பிரீமியம் ஸ்டோரி
மை டியர் மணி!

சிறுவயதில் காசு என்றாலே குஷிதான். தீபாவளி, பொங்கல், திருவிழா என பண்டிகை நாட்களில் வீட்டிற்கு வரும் சொந்தக்காரர்கள் கிளம்பும்போது நிச்சயம் காசு தருவார்கள். அப்படி வாங்கும் காசுகள் சந்தோஷத்தின் உச்சமாக இருக்கும்.  

##~##
சி
னிமாவுக்கு வந்து உதவி இயக்குநரானபோது 1,500 ரூபாய் இருந்தாலே சென்னையில் ஒரு மாதத்தை ஓட்டிவிடலாம் என்கிற நிலை. மிகக் குறைந்த வருமானத்தையே சம்பாதித்த நான் எங்கு போக வேண்டும் என்றாலும் பஸ்தான். அதிலும், வொயிட் போர்டு பஸ்தான். அம்பது காசு குறையுமே என்று நினைத்து சில சமயம் இரண்டு மணி நேரம் கூட அந்த பஸ்ஸுக்காக காத்துக் கிடந்திருக்கிறேன்.

அப்போதே என் நண்பர் ஒருவர், குன்றத்தூர் பக்கம் 25,000 ரூபாய்க்கு இடம் கிடைப்பதாகச் சொன்னார். அவ்வளவு பெரிய தொகை என்பது எனக்கு அப்போது பெருங்கனவாக இருந்தது. இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு 35 லட்சம். தேடி வந்த வாய்ப்புகளில் பயன்படுத்திக் கொண்டதைவிட, கண்டுகொள்ளாமல் விட்டதே அதிகம்.

ஆனாலும், அதிரடிச் செலவு என்னிடம் எப்போதுமில்லை. சிறுவயதில் அம்மா 'பிடிஅரிசி’ எடுத்து சேர்த்து வைப்பதைப் பார்த்திருக்கிறேன். 'பிடிஅரிசி’க்கு பதில் நான் சில்லறையைச் சேர்த்தேன். இனிதான் பணத்தைச் சேர்க்க வேண்டும். என் குடும்பத்துக்கென சின்னதாக ஒரு ஃப்ளாட், மனைவி, குழந்தையையும் சேர்த்து குடும்பத்துக்கென 25 லட்சத்துக்கு இன்ஷூரன்ஸ்... இவைதான் இதுவரையிலான என் சேமிப்பு.  

பணத்தின் அருமையை நான் இயக்குநரானபோது நன்றாகவே தெரிந்து கொண்டேன். முதல் படத்தின் போது இயக்குநராக பெயர் வாங்க வேண்டும் என்பதைவிட, என்னை நம்பிய தயாரிப்பாளர் தப்பிக்க வேண்டும் என்கிற தவிப்பு இருந்தது. ஆனால், மெரினா படத்தை நானே தயாரித்தபோது, கதைக்காக யோசித்த நாட்களைவிட பணத்துக்காக யோசித்த நாட்களே அதிகம். இன்றைய வாழ்க்கையில் பணம் என்பது தவிர்க்க முடியாத காற்றைப் போலாகிவிட்டது!

நீரை.மகேந்திரன்.
படம்: கே.ராஜசேகரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு