Published:Updated:

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

பிரீமியம் ஸ்டோரி
திருமதி எஃப்.எம்.

''வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கலங்கி நின்னுடாதீங்க. முடிஞ்சவரை நிறுத்தாமச் சேமியுங்க. குழந்தைங்க பெரியவங்களா வளர, வளர நம்ம கஷ்டம் மறைஞ்சிடும். அதுநாள் வரை நம்ம செஞ்ச சேமிப்பு நமக்கு பக்கபலமா இருந்து நம்மைத் தாங்கும். இது என் வாழ்க்கை அனுபவம்'' என்கிறார் கலைமதி. நாகை மாவட்டம், தரங்கம்பாடி காட்டுச்சேரி கிராமத்தில் வசிக்கும் இவர்தான் இந்த வார திருமதி ஃபைனான்ஸ் மினிஸ்டர். இனி அவர் கதையைக் கேட்போமா?

##~##
''எ
ங்களுக்குத் திருமணம் முடிந்து இருபத்தி நான்கு வருடம் ஆகிறது. நான் வளர்ந்தது, பள்ளி, கல்லூரி என படித்தது எல்லாம் காரைக்கால் தான். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். என் அப்பா மூத்த வழக்கறிஞர். வாழ்க்கையில் மிக அதிக செல்வத்தையும், கஷ்டத்தையும் அனுபவித்தவர். எனவே, நான் சிறுமியாக இருந்த காலந்தொட்டே எனக்கு பணத்தின் அருமையைச் சொல்லி வளர்த்தார் என் அப்பா.

எனக்கு திருமணம் முடிந்த போது என் கணவர் கிராமத்தில் இருந்தார். காரைக்கால் போன்ற சிறு நகரத்தில் வாழ்ந்துவிட்டு, மீண்டும் கிராமத்திற்குச் செல்ல நான் தயங்கவே செய்தேன். ஆனால், தந்தை கொடுத்த தைரியம்தான் கிராமத்திற்குச் சென்று, அதன் பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டு நேசிக்க வைத்தது. திருமணம் முடிந்து நான் என் கணவர், மாமியார் அவரது அக்கா, அண்ணன் என ஆறு பேரும் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். திருமணமாகி மூன்று வருடத்திற்கு எந்த ஒரு சேமிப்பும் செய்யவில்லை.

குழந்தைகளின் எதிர்காலம், படிப்பு போன்றவற்றை எண்ணி கூட்டுக் குடும்பத்தில் இருந்த நாங்கள் தனியாக ஒரு மனை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் எங்களுக்கு எந்தவித சேமிப்போ, சொத்தோ இல்லை. தவிர, என் கணவருக்கு அப்போது 10,000 ரூபாய்தான் சம்பளம். இதில் வீட்டுச் செலவுகள் செய்துவிட்டு, மீதமான பணத்தைச் சேமிப்புக்காக வைத்துவிடுவேன். எந்தவித ஆடம்பரச் செலவுகளும் செய்ய மாட்டேன்.

வீடு கட்ட நிறைய பணம் தேவைப்பட்டது. கொஞ்சம் வீட்டுக் கடன் வாங்கினோம். என்னிடம் இருந்த எல்லா நகைகளையும் விற்றுவிட்டேன். என் இரண்டு குழந்தைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் எனக்கு நகை தேவைப்படாது என்று நினைத்தே நகைகளை விற்றேன். தவிர, வெளியில் கடனுக்கு வாங்கி வட்டி கட்டுவதைவிட நம் கையிலிருக்கும் நகையை விற்பது நல்ல யோசனைதானே!

திருமதி எஃப்.எம்.

ஆனால், அந்த சமயம் பார்த்து என் மகனுக்கு உடம்புக்கு முடியாமல் போய் நிறைய மருத்துவச் செலவு வந்தது. சேமிப்பு எதுவுமே கையில் இல்லாத நிலையில் நான் கிட்டத்தட்ட திக்குமுக்காடித்தான் போனேன். அப்போதுதான் முடிவு செய்தேன், இனி எத்தனை கஷ்டம் வந்தாலும் என் குழந்தைகளுக்காகவாவது சேமிக்க வேண்டும். தபால் நிலையம் மூலம் என் இரண்டு பிள்ளைகளின் பெயரிலும் பணம் சேமிக்க ஆரம்பித்தேன்.

வீடு கட்டிய பிறகு வந்த சில பண நெருக்கடியின்போது நானும் வேலைக்குப் போகலாம் என்று நினைத்தது உண்டு. ஆனால், மகனின் உடல்நிலையை நினைத்தும், அவனை சரியாக கவனிக்க முடியாது என்று நினைத்தும் வேலைக்குப் போக வேண்டாம் என முடிவு எடுத்தேன்.

இந்நிலைமையில் என் கணவரும் டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியர் ஆனார். வருமானம் உயர,  உயர    அஞ்சல்

அலுவலகச் சேமிப்பு விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொண்டு சேமிப்பை அதிகப்படுத்தினேன். அஞ்சலகச் சேமிப்பு முதிர்வடைந்ததும் அதைக் கொண்டு நகை வாங்கினேன். பிள்ளைகளின் படிப்புக்காகவும் தனியாகச் சேமித்து வைத்திருந்தேன். இப்போதும் ஐந்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.யை போஸ்ட் ஆபீஸில் போட்டு வருகிறேன்.

இப்போது வருடம் போனதே தெரியலை. பசங்க பெரிய பிள்ளைகளாக வளர்ந்துட்டாங்க. பெரிய மகன் கௌதம் இன்னும் ஒரு வருஷத்துல காலேஜ் படிச்சு முடிச்சுடுவான். இரண்டாவது மகன் கௌசிக் சென்னையில இரண்டாம் வருஷம் பி.இ. படிக்கிறான். அவங்க படிப்புக்கு தபால் நிலைய சேமிப்புதான் பெரிய உதவி பண்ணியிருக்கு.  

திருமதி எஃப்.எம்.

இப்பகூட எங்க எதிர்காலத் தேவைக்கு இன்னும் எப்படி யெல்லாம் சேமிக்கலாம்னு விசாரிச்சுட்டு வர்றேன். பசங்க படிப்பு முடிந்து, அவங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும். இப்ப மாடி வீடு, கார் என வசதியாக இருக்கிறோம் என்றால் அதற்கு நாங்கள் கஷ்டப்படுற நேரத்துலயும் சிறுக, சிறுக சேமிச்சதுதான் காரணம். இப்ப உள்ள காலக் கட்டத்துல பார்த்தா எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பசங்க அதிக அளவில் சேமிக்க வேண்டிய நிலைமை வரும்.

முன்பு குடும்பத்தில் எந்த ஒரு பொருள் வாங்குவதாக இருந்தாலும் நானும், என் கணவரும் ஆலோசித்து வாங்குவோம். ஆனா, இப்ப என் பிள்ளைகளுடன் ஆலோசித்து வாங்குறோம். அப்பதான் அவங்களுக்கும் பணத்தின் மதிப்பு புரியும். எதையும் யோசித்து வாங்குறப் பழக்கமும் அவங்களுக்கு வரும். இப்ப உள்ள நிலவரத்துக்குச் சேமிப்பு, சிக்கனம் இரண்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்பதான் சிக்கலில்லாம வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியும்'' என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் கலைமதி.

மா. நந்தினி,
  படங்கள்: இ.ராஜவிபீஷிகா

திருமதி எஃப்.எம்.


வெற்றியின் ரகசியம்!  

பிஸினஸில் ஜெயிக்க வார்த்தை ஜாலமாகப் பேச வேண்டும்; தயங்கி நின்றால் ஜெயிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

ஸாரி, உங்கள் கருத்தை மாற்றிக் கொண்டாக வேண்டிய நேரம் வந்து விட்டது.  அமெரிக்காவின் பிஸினஸ் மேதைகள் பல ஆண்டுகள் செய்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

கூச்ச சுபாவம் கொண்டவர்கள் தங்கள் பிரச்னைகளை அலசி ஆராய்கிறார்கள். தங்களுடைய ஒவ்வொரு அடியையும் கவனத்தோடு எடுத்து வைக்கிறார்கள். இதனால், பிஸினஸில், மற்றவர்களைவிட வெற்றி வாய்ப்பு அதிகமாகிறது.

கூச்ச குணம் கொண்ட பிஸினஸ்மேன்களில் சிலர்  உலகப் பெரும் பணக்காரர்களாக முன்னணியில் நிற்கும் பில்கேட்ஸ், வாரன் பஃபெட், கூகுள் நிறுவனத் தலைவர் லாரி பேஜ்!

தைரியமா பிஸினஸ் தொடங்குங்க, வெற்றி உங்கள் வசப்படும்.

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு