Published:Updated:

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

பிரீமியம் ஸ்டோரி
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!


நேர்மறையாகச் சிந்தியுங்கள்!

வாசன் தன்னுடைய பதிலைத் தொடங்கும் முன், தான் கொண்டு வந்திருந்த ஒரு விருதை எடுத்துக் காட்டினார். 'அண்மையில் எனக்கு டெல்லியில் கிடைத்த விருது இது. நாங்கள் உருவாக்கிய பயன்பாட்டிற்கு 'சிறந்த மொபைல் என்டர்பிரைஸ் அப்ளிகேஷன்ஸ்’ என்ற விருதை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் வழங்கினார்.              292 கம்பெனிகளில்             5 கம்பெனிகள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, அதில் முதலாவதாக வந்ததால் எங்களுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது'' என்றார்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ரம்ப காலத்தில் இத்தகைய விருதுகள் பெறுவது கம்பெனிக்கு நற்சான்றிதழாகவும், ஊடக விளம்பரமாக ஆவதும் மட்டுமில்லாமல், தொழில் முனைபவருக்கு ஒரு சிறந்த ஊட்டச் சத்து மருந்தாகவும் இருக்கும்.

சரி, நிறுவனம் தொடங்கு வதற்கான பணத்தை எப்படித் திரட்டுவது என்று பார்ப்போம்.  இரண்டு வகைகளில் கம்பெனி தொடங்கத் தேவையான நிதியைத் திரட்டலாம். முதலாவது, நிறுவனத்தின் புதிய பங்குகளை உருவாக்கி, அதை விற்று அதன் மூலம் நிதி திரட்டலாம்.

##~##
அவ்வாறு விற்கப்படும் பங்குகளை வாங்குபவர்கள் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டர்கள் ஆகிறார்கள். நிறுவனத்தை ஆரம்பிக்கும் புரமோட்டருடன் சேர்ந்து அவர்கள் வாங்கிய பங்குகளின் விகிதத்திற்கேற்ப இந்த பங்குதாரர்கள் நிறுவனத்தின் சக உரிமையாளர்கள் ஆகிறார்கள்.  

இரண்டாவது, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து கடனாகப் பெறலாம். அவ்வாறு கடனாகப் பெறும் தொகைக்கு அவ்வப்போது வட்டி கட்ட வேண்டும். அசலையும் திருப்பித் தர வேண்டும். அப்படித் தராவிட்டால், அடுத்த முறை கடன் கிடைக்காமல் போகலாம். சொத்துக்கள் பறிமுதலாகும் நிலையும் ஏற்படலாம். எனவே, திரும்பக் கட்டமுடியும் என்றால் மட்டுமே வங்கியில் கடன் வாங்கலாம்.

சரி, வாசனின் பதிலுக்கு வருவோம்.

'நான் 2008-ல் 'விடைம்’ என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அப்போது நான் வேறொரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் நிறுவனத்தை ஆரம்பித்தவுடன் நான் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியில் என்னைப் பகுதி நேர பணியாளராக மாற்றிக் கொண்டேன். காலை நேரங்களில் அந்த நிறுவனத்திற்கு வேலை பார்ப்பேன்.

அமெரிக்காவில் இரவு நேரம் என்னும்போது, இந்தியாவில் அது காலை நேரம். அப்போது விடைம் நிறுவனப் பணிகளைப் பார்ப்பேன். ஆக, இரண்டு பணிகளையும் சேர்த்து பார்த்ததால் சுமார் இரண்டு வருடங்களுக்கு நான் நாளன்றிற்கு சுமார் இருபது மணி நேரம்கூட வேலை செய்திருக்கிறேன்' என்றார்.  

'இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்க உங்களால் எப்படி முடிந்தது?'' என்றேன் நான்.

'உலகத் தரம் வாய்ந்த பயன்பாட்டை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு அசாதாரண முயற்சி தேவை' என்றார் வாசன் சட்டென்று.

'சரி, உங்கள் பணத்தை எப்படித் திரட்டினீர்கள்?'

'நான் விடைம் ஆரம்பித்த போது முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வேலை பார்த்திருந்தேன். நான் மென்பொருள் செய்யும் நிறுவனங்களில் வேலை செய்ததால் நல்ல சம்பளமும் கிடைத்தது. வீட்டுக் கடன் போக, மீதி பணத்தை நான் என்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தேன். இதுவரை நான் முதலீடு செய்த தொகை எட்டு இலக்கத்தை தாண்டும்.'

நீங்கள்தான் உங்கள் நிறுவனத்தின் முதல் முதலீட்டாளராக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் முதலாளியாக இருக்க முடியும். உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தை உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள்.

'அவ்வளவு நம்பிக்கையா உங்கள் பயன்பாட்டின் மேல்?'

'என் நிறுவனத்தின் மேல் நான் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், மற்றவர்களை என்னால் எப்படி நம்பச் செய்ய முடியும்?' என்றார் ஆணித்தரமாக.

சுயமுதலீடு என்பது வெறும் முதலீடு மட்டும் இல்லை, உரிமையாளர்களின் நம்பிக்கையை பறைசாற்றும் சாட்சியாகவும் அமையும்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

சுயமுதலீட்டிற்கு அடுத்தபடி யாக குடும்பத்தினரிடமிருந்து நிதி திரட்டலாம். வெளியில் இருந்து நிதி திரட்டுவதைக் காட்டிலும் குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்து திரட்டுவது சற்று எளிதானது. இதைப்பற்றி கேட்டபோது வாசன் கூறினார்.

'இதுவரை செய்த மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட கால் பங்கு என் தந்தையிடம் இருந்து வந்தது. குடும்பத்தினர் முதலீடு செய்யும்போது இந்த நிறுவனம் வெற்றி பெறுமா என்று ஆராய்ந்து முதலீடு செய்வதில்லை. பாசத்தின் பேரில் முதலீடு செய்கிறார்கள்.'    

'உங்கள் பத்து வருட சம்பாத்தியத்தை உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்து விட்டீர்கள், ஒருவேளை அந்த நிறுவனம் தோல்வி அடைந்தால்..?''

'என் நிறுவனம் தோல்வியடைந்தால், என் திறமையினால் எனக்கு இன்னொரு வேலை கிடைக்கும். ஆனால், இந்த இரண்டு, மூன்று வருடங்களில் எனக்கு கிடைத்த அனுபவம் எத்தகைய வேலையில் இருந்திருந்தாலும் எனக்கு கிடைத்திருக்காது. பிஸினஸ் நிமித்தமாக பல உயரிய இடத்தில் இருப்பவர்களைச் சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர்களுடன் கொண்ட தொடர்பினால் நான் வளர்ந்தேன். பிஸினஸுக்காக அலைந்தபோது பிளாட்பாரத் தில்கூட படுத்திருக்கிறேன். ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் தங்கியிருக்கிறேன். இப்படி பலவிதமான அனுபவங்களால் வாழ்க்கையின் பல கூறுகளை உணர முடிந்தது' என்றார் உத்வேகமாக.

இதையேதான் நான் பல தொழில் முனைபவர்களுக்கும் கூறுவேன். எப்போதுமே நேர்மறையாகச் சிந்தியுங்கள். தோல்வியடைந்தால் எவ்வளவு இழப்போம் என்று மதிப்பீடு செய்வதை விட்டுவிட்டு, தொழில் முனையும்போது கிடைக்கிற அனுபவப் பரவசத்தில் திளைத்திடுங்கள்.

'Entrepreneurship involves a leap of faith' என்று சொல்வார்கள். அதில், முதலில் தேவை தன்னம்பிக்கை. அப்போதுதான் பாய்ச்சலுக்கு சக்தி இருக்கும்.

(முனைவோம்)

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

முரளி, கள்ளக்குறிச்சி.

நான் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். பின்னால், நான் ஒரு கம்பெனி தொடங்க இருக்கிறேன். அதை எப்படி ஆரம்பிப்பது என்ற வழியைக் கூறுங்கள்.

''அன்புள்ள வாசகருக்கு,

படிக்கும்போதே கம்பெனி தொடங்கும் உங்கள் எண்ணம் வரவேற்கத்தக்கதே. நிறுவனம் தொடங்குவது ஒன்றும் கடினமான விஷயமில்லை. நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் யாரையாவது அணுகினால் கம்பெனியைத் தொடங்குவது,  பெயர் வைப்பது, பதிவு செய்வது, பங்குப் பத்திரங்கள் தயார் செய்வது, கம்பெனி செய்யப் போகும் பிஸினஸை பொறுத்து சங்கத்தின் பதிவுக் குறிப்புகள் (Memorandum of Association), சங்கத்தின் கட்டுரைகள் (Articles of  Association) போன்ற ஆவணங்களைத் தயார் செய்வது, கம்பெனி சீல் செய்வது போன்ற அனைத்து விஷயங்களையும் முடித்து கொடுப்பார்கள். இத்தனை காரியங்களைச் செய்ய வேண்டுமா? என்று மலைக்க வேண்டாம். சார்ட்டர்ட் அக்கவுன்டன்டே செய்து கொடுத்துவிடுவார்.  

உங்கள் நிறுவனம் என்ன பிஸினஸ் செய்யப் போகிறது, அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை மட்டும் முடிவு செய்தால் போதும். நிறுவனம் பதிவு செய்ய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகை நீங்கள் எவ்வளவு மூலதனம் பங்குகள் மூலமாக பெற விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து வேறுபடும். ஐந்து லட்ச ரூபாய்க்கு முதலீடு செய்ய விரும்பினால், அரசாங்கப் பதிவிற்கு சுமார் 20 -25 ஆயிரம் ரூபாய் ஆகலாம். கம்பெனி பதிவுச் சான்றிதழ் பெற்றவுடன் அதை வைத்து உங்கள் கம்பெனிக்கான நடப்பு கணக்கை வங்கியில் தொடங்கலாம்.''          

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு