Published:Updated:

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

பிரீமியம் ஸ்டோரி
திருமதி எஃப்.எம்.


''எனக்கு திருமணமாகி இருபத்தி நாலு வருஷம் முடிஞ்சிருச்சு. திருமணம் முடிஞ்சப்ப என் கணவர் திருப்பூர்ல ஒரு கம்பெனியில மேனேஜரா இருந்தார். சம்பளம் ரெண்டாயிரம்தான். ஆனா இப்போ, அவர்கிட்ட 150 பேர் வேலை செய்ற அளவுக்கு ஒரு பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனியை சொந்தமா நடத்திக்கிட்டு இருக்கார்'' என்று, தான் கடந்து வந்த பாதையை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார் இந்த வார திருமதி எஃப்.எம். வித்யா ராமசுப்ரமணியன்.

##~##
ஷ்டப்பட்டு உழைத்து, கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயையும் சிந்தாமல் சிதறாமல் தேவைக்கு மட்டும் செலவு செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் உயரலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார் வித்யா ராமசுப்ரமணியன். இனி அவர் சொல்வதைக் கேட்போமா?

''ஆரம்பத்துல திருப்பூர்ல வாடகை வீட்டுலதான் குடியிருந்தோம். இப்போ சொந்தமா ரெண்டு, மூணு வீடுகள் இருக்கு. வாடகை வருமானம் கணிசமா வருது. ரெண்டு கார் இருக்கு. ரெண்டு, மூணு வீட்டு மனைகளும் இருக்கு... இந்த வசதி வாய்ப்பு களுக்கெல்லாம் என்னோட உழைப்பு மட்டுமில்ல, உன்னோட பொறுப்புணர்ச்சியும், சிக்கனமும்தான் காரணம்னு என் கணவர் அடிக்கடி என்னைப் பாராட்டுவார். மற்றவர்களிடமும் பாராட்டிப் பேசுவார். நான் என்ன அப்படி பண்ணிட்டேன் என்கிறீர்களா..? சொல்கிறேன்...

என் அப்பா சென்னையில் சராசரி அரசு ஊழியரா இருந்தவர். ஆறு பிள்ளைகளில் நான்தான் மூத்தவள். அப்பா எல்லோரையும் நல்லா படிக்க வச்சார். படிப்புக்கே நிறைய செலவாச்சு. அப்பாவும் அம்மாவும் பணத்துக்கு ஏற்பாடு செய்ய, பட்ட கஷ்டங்களையெல்லாம் பார்த்துதான் வளர்ந்தேன். நம்மால முடிஞ்சதைச் செய்யணும்னு நான் பிளஸ் ஒன் படிக்கறப்பவே டியூசன் எடுக்க ஆரம்பிச்சேன். அது மூலமா வந்த வருமானத்தைக் குடும்பச் செலவுக்காக அம்மாவிடம் கொடுத்துடுவேன். எங்களுக்கு ஃபீஸ் கட்ட அந்த பணத்தைப் பயன்படுத்துவாங்க!

சின்ன வயசுல கத்துக்கிட்ட அந்த பாடம்தான் இன்னிக்கும் எனக்கு கைகொடுக்குது. பதினாறு வயசுலேயே டியூஷன் எடுத்து சம்பாதிக்க தொடங்கின நான், கல்யாணத்துக்கு அப்புறம் திருப்பூர் வந்த பிறகும்கூட வீட்டுலேயே டியூஷன் எடுத்தேன்.

திருப்பூருக்கு வந்த ஆரம்ப காலத்துல சிண்டிகேட் பேங்க்லேயிருந்து வீட்டுகே வந்து அக்கவுன்ட் ஆரம்பிச்சு கொடுத்தாங்க; தினம் வீட்டுக்கே வந்து டெபாசிட் பணத்தை வாங்கிட்டுப் போவாங்க. நான் தினமும் குறைஞ்சது பத்து ரூபாயாவது அக்கவுன்ட்ல போட்டு விடுவேன். அதை ஒரு கட்டாய பழக்கமாகவே வச்சுக்கிட்டேன். இதை எதுக்கு சொல்றேன்னா, கூடுதல் வருமானமும், சேமிப்பும்தான் வாழ்க்கையில நம்மை உயர்த்தும் என்கிறதுக்காகத்தான்.    

படிப்படியா முன்னேறி அடுத்த பத்து வருஷத்துல என் கணவர் சொந்தமா கம்பெனி தொடங்கினார். கடந்த பதினைந்து வருஷ உழைப்புல கம்பெனியை ஓரளவுக்குப் பெரிசா வளர்த்துட்டோம். நானும் கொஞ்சம் பெரிய அளவுல கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வர்றேன்.

அவர் சம்பளத்துக்கு இருந்தப்ப வீட்டுச் செலவுக்கு கொடுத்த ரெண்டாயிரத்துலேயும் சரி, இப்ப கொடுக்குற பத்தாயிரத்துலேயும் சரி பக்குவமா குடும்பம் நடத்தி, ஒரு நயா பைசாகூட துண்டு பட்ஜெட் விழாம பார்த்துக்கிட்டு வர்றேன்.

திருமதி எஃப்.எம்.

அதுக்கு காரணம் என்னோட டைரி எழுதுற பழக்கம்தான். டைரின்னு நான் சொல்றது வரவு-செலவு டைரியைத்தான். ஒரு ரூபாய்க்கு கொத்துமல்லி கருவேப்பிலை வாங்கிட்டு வந்தாலும்கூட, அதையும் வரவு செலவு டைரியில குறிச்சு வச்சுட்டுத்தான் மறுவேலையே பார்ப்பேன். வாரத்துக்கு ஒருதடவை ரெண்டு தடவை கணக்கை சரி பார்த்துப்பேன். இது எதுக்கு அநாவசியமான வேலைன்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. ஆனா, நாம செய்யுற செலவு என்ன, அது சரிதானான்னு நமக்கு நாமே யோசிச்சு பார்த்து மாத்திக் கிறதுக்கும், கையிருப்புக்குள்ள செலவை அடக்கறதுக்கும் இந்த டைரிதான் எனக்கு பெரிய உதவியா இருக்கு.

திருமதி எஃப்.எம்.

அடுத்தது, கிச்சன் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம். கிச்சன் சமாசாரங் களை கருத்தா கவனிச்சாலே 50 ரூபாய் மிச்சம் பண்ற இடத்துல 75 ரூபாய் வரைக்கும் மிச்சப்படுத்தலாம்ங்கறது என் அனுபவம்! அளவு பார்க்காம அரிசியைப் போட்டு சாதம் கெட்டுப் போய் கொட்டுவது, சாம்பார் மீதமாகி கொட்டுவதெல்லாம் என் வாழ்நாள்ல நடந்ததே கிடையாது.

அதேமாதிரி நினைச்சதுக் கெல்லாம் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு ஓடுற பழக்கமும் எனக்கு சுத்தமா கிடையாது. வீட்டுல இருக்குற இடத்துக்குள்ள கீரை, தக்காளி, கருவேப்பிலைன்னு வளர்க்கிறேன். முடிஞ்ச வரைக்கும் மாடியில தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறேன். இதனால காய்கறிக்குன்னு ஆகுற மொத்த செலவுல எனக்கு மாசம் 500-ல் இருந்து 750 ரூபாய் வரைக்கும் மிச்சமாகுது.

இதுபோலவே, ஷாப்பிங் போறதையும் லிமிட்டாதான் வச்சுக்குவேன். ஆசைப் பட்டதையெல்லாம் வாங்க மாட்டேன்; தேவைப்பட்டதை மட்டும்தான் வாங்குவேன். ஒரு பொருளை வாங்குறதுக்கு முந்தி அது நமக்கு எந்த அளவுக்கு பிரயோஜனம், அது இல்லாம இருந்தா நமக்கு என்ன நஷ்டம் என்றெல்லாம் நூறு கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்குவேன். காரணம் என்னன்னா நாம சேர்த்து வச்சிருக்குற பணத்தை அநாவசியமா இழக்குறதே இந்த ஷாப்பிங்லதான்!

திருமதி எஃப்.எம்.

இன்னொரு முக்கியமான விஷயம், வர்ற வருமானத்துல அஞ்சுல ஒரு பகுதியை எடுத்து தனியா வச்சுடுவேன். என்னைப் பொறுத்தவரை அது 'காணாமப் போன காசு’. ஆனா, ஏதோ ஒரு அவசரத்துல நமக்கு கட்டாயம் உதவுறதுக்குப் பத்திரமா இருக்கும் காசு.

இப்படி பைசா பைசாவா மிச்சம் பிடிச்ச காசுலதான் தவணை முறையில ரெண்டு, மூணு பிளாட் வாங்கிப் போட்டிருக்கோம்; என் ரெண்டு பொண்ணுகளுக்கும் நகை வாங்கியிருக்கோம்; அவங்க எதிர்காலத்துக்காக கணிசமான அளவுக்கு பணத்தை டெபாசிட் பண்ணியிருக்கோம்.

கச்சிதமா கணக்குப் போட்டு குடும்ப நிர்வாகத்தை நடத்தினா எப்பவுமே பணத் தட்டுப்பாடு வராதுங்கறதுக்கு நானும் ஒரு உதாரணம்னு பெருமையா சொல்லிக்க முடியும். ஏன்னா எனக்கு எப்பவுமே பணத் தட்டுப்பாடு வந்ததே இல்லை!''      

- ரா. அண்ணாமலை

திருமதி எஃப்.எம்.


வாரம் ஒரு புத்தகம்!

ப்ரா வின்ஃப்ரே டெலிவிஷன் சேனல் உரிமையாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல வெற்றி முகங்கள் கொண்டவர். உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் வரிசையில் கடந்த பல வருடங்களாக இடம் பிடித்திருப்பவர். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்.  

ஓப்ராவின் தனித்துவம் என்ன தெரியுமா? அவர் வளர்ச்சி முழுக்க சொந்த முயற்சி. அவர் வாழ்க்கை எதிர்நீச்சல் வாழ்க்கை. குடும்ப வறுமை, ஒன்பது வயதில் பாலியல் வன்முறை, பதினான்கு வயதில் முதல் தாய்மை, குறைந்த வயதிலேயே குழந்தை இறந்தது என பல சோதனைகள்.

ஓப்ராவின் இளமைப் பருவத்தில் அவர் தந்தை கொடுத்த அறிவுரை, 'வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? வாரம் ஒரு புத்தகம் படி'. இதை கடைப்பிடிக்கும் ஓப்ரா தடைக்கற்களை வெற்றியின் படிக்கட்டு களாக ஆக்கிக் கொண்டார். இன்று புகழின் உச்சியில் இருக்கிறார்.

வாழ்க்கையில் உயர நீங்களும் புத்தகம் படியுங்கள்!

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு