பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி

கடந்த வாரத்தில் அதிக ஏற்ற, இறக்கத்தைக் கண்ட தங்கம் பற்றி விளக்கமாக இங்கு கூறுகிறார் மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன்.

##~##
''த
ங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வருகிறது. அமெரிக்காவில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்ட போது தங்களது பணத்திற்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதுபோல் தங்கத்தை வாங்கி வைத்தனர். ஆனால், தற்போது சூழ்நிலைகள் மாறி வருகிறது. அமெரிக்காவின் பொருளாதாரச் சிக்கல்கள் சற்று சீராக வருவதால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் விலை பெரும்பாலும் அமெரிக்காவின் பொருளாதாரப் புள்ளிவிவரங்களைக் கொண்டே முடிவாகிறது என்றாலும், இந்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது கடந்த வாரங்களிலும் பிரதிபலித்தது. அதாவது, உலகளவில் தங்கத்தை அதிகளவில் வாங்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கும் நிலையில், இந்த இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கத்தின் தேவையைக் குறைக்கும் என முதலீட்டாளர்கள் நினைத்தார்கள்.

கமாடிட்டி

அடுத்த முக்கிய காரணம், கச்சா எண்ணெய் விலை குறைவு. அமெரிக்காவும், ஐரோப்பாவும் தங்கள் வசமிருக்கும் கச்சா எண்ணெய்யை வெளியிடப் போவதாக ஒப்பந்தம் போட்டதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் டாலரின் மதிப்பு உயர்வது போன்ற முக்கிய காரணங்களால்தான் தங்கம் விலை இறங்கியது.

பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏறியிறங்கி பாதிப்புக்குள்ளாவதால், அடுத்த மூன்று மாதங்களில் விலை அதிகரித்தால் பத்து கிராம் 28,500 ரூபாய்க்கும், விலை குறைந்தால் 27,000 ரூபாய்க்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது'' என்றார்.  

கமாடிட்டி


மிளகு!

கடந்த வாரத்தில் மிளகு விலை குறைந்து வர்த்தகமானது. இந்திய மிளகைவிட வியட்நாம் மிளகு அதிகளவில் குறைந்த அளவில் கிடைத்ததால் அதையே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கினார்கள். இந்திய மிளகு ஒரு டன் 8,500 டாலருக்கும், வியட்நாம் மிளகு ஒரு டன் 6,400 டாலருக்கும் விலை போனது.  

இது தவிர, ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன், சில கமாடிட்டி பொருட்களின் அபரிமிதமான விலையுயர்வு பற்றி விசாரிக்கப் போவதாக அறிவித்தது. இதில் மிளகின் விலையேற்றம் பற்றியும் விசாரிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக விலை குறைந்தது.

இருப்பினும், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் புதிய மிளகை இன்னும் விற்பனைக்குக் கொண்டு வராமல் இருப்பதால், வரும் வாரத்தில் சப்ளை குறைந்து விலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நூறு கிலோ மிளகு 39,500 ரூபாய்க்கு அருகில் கடந்த வாரத்தில் வர்த்தகமானது.

கமாடிட்டி


ஜீரா!

கடந்த வருடத்தைவிட இந்த வருடம் ஜீரா விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டதால் விலை குறைந்தது. கடந்த வருடம் 28 லட்சம் (1 பை = 60 கிலோ) பைகள் உற்பத்தியான  ஜீரா இந்த வருடம் 35 லட்சம் பைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலவகையான தகவல்கள் பரவுவதால் ஃபியூச்சர் மார்க்கெட்டில் ஜீரா வர்த்தகம் பாதிப்புள்ளாகி உள்ளது.

புதிய ஜீரா வரத்து அதிகரிக்கும்போதுதான் வர்த்தகம் சூடு பிடிக்கும் என கூறப்படுகிறது. எனினும், ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளதால் விலை மேலும் குறையாமல் இருந்தது. ஏப்ரல் 2-ம் தேதிக்கு பிறகே ஜீரா வர்த்தகம் சூடு பிடிக்கும் என்பதால் அந்த வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

கமாடிட்டி


ஏலக்காய்!

நிதியாண்டின் இறுதி வாரம் என்பதால் ஏலக்காய் விலை சென்ற வாரத்தைவிட குறைந்தது.  ஏலக்காய் விளையும் முக்கிய பகுதிகளில் சீதோஷ்ண நிலை சரியில்லாத காரணத்தால் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. ஏலக்காய் விளையும் மாநிலமான கேரளாவின் இடுக்கியில் மூன்றில் ஒரு ஏலக்காய் செடி காய்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக ஏற்றுமதி ஆர்டர்கள் இருப்பதாலும், உற்பத்தி விலை அதிகரித்திருப்பதாலும் வரும் வாரங்களில் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. 2011-2012-ம் ஆண்டில் ஏலக்காய் ஏற்றுமதி 2,500 டன்னாக இருந்ததாக ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. மார்ச் 30-ம் தேதி நிலவரப்படி ஒரு கிலோ 1,154 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கமாடிட்டி


மஞ்சள்!

மஞ்சள் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் தான் இருக்கிறது. சத்தியமங்கலம், சிவகிரி, பவானி சாகர் போன்ற பகுதிகளில் மஞ்சள் அறுவடை முடிந்து ஏப்ரல் முதல் வாரத்தில் வரத் துவங்கி மாத இறுதியில் அதிகளவில் வரத்து அதிகமாகும். ஆந்திர மாநில கோ-ஆப்ரேட்டிவ் மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் 5,400 டன் மஞ்சளை டன் 4,000 ரூபாய்க்கு ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கொள்முதல் செய்ய இருப்பதாக அறிவித்ததன் விளைவாக விலை இன்னும் இறங்காமல் போனது.

மேலும் ஆந்திராவில் துக்கிரலா, நிஜாமாபாத் மற்றும் மேட்பல்லி ஆகிய மூன்று இடங்களில் கொள்முதல் மையங்களை மாநில விவசாய மார்க்கெட்டிங் ஏஜென்ஸி தொடங்க இருக்கிறது. எனவே, விலை மேலும் இறங்காமல் தாக்குப் பிடிக்கும் என கூறப்படுகிறது.

- பானுமதி அருணாசலம்

கமாடிட்டி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு