Published:Updated:

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

பிஸினஸ் வரலாறு

பிரீமியம் ஸ்டோரி
பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!
பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!


செழிப்பான பிரதேசத்தில் பிறப்பவர்கள்தான் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்கிற எந்த கட்டாயமும் இல்லை. எந்த வளமும் இல்லாத வறட்டு பூமியில் பிறந்தவர்களும் சாதனைச் சிகரத்தின் உச்சியைத் தொட முடியும் என்பதற்கு ஓர் உதாரணம்தான், எல்.ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு. இன்றைக்கு எல்.ஜி. குழும நிறுவனங்களின் சாம்ராஜ்யம் இந்தியா முழுக்க மட்டுமல்ல, உலகம் முழுமைக்குமே பரந்து விரியக் காரணம் எல்.ஆர்.ஜி.நாயுடுதான்!

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

கோவை சூலூருக்கு அருகில் உள்ள லட்சுமிநாயக்கன் பாளையத்தில் 1896-ல் பிறந்தார் எல்.ஆர்.ஜி. இந்த சின்ன ஊர், வறட்சியின் புகலிடம் என்றே சொல்லலாம். ஆடு மேய்க்கக்கூட லாயக்கற்றது இந்த ஊரின் நிலம். அடிப்படை வசதிகள் எதுவுமே இங்கு இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்றால்கூட இங்கிருந்து பதினைந்து, இருபது கிலோ மீட்டர்கள் போக வேண்டும் எனில், 110 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

பள்ளியில் தொடர்ந்து படிக்கிற வசதி எல்.ஆர்.ஜி.க்கு இல்லை என்றாலும், சோர்வில்லாமல் உழைக்கும் மனது இருந்தது. கோடு போட்டால் ரோடு போடும் திறமை இருந்தது. எல்லோருக்கும் முன்னோக்கி மட்டுமே செல்லத் தெரிந்த போது இவருக்கு மட்டுமே பின்னோக்கியும் செல்லத் தெரிந்திருந்தது.

##~##
இவர், இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று புகழப்படும் ஜி.டி.நாயுடுவின் சொந்தக்காரர். ஜி.டி.நாயுடு பருத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டு, பெருத்த நஷ்டத்தோடு மும்பையிலிருந்து கோவைக்குத் திரும்பி, வெள்ளைக்காரர் ராபர்ட் ஸ்டேன்ஸின் உதவியுடன் ஒரு பஸ் வாங்கி அதை பொள்ளாச்சி - பழனிக்கு இடையே இயக்கினார் அல்லவா? இந்த பஸ்ஸில் கண்டக்டராக  இருந்தவர்தான் எல்.ஆர்.ஜி.

இந்த பஸ் சர்வீஸை சிறப்பாக நடத்தியதன் விளைவு, அடுத்த சில மாதங்களிலேயே இரண்டாவது பஸ் வாங்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டனர். கூடவே, அவர்கள் இருவருக்குள் கருத்து வேறுபாடும் வந்தது. இருவரும் பிரிந்து, தனித்தனியாக தொழிலை மேற்கொள்கிற அளவுக்கு நிலைமை போனது.

தனக்கு நன்கு தெரிந்த பஸ் சர்வீஸையே தன் தொழிலாகத் தேர்வு செய்து கொண்டார் எல்.ஆர்.ஜி. ஆனால், ஜி.டி.நாயுடுவின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி அவர் பஸ் சர்வீஸ் நடத்தாதப் பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்கினார். உதாரணமாக, ஜி.டி.நாயுடுவின் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் கோவை- பாலக்காடு பகுதிகளில் பஸ் சர்வீஸ் நடத்த, எல்.ஆர்.ஜி.யோ மதுரை-திருச்சி போன்ற வழித்தடங்களில் பஸ்களை இயக்கினார்.

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

திருப்பூரில் கோபால்டு, டி.கே.டி., சி.எம்.டி. என்கிற பெயரில் பஸ் சர்வீஸ்களைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தினார்.

தமிழகத்தில் மட்டுமல்ல, ஆந்திராவில் இந்துப்பூர் பகுதியில் ராயலசீமா டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் என்கிற பெயரில் ஒரு பஸ் கம்பெனியை நடத்தினார். ஒரு கட்டத்தில் எல்.ஆர்.ஜி.யின் வரதராஜ் மோட்டார் சர்வீஸ் கம்பெனியிடம் 250 பஸ்களுக்கு மேல் ஓடிக் கொண்டிருந்தது.

1937-ல் திண்டுக்கலில் மெஜுரா பப்ளிக் கன்வேயன்ஸ் என்கிற பெயரில் தனியாக பஸ் கம்பெனியை ஆரம்பித்தார். அடுத்து கரூரில் ஒரு பஸ் கம்பெனியைத் தொடங்கும் சமயத்தில், எல்.ஆர்.ஜி.க்கு புதிய பிஸினஸ் ஐடியா வந்தது.

'ஒவ்வொரு முறையும் வேறு யாரிடமோ நாம் பஸ் வாங்குகிறோம். பஸ்ஸுக்குத் தேவையான இன்ஜினை மட்டும் வாங்கிவிட்டு, பஸ்ஸை நாமே தயார் செய்தால் என்ன?’ என்று யோசித்தார் எல்.ஆர்.ஜி. சர்வீஸ் துறையிலிருந்து இன்ஜினீயரிங் துறையில் கால் பதிக்க வைத்தது எல்.ஆர்.ஜி-யின் இந்த யோசனை.

தவிர, இந்த நேரத்தில் எல்.ஆர்.ஜி.-யின் மகன்களும் வளர்ந்து பெரியவர்களாகி இருந்தனர். எல்.ஆர்.ஜி.யின் மனைவி ரங்கநாயகி, ஜி.டி.நாயுடுவின் சொந்த கிராமமான கலங்கலைச் சேர்ந்தவர். சிக்கனத்திற்குப் பெயர் போன இவர், தன் கணவர் பிஸினஸுக்காக அலைந்தபோது குழந்தைகளை நல்லபடியாகப் படிக்க வைத்து ஆளாக்கியவர்.  

எல்.ஆர்.ஜி.யின் மகன்களான பாலகிருஷ்ணன், வரதராஜுலு, ராமமூர்த்தி, நித்தியானந்தம் என நால்வருமே பிஸினஸில் கில்லாடிகளாக இருந்தனர். 1940-க்குப் பிறகு எல்.ஆர்.ஜி.யின் மகன்கள் பிஸினஸில் அதிக ஆர்வத்தோடு செயல்பட்டு, அவரது பிஸினஸை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

எல்.ஜி.பாலகிருஷ்ணன் அண்ட் பிரதர்ஸ் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம் பாடி பில்டிங்கை திறம்பட செய்துவந்த வேளையில், அடுத்தடுத்து மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான உபகரணங்களை தயாரித்து புதுமை படைக்க ஆரம்பித்தது.

இன்றைக்கு ஆட்டோ மற்றும் இன்ஜினீயரிங் துறைக்குத் தேவைப்படும் செயின்கள், பல்சக்கரங்கள் என முக்கியமான பல ஆட்டோமொபைல் பாகங்களை தயார் செய்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் ஏற்றுமதி செய்கிறது. ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுபேக்ஸரிங் (ஓ.இ.எம்.) பிரிவில் 70 சதவிகித மார்க்கெட் ஷேரையும், ரீப்ளேஸ்மென்ட் பிரிவில் 50 சதவிகித மார்க்கெட் ஷேரையும் வைத்திருக்கிறது. இன்றைக்கு இந்நிறுவனத்தின் டேர்ன்ஓவர் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல்.

எல்.ஆர்.ஜி.யின் இரண்டா வது மகன் வரதராஜுலு, 1960-ல் தொடங்கியதுதான் எல்.ஜி. குரூப் நிறுவனம். தொழிற்சாலை களுக்குத் தேவையான கம்ப்ரஸ்ஸர்களை தயாரிப்பதில் இந்த நிறுவனம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இவை மட்டுமல்ல, எல்.ஜி. எக்யூப்மென்ட் என்கிற நிறுவனம் லைட் இன்ஜினீயரிங் துறைக்குத் தேவையான உபகரணங் களைத் தயாரிக்கிறது.எல்.ஜி. எலெக்ட்ரிக் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் மோட்டார், ஆல்ட்டர்னேட்டர், ஜெனரேட்டர் போன்றவற்றைத் தயாரிக்கிறது.

எல்.ஜி. அல்ட்ரா இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் அல்ட்ரா கிரைண்டர் உள்பட பலவற்றைத் தயாரிக்கிறது.  ரப்பர் டயர் உற்பத்தி செய்யும் எல்.ஜி.டிரேட் இந்தியா நிறுவனம் என பல நிறுவனங்களை கிளை பரப்பி, அதன் பிஸினஸ் சாம்ராஜ்யத்தை விரித்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் டேர்ன்ஓவர் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல்.

எல்.ஆர்.ஜி.யின் மகன்கள் மட்டுமல்ல, பேரன், பேத்திகளும் இன்று அந்த சாம்ராஜ்யத்தை இன்னும் பெரிதாக விரித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்.ஆர்.ஜி.யின் இரண்டாவது மகனான வரதராஜுலுவின் மகள்தான் வனிதா மோகன். இவர் துணைத்தலைவராக இருக்கும் 'பிரிக்கால்’ நிறுவனம், இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுபேக்ஸிரிங் உபகரணங் களைத் தயார் செய்வதிலும் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது.

கோவையில் இன்ஜினீயரிங் தொழில் உள்ளவரை எல்.ஆர்.ஜி.யின் பெயரை யாரும் மறக்க முடியாது என்பது நாயுடு சமூகத்தினருக்கே பெருமை!

(அறிவோம்)

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!


ஜப்பானின் நம்பர் ஒன் ரகசியம்!

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

தொழில் உற்பத்திக்குத் தேவையான இயற்கை வளங்கள் பல ஜப்பானில் கிடையாது.  இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம். இறக்குமதிதான் அந்நாட்டின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிர் மூச்சு. பெட்ரோலியம், கரி, அலுமினியத் தாது, தகரம், நிக்கல், இரும்புத் தாது என எல்லாமே இறக்குமதிதான்.

முழுக்க முழுக்க இரும்புத் தாதுவை இறக்குமதி செய்து உருக்கு தயாரிக்கும் ஜப்பான், உலக உருக்கு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. எப்படி? பிற நாடுகளில் தாது மட்டும்தான் மூலப் பொருள். ஜப்பானிலோ, தாதுவோடு கடும் உழைப்பும், அர்ப்பணிப்பும் மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதால்தான்.

உழைப்பும் முன்னேறத் துடிக்கும் வெறியும் இருந்தால், எது இல்லை என்றாலும் நீங்கள் நம்பர் ஒன்னாக இருப்பீர்கள்!

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு