Published:Updated:

நேற்று... இன்று... நாளை!

குடும்ப நிதி ஆலோசனை

பிரீமியம் ஸ்டோரி
நேற்று... இன்று... நாளை!

''இன்னும் ரெண்டு வருஷத்தில் என் திருமணம், என் தம்பியின் படிப்பு, இன்னும் அஞ்சு வருஷத்துல சொந்தமா ஒரு வீடு... இதுக்கெல்லாம் பணத்தை எப்படிச் சேக்கணும்னு நீங்கதான் சொல்லணும்'' என்று நமக்கு கடிதம் அனுப்பியிருந்தார் மதுரை யானைக்கால் பகுதியைச் சேர்ந்த சதீஷ்.

##~##
25
வயதான சதீஷுடன் நாம் போனில் பேசினோம். ''கோயம்புத்தூர்ல இருக்குற தனியார் ஐ.டி. கம்பெனியில எனக்கு வேலை..! மாதச் சம்பளம் பிடித்தம் போக 24,500 ரூபாய். ஏப்ரல் மாசத்துல சம்பளம் கூடும்போது 29,500 ரூபாய் கிடைக்கும். என் அப்பா ஸ்டேஷனரி கடை வைத்து நடத்துவதன் மூலம் மாதம் 11,500 ரூபாய் சம்பாதிப்பார். அம்மா தனலட்சுமி வீட்டில இருந்தபடியே தையல் வேலை மூலமா மாசம் 5,000 ரூபாய் சம்பாதிக்கிறாங்க. ஆக, குடும்பத்தோட மொத்த வருமானம் 46,000 ரூபாய். தம்பி தினேஷ், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

வீட்டு வாடகை, குடும்பச் செலவு, என் தனிப்பட்ட செலவு, தம்பியோட படிப்பு செலவு, இன்ஷூரன்ஸ், ஆர்.டி. மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்புன்னு மொத்தம் 23,500 ரூபாய் செலவாயிடுது. செலவுகள் போக எதிர்கால முதலீட்டிற்கு 22,500 ரூபாய் கையில இருக்கும்.

என் திருமணச் செலவுக்கு 5 லட்சம் ரூபாயும், தம்பியின் கல்விச் செலவுக்கு 3 லட்சம் ரூபாயும், வீடு கட்ட 30 லட்சம் ரூபாயும் தேவை. அது போக என் ஓய்வு காலத்திற்கு மாதம் 15,000 ரூபாய் (இன்றைய நிலவரப்படி) வேண்டும்'' என தன் எதிர்பார்ப்புகளை சொன்னார் சதீஷ்.

நேற்று... இன்று... நாளை!

அவர் கொடுத்த தகவலின்படி குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து பார்த்த நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ் விரிவான ஆலோசனையைச் சொன்னார்.

முதலில் அவசரத் தேவைக்கான பணத்தைச் சேமிப்பது எப்படி என்பதை விளக்கினார்.

''அவசரத் தேவைக்கென்று சேமிப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறார் சதீஷ். இப்படி இருப்பது நல்லதல்ல. எனவே, முதலில் 50,000 ரூபாயை மூன்று மாதத்திற்குள் சேர்த்து அதை வங்கி எஃப்.டி.யில் போட்டு வைப்பது நல்லது.  

இன்ஷூரன்ஸ்!

தனக்கென்று மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார் சதீஷ்.

மொத்தம் 14 லட்சம் கவரேஜுக்காக மாதம் 4,000 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். இந்த கவரேஜ் மட்டுமே  போதாது. அதனால், இவர் இன்னும் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது  நல்லது. இதற்கு வருட பிரீமியம் சுமார் 6,000 ரூபாய் ஆகும். வேலை செய்யும் நிறுவனத்தில் அவருக்கு மட்டும் மருத்துவச் செலவு கிடைக்கும்படியாக இருப்பதால் தன்னுடன் அம்மா, அப்பா இருவருக்கும் சேர்த்து 3 லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு ஆண்டு பிரீமியம் சுமார் 15,000 ரூபாய் கட்ட வேண்டி வரும்.

திருமணம் முடிந்தபிறகு குடும்ப உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் சேர்த்து அதிக கவரேஜுடன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இந்த டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்திற்கு எதிர்கால முதலீட்டிற்காக மீதமாகும் பணத்திலிருந்து மாதம் 1,750 ரூபாயை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதி இருக்கும் பணத்தைத் தேவைக்கு தக்கபடி முதலீடு செய்ய வேண்டும்.

நேற்று... இன்று... நாளை!


சதீஷின் திருமணம்!

தன் திருமணத்திற்கு இன்னும் இரண்டாண்டுகளில்  ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்கிறார். அதற்குள் ஏற்கெனவே செய்துவரும் ஆர்.டி. 2,000 ரூபாயிலிருந்து 52,500 ரூபாய் வருமானமும், கோல்டு ஃபண்டில் செய்து வரும் 1,000 ரூபாய் முதலீட்டிலிருந்து 27,500 ரூபாய் வருமானமும் சேர்த்து மொத்தம் 80,000 ரூபாய் கிடைக்கும்.

இந்த 80,000 ரூபாயோடு, கையில் உள்ள ஒரு லட்சம் மதிப்பிலான தங்கத்தையும் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதி தேவைப்படும் தொகைக்கு எதிர்கால முதலீட்டிற்கு மீதம் இருக்கும் 22,500 ரூபாயிலிருந்து மாதம் 12,150 ரூபாயை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து 10% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில்  முதலீடு செய்தால் 3.20 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை வைத்து நல்லபடியாக திருமணத்தை நடத்தலாம்.

வீடு கட்ட..!

நேற்று... இன்று... நாளை!

வீடு கட்ட இன்னும் ஐந்து வருடத்தில் 30 லட்சம் ரூபாய் வேண்டும் என்கிறார் சதீஷ். வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவதன் மூலமே இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்தக் கடன் வாங்க தேவைப்படும் ஆரம்பத் தொகையை (சுமார் 12 லட்சம் ரூபாய்) முதலீட்டின் மூலம் ஈட்டிவிடலாம்.

திருமணத்திற்குப் பிறகு ஏற்கெனவே செய்துவந்த 12,150 மற்றும் 3,000 ரூபாயும் (ஆர்.டி. - 2,000 ரூபாய், கோல்டு ஃபண்ட் - 1,000 ரூபாய்) சேர்த்து 15,150 ரூபாயை, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 14% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் தொகை 6.5 லட்சம் ரூபாய்.

இதுபோக எதிர்கால முதலீட்டிற்கு மீதமிருக்கும் தொகையிலிருந்து 6,400 ரூபாயை எடுத்து 14% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 5.5 லட்சம் ரூபாய்.

ஆக, முதலீட்டின் மூலம் கிடைக்கும் மொத்த தொகை 12 லட்சம் ரூபாய். இதை பயன்படுத்தி மீதி தேவைப்படும் 18 லட்சம் ரூபாய்க்கு வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு மாத இ.எம்.ஐ. 18,500 ரூபாய் (20 ஆண்டுகளுக்கு - வட்டி விகிதம்: 11%) கட்ட வேண்டியிருக்கும். வீட்டு முன்பணத்திற்காகச் செய்துவந்த முதலீட்டுத் தொகையை இ.எம்.ஐ-க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.  

நேற்று... இன்று... நாளை!


தம்பியின் கல்வி மற்றும் திருமணத்திற்கு..!

இன்னும் இரண்டு வருடத்தில் சதீஷின் திருமணம், தினேஷின் கல்வி ஆகிய இரண்டு தேவைகளும் சேர்ந்து வருவதால், ஏற்கெனவே சொன்னது போல திருமணத்திற்கு முதலீடு செய்துவிட்டு தம்பியின் கல்லூரிப் படிப்புக்குத் தேவைப்படும் மூன்று லட்சம் ரூபாய்க்கு வங்கியில் கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அந்தக் கடனை, தினேஷ் படித்து முடித்து வேலைக்குச் செல்லும்போது கிடைக்கும் வருமானத்தை வைத்து சுலபமாக அடைத்துவிடலாம். அந்த கடனை அடைத்தபிறகு தினேஷ் மூலம் கிடைக்கும் சம்பளத்தை முதலீடு செய்து அவரது திருமணத்திற்கான செலவை ஈடுகட்டி விடலாம்.

நேற்று... இன்று... நாளை!


ஓய்வு காலத்திற்கு..!

ஓய்வுகாலத்தில் செழிப்புடன் வாழ இவருக்கு மாதம் 1.14 லட்சம் ரூபாய் தேவை. இதற்கு இவரது கையில் 3.13 கோடி ரூபாய் இருக்க வேண்டும். தற்போது வேலை செய்துவரும் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறும்போது பி.எஃப். தொகை 75 லட்சம் ரூபாய் கிடைக்கும் (ஓய்வுகாலம் வரை பி.எஃப். மூலம் கடன் வாங்குவதோ, அதை பிற தேவைகளுக்கு பயன்படுத்துவதோ கூடாது).

இது தவிர, ஓய்வு காலத்திற்காகத் தேவைப்படும் மீதி 2.38 கோடி ரூபாய்க்கு திட்டமிட்டால் போதுமானது. அதற்கு மாதம் 2,200 ரூபாயை (வருடத்திற்கு 10% முதலீட்டை உயர்த்த வேண்டும்) 14% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் தொடர்ந்து

30 ஆண்டுகள் முதலீடு செய்தால் 2.38 கோடி ரூபாய் கிடைத்துவிடும். பி.எஃப். தொகை 75 லட்சம் ரூபாய் மற்றும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் 2.38 கோடி ரூபாயும் சேர்த்து 3.13 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த தொகையை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் 1.14 லட்சம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கும். வளமோடு வாழ வாழ்த்துக்கள்!

செ.கார்த்திகேயன்,
படங்கள்: பா.காளிமுத்து

நேற்று... இன்று... நாளை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு