பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக் ஹோம்ஸ்

'வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. வீட்டில் கரன்ட் வேறு இல்லை. எனவே, நடேசன் பூங்காவிற்கு வந்திருக்கிறேன். உடனே கிளம்பி வரமுடியுமா?’ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார் ஷேர்லக். அடுத்த நிமிடமே பூங்காவை நோக்கி பறந்தோம். பூங்காவில் மரத்தடியில் ரிலாக்ஸ்ட்-ஆக உட்கார்ந்திருந்தவருக்கு அருகே நாமும் உட்கார்ந்தோம்.

##~##
''இ
ந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களில் இறக்கம் கண்ட சந்தை ஒரே நாளில் இப்படி எகிறிவிட்டதே, என்ன காரணம்?'' என்று ஆரம்பித்தோம்.

''சர்வதேச அளவில் இரண்டு காரணங்கள், இந்திய அளவில் மூன்று காரணங்கள் என ஐந்து காரணங்கள். கிரீஸ் பிரச்னையைத் தீர்க்க. கடன் கொடுத்த தனிநபர்களில் 95 சதவிகிதம் பேர் முப்பது சதவிகித கடனைத் தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டிருப்பது; சீனாவின் பணவீக்க விகிதம் கடந்த இருபது மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.2 சதவிகித அளவுக்கு குறைந்திருப்பதால், அங்கு வங்கி நடைமுறைகளுக்கான கட்டுப்பாடுகள் குறையும் என்கிற எதிர்பார்ப்பு வலுத்திருப்பது; நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு பங்கு (எம்.சி.எக்ஸ்.) 30 சதவிகிதத்துக்கு மேல் பட்டியலிடப்பட்ட முதல் நாளன்றே உயர்ந்தது; எல் அண்ட் டி நிறுவனத்தின் புதிய எம்.டி. மற்றும் சி.இ.ஓ.ஆக வெங்கடராமன் என்பவரை நியமித்தது; டாடா ஸ்டீல் உருக்கு விலையை அதிகரித்ததுதான் அந்த ஐந்து காரணங்கள்..!

ஆனால், இந்த திடீர் ஏற்றம் அடுத்த வாரம் தொடருமா என்பது சந்தேகமே! அடுத்த சில நாட்களில் பட்ஜெட் தாக்கல் ஆகப் போவதால், அடுத்த வாரம் முழுக்க சந்தையில் ஏற்றி, இறக்குவது சர்வசாதாரணமாக நடக்கும். எனவே, முதலீட்டாளர்கள் பட்ஜெட் முடியும் வரை பொறுமை காப்பது நல்லது!'' என்றவர், தலையை சுற்றி மொய்க்க ஆரம்பித்த கொசுக்களை விரட்டினார்.

''பட்ஜெட் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஏதாவது..?'' என்று இழுத்தோம்.

''தனிநபர்களுக்கான வரி விலக்கு வரம்பை 1.8 லட்ச ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்தும் நிலைக்குழுவின் பரிந்துரை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார்கள். அது நிறைவேறினால் லட்சக்கணக்கான மாதச் சம்பளக்காரர்கள் லாபமடைவார்கள்'' என்று பேசிக் கொண்டே வந்தவருக்கு கைகுலுக்கி வாழ்த்து சொன்னோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''மார்ச் 15-ம் தேதி நடக்க இருக்கிற பொருளாதார ஆய்வுக் கூட்டத்துக்கு முன்பே சி.ஆர்.ஆர்.-ஐ ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று நீங்கள் சொன்னது அப்படியே நடந்துவிட்டது. அதற்குத்தான் இந்த கைகுலுக்கல்'' என்றோம்.  

''சரிதான், பணப் புழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக ஆர்.பி.ஐ. கடந்த இருபது நாட்களில்  இரண்டாவது முறையாக சி.ஆர்.ஆர்-ஐ 0.75% அளவுக்கு குறைத்திருக் கிறது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என பலரும் புகழ்ந்திருக்கிறார்கள். இதனால் 48 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு கிடைக்கும். ஆனால், வெறும் சி.ஆர்.ஆர்-ஐ மட்டும் குறைத்து என்ன புண்ணியம்? வட்டியைக் குறைத்தால்தானே  எல்லோரும் வேகமாக கடன் வாங்கத் தொடங்குவார்கள் என்று புலம்புகிறார்கள்'' என்றவர், தன் அருகில் வைத்திருந்த வாட்டர் பேக்கிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தார்.

''கடந்த வாரத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் பெரிய அளவில் பங்குகளை விற்றதாகச் செய்தி வருகிறதே!'' என்றோம்.

''உண்மைதான். கடந்த சில நாட்களில் மட்டும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் கம்பெனி போன்றவை 19,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கின்றன. இதில் எல்.ஐ.சி.யின் பங்கு மட்டும் 60 முதல் 70 சதவிகிதம் இருக்கும் என்கிறார்கள். பங்கு விலக்கலை மேற்கொள்ளும் பொதுத்துறை பங்குகளில் முதலீடு செய்யத் தேவையான பணத்தைத் திரட்டவே எல்.ஐ.சி. இப்படி விற்றுத் தள்ளியிருக்கிறது'' என்றவரிடம், ''வங்கிப் பங்குகள் லாபத்தை அள்ளித் தந்துகொண்டே இருக்கிறதே, இப்போதும் வாங்கிப் போடலாமா?'' என்று கேட்டோம்.

''ஜனவரி முதல் பல வங்கிப் பங்குகள் 30 சதவிகிதத்துக்கும் மேல் லாபம் தந்திருக்கிறது. ஆர்.பி.ஐ. விரைவில் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்பதால் இந்த லாபம் தொடர வாய்ப்பிருக்கிறது. ஆனால், வங்கிகளின் வாராக் கடன் விகிதமும் அதிகரித்து வருவதையும் நாம் மறந்துவிடக் கூடாது...!'' என்று எச்சரித்தார்.

''எல் அண்டி டி நிர்வாகத்தின் தலைவராக ஒரு தமிழர் தேர்வாகி இருக்கிறாரே?'' என்று கேட்டோம்.

''நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், இவருக்கு 67 வயதாகிவிட்டது. தலைமைப் பொறுப்பில் இளைஞர்களை நியமித்தால்தானே புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி இருக்கும்! என்கிறார்கள் வேறு சிலர். பார்ப்போம், நம்மூர்க்காரரின் திறமையை!'' என்றவர், ''கடந்த வாரம் கேபிள் அண்ட் வயர்லெஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் முயற்சி எடுத்து வருவதாகச் சொன்னேன். அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மார்ச் மாத இறுதியில் இதற்கான முறையான அறிவிப்பு வரலாம். இந்த நிறுவனத்தை வாங்க பணத்தைத் திரட்டும் முயற்சியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது'' என்றார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

பேச்சு சுவாரஸ்யத்தில் இருட்டியதுகூட நமக்கு தெரியாமல் போக, பட்ஜெட்டை ஒட்டி உயர வாய்ப்புள்ள சில பங்குகளை சொன்னார்.

''ஷிப்பிங் துறைக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் இருக்கும் போல தெரிகிறது. அப்படி நடந்தால்  ஏ.பி.ஜி. மற்றும் பார்தி ஷிப்யார்டு நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். அதேபோல ராணுவத்துக்கு செலவழிக்கும் தொகையைக் குறைக்காமல் இருக்கும் பட்சத்தில் பி.இ.எல். பங்கு சிறிய ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், ரயில்வே துறைக்கு கூடுதல் சலுகைகளை அறிவிக்கும் போது ஏ.பி.பி., பி.இ.எம்.எல்., சீமன்ஸ் உள்ளிட்ட பங்குகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது'' என்றார்.

இரவு வந்துவிட்டது, எங்களைத் தூங்கவிடுங்கள் என காகங்கள் கத்த ஆரம்பிக்க, ஷேர்டிப்ஸ்... என்றபடி கையை நீட்டினோம்.

''பட்ஜெட்டை முன்வைத்து அடுத்த வாரம் சந்தையில் ஏற்றி, இறக்கும் வேலை ஜரூராக இருக்கும். எனவே, ஷேர்டிப்ஸ் வேண்டாமே!'' என்றார்.

அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு