Published:Updated:

மின் விடுமுறை: 50,000 கோடி நஷ்டம்?

மின் விடுமுறை: 50,000 கோடி நஷ்டம்?

பிரீமியம் ஸ்டோரி
மின் விடுமுறை: 50,000 கோடி நஷ்டம்?

தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் மின் தட்டுப்பாட்டினால் பரிட்சைக்குப் படிக்கும் மாணவர்களும், பச்சிளம் குழந்தைகளும், வயதான பெரியவர்களும் மட்டுமல்ல, தொழிலாளர்களும் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்திருக்கின்றனர்.  

##~##
ந்நிலையில் வாரம் ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்குக் கட்டாய மின் விடுமுறையை அரசாங்கம் அறிவிக்க, ஏறக்குறைய முடங்கிக் கிடக்கிறது தொழிற்துறை. இதனால், தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் உற்பத்தி இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல.

மின் தட்டுப்பாட்டினால் தமிழகத்தின் தொழிற்துறை எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதை அறிய பல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசினோம். நாம் முதலில் பேசியது, கோவை மாவட்ட சிறு தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இளங்கோவுடன்.  

மின் விடுமுறை: 50,000 கோடி நஷ்டம்?

''மின் பற்றாக்குறையினால் எங்களது உற்பத்தி முற்றிலுமாக முடங்கிவிட்டது. நூற்பாலைகள், உருக்காலைகள், அதைச் சார்ந்த தொழில்கள் என கிட்டத்தட்ட நாற்பதாயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. சரியான நேரத்திற்கு ஆர்டர்களை கொடுக்க முடிவதில்லை என்பதால், தொழில் தருபவர்கள் கோவை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஆர்டர்களை நிறுத்துகிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி நம் கையை விட்டுப் போகும் ஆர்டர்கள் குஜராத் நிறுவனங்களுக்குப் போகின்றன. மோட்டார் பம்பு உற்பத்தியில் இந்திய அளவில் கோவைதான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், இன்று அந்த இடத்தை குஜராத் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியே போனால் தமிழகம் தொழிற்துறையில் பின்தங்குவது உறுதி'' என்று எச்சரித்தார் இளங்கோ.

தொடரும் இந்த மின் வெட்டினால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்கினார் தமிழ்நாடு மின் பயன்பாட்டாளர் சங்கத் தலைவர் மகேந்திர ராமதாஸ்.

''கடந்த வருடங்களில் தினசரி நான்கு மணி நேரமாக இருந்த பீக்ஹவர் மின்வெட்டு, கடந்த சில மாதங்களாக 14 மணி நேரத்திற்கு மேலாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 75 சதவிகிதத்திலிருந்து 78 சதவிகிதம் வரை மின்வெட்டு தொடர்கிறது. உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே மின்சாரம் அனுமதித்தார்கள். தற்போது இது 38 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

மின் விடுமுறை: 50,000 கோடி நஷ்டம்?
மின் விடுமுறை: 50,000 கோடி நஷ்டம்?

ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஜெனரேட்டர் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் எடுக்க 16 ரூபாய் வரை செலவாகும். இதுவும் எங்களுக்கு சாத்தியமில்லை.

மின் வாரியத்தால் புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் மின் விடுமுறை திட்டமும் தொழில் நிறுவனங்களைப் பாதிப்பதாகவே இருக்கிறது. கோவையின் ஒருநாள் மின் தேவை 800 மெகாவாட். ஆனால், விடுமுறை அறிவிக்கப்பட்ட முதல் நாளே நாங்கள் மட்டுமே 750 மெகாவாட் மின்சாரத்தைச் சேமித்து கொடுத்தோம்.  

மின் விடுமுறை: 50,000 கோடி நஷ்டம்?

எங்களுடைய தேவைகளை சமாளிக்க தனியாரிடம் மின்சாரம் வாங்கிக் கொள்ளலாம் என்றால், அதற்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்வது என்று புரியவில்லை. இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக் கிறோம். இதனால் அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக கூடங்குளம் மின் திட்டத்தையும் செயல் படுத்தினால்தான் ஓரளவிற்காவது தாக்குப்பிடிக்க முடியும்!'' என்றார் மகேந்திர ராம்தாஸ்.

தமிழ்நாடு ஊரக தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் சங்கத் தலைவர் ஜேம்ஸிடம் பேசினோம்.

''கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வரும் அசாதாரணமான மின்வெட்டு           காரணமாக வேறு தொழிலைத் தேடிப் போகிற நிலைமைக்கு  தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த மூன்று மாதங்களுக்கு எங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எங்கள் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் போய்விட்டதே!'' என்று வேதனைப்பட்டார்.

கோவை மட்டும் அல்ல, சென்னையைச் சுற்றியுள்ள அம்பத்தூர், ஒரகடம் பகுதிகளிலும் பல தொழிற்சாலைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாக தொழிற்சாலை தொடங்குமா என்பது சந்தேகம்தான். அண்மையில்கூட ஒரு வெளிநாட்டு நிறுவனம், அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு, கடைசியில் குஜராத்திற்கு ஓடிய தற்கு ஒரு முக்கிய காரணம் இந்த மின்தட்டுப்பாடுதான். எனவே, இனி வேறு ஏதாவது நிறுவனம் இங்கு வந்து புதிய தொழிற்சாலை அமைக்குமா என்பது கேள்விக்குறிதான்!

மின் விடுமுறை: 50,000 கோடி நஷ்டம்?

இது ஒருபக்கமிருக்க, தமிழகம் முழுக்க டீசலை பயன்படுத்தி பலரும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறார்கள். இதனால் டீசலின் தேவை கடந்த இரு மாதங்களில் மட்டும் 12% அளவுக்கு உயர்ந்திருக்கிறதாம். ஒரே சமயத்தில் டீசலின் தேவை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதால், அதன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்களுக்கு அதிகப்படியான செலவு; நம் அந்நியச் செலாவணியும் தேவை இல்லாமல் வெளிநாட்டுக்கு போகிறது.  

மின்சார பிரச்னையில் தமிழக அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் ஏதாவது செய்தால் மட்டுமே தமிழக தொழிற்துறையையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற முடியும். பல ஆயிரம் கோடி ரூபாய்

உற்பத்தி இழப்பையும் தவிர்க்க முடியும்.

- நீரை.மகேந்திரன்.
படங்கள்: வி.ராஜேஸ், செ.பாலநாக அபிஷேக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு