசுமையான பூமியல்ல. கஷ்டப்பட்டு உழுது பயிரிட வேண்டிய புஞ்சை நிலம் தான். ஆனால், இப்படிப்பட்ட இடத்திலும் கடுமையாக உழைத்து, செழிப்பானதாக ஆக்கினார் கோவிந்தசாமி நாயுடு.

அந்த சமயத்தில்தான் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நேரடியாக வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். பருத்தியை உற்பத்தி செய்து, அதை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தனர். 1850 தொடங்கி இந்தியாவில் பஞ்சாலைகளையும் அமைக்க ஆரம்பித்தனர்.

1854-ல் மும்பையில் பாம்பே ஸ்பின்னிங் மில் என்கிற ஜவுளித் தொழிற்சாலை முதல் முதலில் தொடங்கப்பட்டது. இந்த ஆலையில் உற்பத்தியான துணிமணிகள் அப்படியே இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவில் உற்பத்தியான பருத்தி தரமாக வும், விலை மலிவாகவும் இருந்ததினால், ஜவுளி ஆலைகளுக்கு அதிக தேவை உருவானது. 1875-க்குள் ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்தது.

இந்த சமயத்தில் கோவையிலும் பருத்தி உற்பத்தி அறிமுகமானது. அதுநாள் வரை கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றை விளைவித்து வந்த கோவை விவசாயிகள், பருத்தி மற்றும் புகையிலை பயிர் செய்யத் தொடங்கினார்கள். இதில் பருத்திக்கு மிக நல்ல விலை கிடைத்ததால் எல்லோரும் பருத்தி சாகுபடிக்குத் தாவினார்கள். கோவை பகுதியில் பருத்தி விளைச்சல் அதிகரித் ததைத் தொடர்ந்து இந்தியாவிலேயே மிக முக்கியமான நகரமாக மாறியது கோவை.

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

1900-க்குப் பிறகு பருத்தி விளைச்சலில் இன்னொரு முக்கியமான விஷயம் நடந்தது. இதுவரை சாதாரண பருத்தி விதைகளை பயன்படுத்தி வந்த கோவை விவசாயிகளுக்கு 'கம்போடியா’ என்னும் புதிய பருத்தி விதை அறிமுகமானது. நெட்டை ரகமான இந்த பருத்தி நிலத்தில் நன்கு வேர் பிடித்து நின்றதோடு, கோவை பகுதி நிலத்திற்கு மிகப் பொருத்தமான பருத்தி ரகமாகவும் இருந்தது. நல்ல லாபத்தைத் தந்த இந்த பருத்தியை கோவை பகுதியிலிருந்த விவசாயிகள் 'மார்வாடி பருத்தி’ என்றுதான் பட்டப்பெயர் வைத்து அழைத்தார்கள்.

1888-ல் கோவையில் முதல் ஜவுளி ஆலை தொடக்க மானது. ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர்தான் இந்த ஜவுளி ஆலையை ஆரம்பித்தார். இந்த ஆலைக்குத் தேவையான பருத்தியை, பருத்தி விதையிலிருந்து பிரித்து எடுக்கிற 'ஜின்னிங்’ பாக்டரிகள் கோவை பகுதியில் வரத் தொடங்கின.

இதற்கிடையே பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடுவும் பருத்தி விவசாயத்திற்கு மாறியிருந்தார். பருத்தி விளைச்சல் மட்டுமின்றி, பருத்தியை வாங்கி, விற்கும் பிஸினஸையும் செய்ய ஆரம்பித் தார். தரமான பருத்தியை சட்டென கண்டுபிடிக்கும் அவரது திறமை, நேர்மையாக தொழில் செய்யும் அவரது அணுகுமுறை ஆகிய இரண்டும் அவரை மற்ற பிஸினஸ்மேன்களிடமிருந்து தனித்துக் காட்டியது.

கோவையில் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் ஆலைகளுக்குப் பருத்தி விற்பனை செய்யும் முக்கியஸ்தர்களில் ஒருவராக மாறினார் பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு.

இதன் மூலம் அவரிடம் நிறைய பணம் சேர, நிறைய விவசாய நிலங்களை வாங்கி, அதில் பருத்தி சாகுபடியை மேற்கொண்டார். 1900-க்குப் பிறகு கோவையில் நிலத்தை உழவு செய்யக்கூடிய  டிராக்டர் வந்தபோது, அதை முதலில் வாங்கி தன்னுடைய தோட்டத்தில் பயன்படுத்தினார் பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு. 1911-ல் பருத்தியை பருத்தி விதைகளிலிருந்து பிரித்து எடுக்கும் 'ஜின்னிங்’ பாக்டரி ஒன்றைத் தொடங்கினார்.

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

1911 தொடங்கி 1917 வரை கோவையை மையமாக வைத்து மிகப் பெரிய அளவில் பருத்தி விற்பனை நடந்தது. மும்பைக்கு அடுத்து பருத்தி விற்பனையில் பெரிய நகரமாக மாறியது கோவைக்கு அருகிலிருக்கும் திருப்பூர். ஆனால், பருத்தி விலை பற்றிய அனுமானங்களை கற்பனைக்கும் எட்டாதபடி விண்ணைத் தொட்டிருக்க, இந்த சமயத்தில் முதல் உலகப் போரும் தொடங்க, திடீரென உலக அளவில் பிஸினஸில் தேக்கம் ஏற்பட்டது. இந்த சமயத்தில், அதாவது 1918-ல் தன்னுடைய 62-வது வயதில் காலமானார் பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு.

ஆனால், தன்னுடைய பிஸினஸ் சாம்ராஜ்யத்தை மேலும் முன்னேற்றிக் கொண்டு செல்ல நான்கு மகன்களை பெற்று, அவர்களைச் சிறந்த பிஸினஸ்மேன்களாகவும் உருவாக்கி வைத்திருந்தார் பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு. பி.எஸ்.ஜி.வெங்கடசாமி நாயுடு, பி.எஸ்.ஜி.ரங்கசாமி நாயுடு, பி.எஸ்.ஜி.கங்கா நாயுடு, பி.எஸ்.ஜி.நாராயணசாமி நாயுடு என்கிற நால்வர்தான் அந்த வாரிசுகள்.

கோவையில் அப்போது செயல்பட்டு வந்த ஜவுளி ஆலைகளை போல தாங்களும் ஒரு ஜவுளி ஆலையைத் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர் பி.எஸ்.ஜி.-யின் வாரிசுகள். 1922-ல் ஸ்ரீரங்க விலால் ஜின்னிங், வீவிங் அண்ட் ஸ்பின்னிங் மில் ஒன்றைத் தொடங்கினர். இதுதான் கோவையில் தொடங்கப்பட்ட நான்காவது மில்.

அடுத்தடுத்து பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியை தங்கள் தொழிலுக்குள் வேகமாகக் கொண்டு வந்தவர்களில் முன்னணியில் இருந்தவர்கள் பி.எஸ்.ஜி. குடும்ப வாரிசுகள்தான். 1931-ல் ஊட்டியில் பைக்காரா மின் உற்பத்தி நிலையம் அமைக்கப் பட்டபோது அதிலிருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தியதில் முதலில் நின்றவர்கள் பி.எஸ்.ஜி. குடும்பத்தினர்.

1947-ல் ஜவுளி ஆலைகளுக்குத் தேவையான 'பாலிங் பிரஸ்’ போன்ற இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர் பி.எஸ்.ஜி.சகோதரர்கள்.

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

ஸ்ரீ குமரன் மில்ஸ், ஸ்ரீ வரதராஜா டெக்ஸ்டைல் போன்ற ஜவுளி ஆலைகளையும் பி.எஸ்.ஜி. குடும்ப வாரிசுகள் அமைத்தனர்.

தொழில் துறையில் பி.எஸ்.ஜி. வாரிசுகள் நிகழ்த்திய சாதனைகள் ஒருபக்கம் இருக்க, கல்வித் துறையில் அவர்கள் செய்த சாதனை இன்னும் பெரிது. பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு உயிருடன் இருந்தபோதே, அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

இதனால் தன்னுடைய சொத்தை தனது நான்கு மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்த போது நான்கு பாகங்களாக பிரிக்காமல், ஐந்து பாகங்களாக பிரித்தார். இப்படி பிரித்த ஐந்தாவது பாகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, அறக்கட்டளை நடத்தி, அதன் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

1924-ல் பி.எஸ்.ஜி. சர்வாஜன ஹைஸ்கூல், 1926-ல் பி.எஸ்.ஜி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், 1939-ல் பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் காலேஜ், 1947-ல் பி.எஸ்.ஜி. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், 1951-ல் பி.எஸ்.ஜி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, 1985-ல் மருத்துவக் கல்லூரி, 1994-ல் பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் என  25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர் பி.எஸ்.ஜி.யின் வாரிசுகள்.

பி.எஸ்.ஜி.யின் வாரிசுகளில் இன்றும் பிஸினஸில் கொடி கட்டி பறந்து கொண்டி ருப்பவர் ராஜ்ஸ்ரீ பதி. இவர் பி.எஸ்.ஜி.கங்கா நாயுடுவின் மகன் வரதராஜின் மகள் ஆவார். 1990 தொடங்கி இவரது ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் அண்ட் கெமிக்கல் நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தேசிய பங்குச் சந்தையிலும் மும்பை பங்குச் சந்தையிலும் இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டு உள்ளது.

இன்றைய தேதியில் ஃபார்முலா கார் ரேஸ் போட்டியில் உலகப் புகழ் பெற்று விளங்கும் நரேன் கார்த்திகேயன் பி.எஸ்.ஜி. குடும்ப வழித் தோன்றல்தான்.

நூற்றாண்டைக் கடந்தும் பி.எஸ்.ஜி. குடும்பம் இன்றும் பிஸினஸ் உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

(அறிவோம்)

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!


அம்மாதான் வழிகாட்டி!

சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் இன்டெர்நெட் தொடர்பான பிஸினஸில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க கம்பெனி. ஆண்டு வருமானம் 1.657 பில்லியன் டாலர்கள் (சுமார் 8,285 கோடி ரூபாய்). சமூக சேவை செய்யும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் கம்பெனியில் முன்னுரிமை தருகிறார்கள்.  இதற்கு முக்கிய காரணம் 'அம்மா' என்று அன்போடும், பக்தியோடும் அழைக்கப்படும் நம்ம ஊர் மாதா அமிர்தானந்தமயி.

சேல்ஸ்ஃபோர்ஸ் கம்பெனியை நிறுவியவரும், சேர்மனுமான மார்க் பெயினாஃப் மனதில் 1996-ல் குழப்பம். வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று புரியாத நிலை. இந்தியாவுக்கு வந்தார். அத்தனை ஆன்மிகத் தலைவர்களையும் சந்தித்தார். 'சமுதாய உணர்வோடு பிஸினஸ் செய்’ என்று அம்மாவின் கட்டளையை ஏற்று பிஸினஸில் குதித்தார்.

இன்று சேல்ஸ்ஃபோர்ஸ் வெற்றிகரமாக அதனை செய்து கொண்டிருக்கிறது. ஆரக்கிள் போன்ற பிரமாண்ட கம்பெனிகளோடு தான் போட்டி போட இந்தச் சமுதாய சேவை உணர்வு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார் மார்க் பெயினாஃப். உங்கள் பிஸினஸில் எப்படிப்பட்ட சமுதாய உணர்வு இருக்கு என்று பார்த்திருக்கிறீர்களா?        

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு