Published:Updated:

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

பிரீமியம் ஸ்டோரி

நிதி திரட்டும் வித்தைகள்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

கடந்த சில ஆண்டுகளில் அசாதாரண வளர்ச்சி கண்டிருக்கும் தொழிற் துறை ரியல் எஸ்டேட் பிஸினஸ். தன் வாழ்நாளில் ஒரு வீடு வாங்கினாலே ஒரு பெரிய சாதனை என்றிருந்த நிலைமை மாறி, இன்றைய இளம் தலைமுறையினர் பலர் நடுத்தர வயதினிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளையோ, வீட்டு மனைகளையோ எதிர்கால முதலீடாக வாங்கிப் போடுகின்றனர்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ந்த வளர்ச்சிக்கு ஈடு தருகிற மாதிரி பல புதிய பில்டர்ஸ் மற்றும் டெவலப்பர்கள் வீடு, அபார்ட்மென்ட், வீட்டுமனை என பலவிதமான புதிய திட்டங்களை எக்கச்சக்கமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், எந்த பிளாட்டை வாங்குவது, எப்படி வாங்குவது என பலவகையான குழப்பங்கள்.

முதல் குழப்பம் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதுதான். பெரு நகரங்களிலும், டவுன்களிலும் இன்று பல வீட்டு வசதித் திட்டங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் சென்று பார்த்துவிட்டு, முடிவு செய்ய வேண்டுமெனில் பல மாதங்கள் ஆகும். ஆனால், நம் தேவைக்கேற்ப ஒரு குறும்பட்டியல் தயாரித்து அவற்றை மட்டும் ஆராய்ந்தால், வீடு தேடும் வேலை இன்னும் கொஞ்சம் எளிதாகும். ஆனால், இந்த குறும்பட்டியல் நபருக்கு நபர் மாறுபடும். நீங்களே குடியேறப் போகிறீர்கள் எனில் ஒருவிதமான வீடு, வாடகை வருமானம் வரவேண்டுமெனில் அல்லது எதிர்கால முதலீடாக நினைத்தால், வேறு விதமான வீடு என மாறும்.

##~##
உங்கள் குறும்பட்டியலின் இரண்டாவது குழப்பம் எந்த டெவலப்பரை தேர்வு செய்வது என்பது. எந்த பில்டர் கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றுகிறார்? கட்டுமானத்தின் தரத்தில் யார் அதிகம் கவனம் செலுத்து கிறார்கள்? அரசுத் தரப்பு அங்கீகாரங்கள் எல்லாம் பெறப்பட்டு இருக்கிறதா? குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி எல்லாம் முறையாகப் பெற்றிருக்கிறார்களா? என்பதை எல்லாம் அலசி ஆராய வேண்டும். இதற்கடுத்த படியாக விலை. விளம்பரம் செய்யப்பட்டுள்ள விலை நியாயமானதுதானா? அருகில் இருக்கும் மற்ற திட்டங்கள் எந்த விலையில் விற்கப்படுகின்றன? விளம்பரம் செய்யப்பட்டுள்ள விலையில் இருந்து எவ்வளவு குறைக்கலாம்? அதைக் குறைப்பதற்கான யுக்திகள் என்னென்ன? இவைபற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும்.

இப்படி ஒருவழியாக தகுந்த திட்டத்தைத் தேர்வு செய்துவிட்டால், அதற்கு அடுத்தபடியாக முடிவு செய்ய வேண்டியது, எந்த வங்கியில் இருந்து கடன் பெறலாம் என்பதுதான். இவ்வாறு வீடு வாங்கும் வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படும் தகவலையும், அவர்களுக்கு எழும்பும் சந்தேகங்களையும் தீர்த்து, வெற்றிகரமாக அவர்களுக்கேற்ற வீட்டை சரியான விலையில் வாங்க வழி செய்யும் சேவைகளுக்கு ஒரு நல்ல தேவை இருப்பதை உணர்ந்தார் பிஜு அசோகன். உடனே 'மெட்ரோப்ளாட்ஸ்.காம்’ என்று ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கினார். 2009 முதலே இத்தகைய சேவைகளை அளிக்கத் தொடங்கினார்.

பிஜு சென்னையைச் சேர்ந்தவர். 2004-ல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இரண்டு ஆண்டுகள் மென்பொருள் சேவை நிறுவனங்களான டி.சி.எஸ். மற்றும் ஹெச்.சி.எல்.லில் பணிபுரிந்தார்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

அப்போது அவருக்கு மேற்படிப்பிற்குச் செல்லும் விருப்பம் ஏற்பட்டதால், அமெரிக்காவில் உள்ள உலகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கார்னீஜ் மெல்லான் (Carnegie Mellon) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு படிக்கச் சென்றார். அங்கு அவருக்கு கணினி அறிவியல் மற்றும் இணையதளம் சம்பந்தப்பட்ட பாடங்களில் ஆர்வம் அதிகரித்தது. அதேசமயம் தொழில்முனையும் எண்ணமும் இருந்தது. 2009-ல் இந்தியா திரும்பிய பிஜு இணையதளத்தின் திறனை உபயோகப்படுத்தி நல்ல வளர்ச்சிக்கு சாத்தியமான ஒரு தொழிலைத் தொடங்க நினைத்தார். ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியும், அதில் உள்ள குறைந்த வெளிப்படைத்தன்மையும் அதைச் சார்ந்த தொழில் புரிவதற்கு நல்ல சந்தர்ப்பத்தைத் தருவதாக உணர்ந்தார்.

மெட்ரோப்ளாட்ஸ்.காம் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். வீடோ அல்லது வீட்டு மனையோ வாங்க விரும்புபவர்களுக்குத் தகுந்த திட்டங்களைத் தேர்வு செய்வது முதல், அதற்கான விலை பற்றி டெவலப்பருடன் பேசி ஒப்பந்தம் செய்தல், கடன் தரும் நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்வது வரை அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித செலவுமின்றி செய்து வருகிறது இந்நிறுவனம். சென்னையில் தொடங்கி இன்று பெங்களூரு, குர்கான், பரிதாபாத் போன்ற பல நகரங்களில் இன்று அந்த நிறுவனம் விரிவடைந்துள்ளது. ஆரம்பித்தது முதல் இன்று வரை மூன்றாண்டுகளுக்குள் 258 வீடுகளை விற்றிருக்கிறது.

இந்நிறுவனத்தை அவர் முதல் முதலாக ஆரம்பித்தபோது சொந்த முதலீடாக செய்த தொகை சுமார் 10 லட்ச ரூபாய். அடுத்த கட்டமாக அவர் நிதி திரட்டியது ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து. ஆமாம், யார் இந்த ஏஞ்சல் முதலீட்டாளர்கள்? அவர்களைப் பற்றி பார்ப்பதற்கு முன் நிறுவனத்திற்காக நிதி திரட்டும் முறைகள் பற்றி ஒன்றிரண்டு பொதுவான கருத்துக்களைச் சொல்லிவிடுகிறேன்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

முதலாவதாக, தொழில் முனைபவர்கள் நிதி திரட்டும் யுக்தி பற்றி நன்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். போருக்குச் செல்லும் படைவீரன், எதிராளியின் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு ஆராய்ந்து அதற்கேற்ப போரின் யுக்தியை தீர்மானம் செய்தாலே, போரில் வெற்றி அடைய முடியும். நிதி திரட்ட முற்படும் தொழில் முனைபவர்களோ போருக்குச் செல்லும் வீரனைக் காட்டிலும் அதிக தயாரிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் பணச் சந்தையிலிருந்து வெற்றிகரமாக நிதி திரட்டி திரும்பி வரமுடியும்.

இரண்டாவதாக, முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு முன்னால் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நம்பிக்கை என்பது கேட்டு பெறும் பண்டமல்ல; அது நம் கடுமையான மற்றும் நேர்மையான உழைப்பின் காரணமாக வருவது.

மூன்றாவதாக, எப்போது எந்த வகை முதலீட்டாளர்களை அணுக வேண்டும் என சரியாக முடிவு செய்ய வேண்டும். தவறான மரத்தைப் பார்த்து குறைக்கும் நாய் ஒரு நல்ல வேட்டை நாய் ஆகாது. அதுபோல், இடம், பொருள், ஏவல், உணர்ந்து செயல் பட்டால்தான் வெற்றிகரமாக நிதி திரட்ட முடியும். வெளி முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும்போது பங்குகள் விற்பதைக் காட்டிலும், கடனாக நிதி திரட்டுவது மேல் என்பது பொதுவான கருத்து. ஏனெனில் கடன் திரட்டுவதற்கு நாட்கள் அதிகமாகாது.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

பங்கு முதலீட்டாளர்களைக் காட்டிலும் கடன் கொடுப்போர் கோரும் வருமானமும் குறைவுதான். கடன் பெறுவதால் தொழில் முனைபவர்கள் தங்கள் நிறுவனத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டிய தில்லை. ஆனால், ஆரம்ப கால நிறுவனங்கள் கடன் பெறுவது அவ்வளவு எளிதல்ல.

தொழில்நுட்பம் அல்லது சேவைத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் ஆரம்ப காலத்தில் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுவது கடினம். முறைசாரா மூலங்களிலிருந்து கடன் பெறலாம். ஆனால், வட்டி விகிதம் குறைவாகவும், அதே சமயம், பிஸினஸில் ஓரளவிற்கு வருமானமும் இருந்தால்தானே வாங்கிய கடனிற்கு வட்டி கட்ட முடியும். உங்கள் நிறுவனம் நிரந்தர வருமானம் பெறுவதற்கு பல மாதங்கள் ஆகும் என்கிற பட்சத்தில் கடன் பெறுவது அவ்வளவு உசிதமல்ல. எளிதில் கிடைக்கிறது என்பதற்காக கடன் வாங்கி விட்டால், அப்புறம் கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகிவிடும்.

அதனால், தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறையில் செயல்படும் ஆரம்பநிலை நிறுவனங்கள், பங்குகளை விற்று நிதி திரட்டுவதே சிறந்தது. அவ்வாறு செய்ய முற்படும் இளந்தலைமுறை தொழில் முனைபவர்கள் பலர் முதலில் அணுகுவது ஏஞ்சல் முதலீட்டாளர் களையே. அதைத்தான் பிஜுவும் செய்தார்.

(முனைவோம்)

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

யுவராஜ், திருப்பெரும்புதூர்.

நான் பேப்பர் கப் தயாரிக்கும் பிஸினஸில் இறங்கலாம் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக மாதிரி பிஸினஸ் மாடலை எங்கிருந்து பெறுவது? தவிர, நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா?

''சென்னை கிண்டியில் உள்ள இந்திய அரசு நிறுவனமான MSME Development Institute ஏப்ரல் 16-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை பேப்பர் கப் மற்றும் தட்டுகள் செய்யும் பயிற்சி அளிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம். இந்த பயிற்சி வகுப்பு பற்றி மேலும் அறிய பின்வரும் 044-22501011 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இந்த பயிற்சி இத்தொழிலைச் செய்வது பற்றி உங்களுக்கு நல்லதொரு அறிவைத் தரலாம்.

ஆனால், இன்று இதுபோன்ற தொழிலை பலர் செய்து வருகின்றனர். பத்தோடு பதினொன்று, அத்தோடு நீங்களும் ஒன்று என்கிற சூழ்நிலையில் நீங்கள் இருக்க விரும்ப மாட்டீர்கள். மற்றவர்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டு இருக்க வேண்டுமென்றால், அதற்கு இத்தகைய பயிற்சி ஒரு அடிக்கல் மட்டுமே. பயிற்சியில் பெற்ற அறிவை அடிப்படையாக வைத்து நீங்கள் உங்கள் சொந்த யோசனையை கொண்டு மெருகேற்றினால்தான் இவ்வாறு ஏனைய தொழில் செய்பவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்து நிற்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.’

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!


யார் தவறு?

ரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் கட்டுப்பாடே இல்லாமல் லீவு எடுக்கிறார்கள். வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். இது யார் தவறு? தொழிலாளர்கள் தவறா, மேனேஜர் தவறா?

கி.மு. 500 காலகட்டத்தில் சீனாவில் வாழ்ந்த சன் ஸூ (Sun Tzu), யுத்தம் தொடர்பான ராஜதந்திரங்களில் மாமேதை. இவர் எழுதிய யுத்தக் கலை (Art of War) புத்தகத்தில் மேற் சொன்ன பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார்.

180 பெண்களுக்கு போர்ப் பயிற்சிகள் கொடுத்தார் சன் ஸூ.

90 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரித்தார். பயிற்சிகள் முடிந்தவுடன்,  போட்டிகள் நடந்தன. இரண்டாம் அணியைச் சேர்ந்த பெரும்பாலானோர் செமையாகச் சொதப்பினார்கள்.

திறமையுடன் விளையாடிய முதல் அணியின் வீரர்கள்  பாராட்டப்பட்டனர். இரண்டாம் அணி வீரர்களுக்குத் தண்டனை அளிக்கத் தயாரானார் அரசர். உடனே தடுத்தார் சன் ஸூ.

'மன்னரே, இரண்டாம் அணியில் எல்லோருமே தவறு செய்தார்கள். ஆக, அது அவர்கள் தவறல்ல, தலைமையின் தவறுதான். எனவே, தலைமைக்குத்தான் தண்டனை தரவேண்டும்!'' என்றார். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, யார் தவறு என்று?

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு