பிரீமியம் ஸ்டோரி
நகைக்கடன்: எது பெஸ்ட்?

ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணப் பிரச்னை எனில், ஆபத்பாந்தவனாக காப்பாற்றுவது வீட்டில் இருக்கும் தங்க நகைகள்தான். தங்க நகைகளை அடமானம் வைப்பதன் மூலம் எளிதில் கடன் கிடைக்கும் என்பதால், வேறெந்த கடனையும்விட நகைக் கடனையே மக்கள் இப்போது அதிகம் விரும்புகின்றனர்.

##~##
மு
ன்பு நகைக் கடன் வாங்க மக்கள் பெரும்பாலும் மார்வாடி கடைகளை அணுகி வந்தனர். ஆனால், இப்போது வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு நகைக் கடன் தருகின்றன. இதனால் அதிக தொகைக்கு கடன் கிடைப்பதோடு, வட்டியும் குறைகிறது.

ஆனால், நகைக் கடன் வாங்க எது பெஸ்ட்? என்கிற கேள்விக்கு பலருக்கும் பதில் தெரிவதில்லை. இந்த கேள்விக்கு சரியான பதிலை கண்டுபிடிக்க நகைக் கடன் வழங்கும் பல்வேறு நிறுவனங்களை அணுகினோம். நமக்குக் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இதோ:

பொதுத்துறை வங்கிகள்!  

நகைக்கடன்: எது பெஸ்ட்?

எஸ்.பி.ஐ., கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பொதுத்துறை வங்கிகள் அதிகபட்சமாக 15 சதவிகித வட்டியில் கடன் தருகின்றன. பொதுத்துறை வங்கிகள் ஆபரணத் தங்க நகை மதிப்பில் 60 சதவிகிதம் வரை கடன் தருகின்றன. வாடிக்கையாளர்களைப் பொறுத்து சில வங்கிகள் 70 சதவிகிதம் வரையும் கடன் தருகின்றன.

பொதுவாக நகைக் கடன் என்று வரும்போது, அதற்கான வட்டி, நகை மதிப்பீட்டுக் கட்டணம் மற்றும் கடனைத் திரும்ப செலுத்தும் காலம் போன்ற விஷயங்களை கொஞ்சம் கவனித்து பார்க்க வேண்டும். நகை மதிப்பீட்டுக் கட்டணம் என்பது நீங்கள் கொண்டுவரும் நகை ஒரிஜினல்தானா என்பதை அறிவதற்கு வாங்கப்படும் கட்டணம். இதற்கென வங்கிகளில் இருக்கும் நகை மதிப்பீட்டாளர் நகையின் தரத்தைச் சோதிப்பார். இதற்கான கட்டணம் நீங்கள் வாங்கும் கடனில் கழித்துக் கொள்ளப்படும். இந்த கட்டணம் பொதுத்துறை வங்கிகளில் 25,000 ரூபாய்க்கு 125 ரூபாய். அதாவது 0.5% வரை வாங்குகிறார்கள்.

நகைக்கடன்: எது பெஸ்ட்?

அதிகபட்சமாக ஓராண்டு காலத்திற்குள் இந்த கடனை நீங்கள் திரும்பச் செலுத்தலாம். பொதுத்துறை வங்கிகளில் ஒரு வருடம் வரை வட்டியே கட்டாமல் இருந்தால்கூட வருட இறுதியில் வட்டி கட்டி, கடனைப் புதுப்பித்து அடுத்த ஆண்டின் முடிவில் அந்த கடனை திரும்பக் கட்டலாம். அப்போதுகூட பணம் கட்ட முடியவில்லை எனில், வங்கி நிர்வாகம் இருமுறை நம் கவனத்திற்குக் கொண்டுவந்து, அதன்பிறகு அந்த நகைகளை ஏலத்திற்கு விடும்.

கூட்டுறவு வங்கிகள் கிராமுக்கு 1,800 ரூபாய் கடன் தருகின்றன. 14% வட்டி வசூலிக்கிறது.  குறைந்தபட்சமாக 3,000 ரூபாயிலிருந்து அதிக பட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை கடன் தருகின்றன. ஒரு வருடத்தில் கடனை திரும்பச் செலுத்தினால் போதும். கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இருக்கும் பட்சத்தில், இந்த கடன் கிடைத்துவிடும்.

தனியார் வங்கிகள்!

ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. போன்ற தனியார் வங்கிகள்    16 சதவிகித வட்டியில் நகைக் கடன் தருகின்றன. தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டுக் கட்டணமாக, வாங்கும் கடனில் 1% வசூலிக்கப்படுகிறது. அதாவது, 25,000 ரூபாய்க்கு 250 ரூபாய் ஆகும். தனியார் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கத் தேவையில்லை. முகவரிச் சான்று, புகைப்படம் கொடுத்து நகைக் கடன் வாங்கிக் கொள்ளலாம். ஆறு மாதம், ஒரு வருடம் என்ற கால அளவில் கடன் கிடைக்கும். இதற்குள் நகையை மீட்க முடியவில்லை எனில் வட்டியை மட்டும் கட்டி, கடனை மீண்டும் புதுப்பித்து அடுத்த ஆண்டின் இறுதியில் பணம் கட்டி நகையை மீட்கலாம்.  

நகைக்கடன்: எது பெஸ்ட்?

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்!

மணப்புரம் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்  20-25% வட்டிக்கு நகைக் கடன் தருகின்றன. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே கடன் தருகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஒரே அளவில் வட்டி போடுவது இல்லை. உதாரணமாக,

10 கிராம் தங்கத்தை அடமானமாக வைத்து 10,000 ரூபாய் கடன் வாங்கினால் 12% வட்டியையும், அதே 10 கிராம் தங்கத்தை வைத்து 18,000 ரூபாய் கடன் வாங்கினால் 16% வட்டியையும் கேட்கிறது.  

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 85 சதவிகிதம் வரை கடன் தருகின்றன. 1,500 ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்நிறுவனங்களில் நகை மதிப்பீட்டுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், வாங்கிய கடனை மூன்று மாதத்திற்குள் திரும்பச் செலுத்தி நகையை மீட்காவிட்டால்

16 சதவிகிதத்திலிருந்து வட்டி அதிகரிக்கத் தொடங்கும். இப்படி எத்தனை மாதங்களுக்கு நீங்கள் நகையை மீட்காமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிக வட்டியைத் தர வேண்டியிருக்கும். பணமே கட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அதை உடனடியாக ஏலத்திற்கு விடுவதற்கான அனுமதியையும் கடன் தரும்போதே நம்மிடமிருந்து பெற்றிருப்பார்கள். இது தெரியாமல் இந்நிறுவனங்களில் நகைக் கடன் வாங்கி, கட்ட முடியாமல் நகை இழந்தவர்கள் பலர்.

நகைக்கடன்: எது பெஸ்ட்?

மார்வாடி கடைகள்!

சேமிப்புக் கணக்கு, மதிப்பீட்டுக் கட்டணம் என எந்த கேள்வியும் இல்லாமல் நகையைத் தந்தவுடன் கடன் தருவது மார்வாடி கடைகள். தங்கம் மட்டுமின்றி, வெள்ளி கொலுசுக்கும் இங்கு கடன் கிடைக்கும். தங்கத்தின் மதிப்பில் குறைந்தபட்சம் 75 சதவிகிதம் வரை கடன் கிடைக்கும். குறைந்தபட்சமாக 16% வட்டி வசூலிக்கிறார்கள். வாடிக்கையாளரைப் பொறுத்து கூடுதலாகவும் கடன் கிடைக்கும். வேறு எந்தவிதச் செயல்பாட்டுக் கட்டணமும் இல்லை.

நகைக்கடன்: எது பெஸ்ட்?

நகை அடகு வைத்த நாளிலிருந்து ஒரு வருடம் வரை வட்டி கட்டாமல்கூட இருக்கலாம். ஒரு வருடம் ஆனபிறகு நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும்படி நோட்டீஸ் தரப்படும். அப்போதும் பணம் கட்டவில்லையெனில், மீண்டும் வட்டியை கட்டி நகையை புதுப்பிக்கச் சொல்வார்கள். அதற்குப் பதிலில்லை எனில் அதை ஏலத்தில் விற்பார்கள். மார்வாடி கடைகளில் வட்டி அதிகம் என்பதோடு, திடீரென கடையை மூடிவிட்டு, நம் நகையை எடுத்துச் சென்றுவிடும் அபாயமும் இருக்கிறது.

மேற்சொன்ன நான்கு அமைப்புகளிலும் நகைக் கடன் வாங்க பொதுத்துறை வங்கிகள்தான் பெஸ்ட். வட்டி, செயல்பாட்டுக் கட்டணம், பாதுகாப்பு போன்ற அனைத்து அம்சங்களிலும் பொதுத்துறை வங்கிகளே சிறந்தவையாக உள்ளன. அதிக கடனுக்கு ஆசைப்பட்டு எக்கச்சக்கமாக வட்டி கட்டி, கடைசியில் நகையையே இழப்பதைவிட, குறைந்த வட்டியில், பாதுகாப்பாக நகைகள் இருக்க வேண்டுமெனில் பொதுத்துறை வங்கிகளை தாராளமாக அணுகலாம்.

-பானுமதி அருணாசலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு