பிரீமியம் ஸ்டோரி

கோல் இந்தியா உஷார்...

''புத்தாண்டு வாழ்த்துக்கள்!'' என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''தமிழ் புத்தாண்டுக்கு இப்போதே வாழ்த்தா... தாங்க்ஸ்!'' என்றோம். ''அதை அடுத்த வாரம் சொல்கிறேன். ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறதே! பூஜை போட்டு புதுக் கணக்கை குதூகலமாகத் தொடங்கும் நாளாச்சே! நமக்கெல்லாம் இதுதானே புத்தாண்டு!'' என்றவர், விஷயத்துக்குத் தாவினார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் போர்டு மீட்டிங் டெல்லியில் நடந்தது நமக்கெல்லாம் பெருமைதான். இந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், நம் நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்லும். ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளருக்கு முந்தைய தேதியிட்ட வரி விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். பார்க்கலாம், நம் அரசாங்கம் இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கிறதென்று!'' என்றவரிடம், ''ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனத்தில் என்ன பிரச்னை'' என்று கேட்டோம்.

''அது ஒரு இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி. ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனத்துக்கு 27,000 கோடி ரூபாய்க்கு ஆர்டர் இருக்கிறது. கடன் 4,300 கோடி ரூபாய்தான். மேலும், இந்நிறுவனத்துக்கு 2,300 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் மட்டும் 700 ஏக்கர் நிலம் இருக்கிறது.

ஆனால், பிரச்னை என்னவென்றால் இந்த நிறுவனத்தின் புரமோட்டர் பலமாக இல்லை. இவ்வளவு ஆர்டர்கள் இருந்தும் இதனை செயல்படுத்த முடியவில்லை. புரமோட்டரிடம் 11%  பங்கு மட்டுமே இருக்கிறது. அதனால் இந்நிறுவனத்தை வாங்க போட்டி நிலவுகிறது.                       ஜீ டி.வி-யின் சுபாஷ் சந்திரா 10 % பங்குகளை வாங்கியதன் மூலம் இந்த நிறுவனத்தைக் கைப்பற்ற கூடுதலாகப் பங்குகளை வாங்க முயற்சி எடுத்து வருகிறார்.

இந்நிறுவனத்தை யார் வாங்கினாலும் வாங்கா விட்டாலும் அந்த பங்கு 90 ரூபாய் செல்லப் போவது உறுதி என்பதுபோலவே முக்கியமான நிறுவனங்களின் ரிசர்ச் ரிப்போர்ட்கள் சொல்கிறது. ஜனவரி மாதம் ஆரம்பத்தில் 25 ரூபாய்க்கு வர்த்தகமான பங்கு இப்போது 66 ரூபாயில் உள்ளது. இன்ஃப்ரா துறை பங்காக இருந்தாலும் ரிஸ்க் எடுக்க நினைக்கிறவர்கள் இதை ஒரு கை பார்க்கலாம்.

ஐ.வி.ஆர்.சி.எல். மாதிரி இன்னொரு பங்கையும் சொல்கிறேன். அது, கேட்வே டிஸ்ட்ரிபர்க்ஸ் லிமிடெட் (நிஞிலி). இந்நிறுவனமும் கிட்டத்தட்ட ஐ.வி.ஆர்.சி.எல். மாதிரிதான். புரமோட்டர்களின் பங்கு 40 சதவிகிதம்தான். பெரியண்ணன், சின்ன அண்ணன் இந்த இருவரில் யாராவது ஒருவர் இந்த நிறுவனத்தை டேக் ஓவர் செய்ய வாய்ப்பிருப்பதாகச் செய்தி பரவியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று 52 வார உச்சத்தைத் தொட்டது. இந்த பங்கு இன்னுமொரு 15 சதவிகிதம்கூட ஏறினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். இந்த பங்கும் ரிஸ்க்கெல்லாம் ரஸ்க் சாப்பிடறமாதிரி என்பவர் களுக்கு மட்டுமே!'' என்றார்.

''வேறு என்ன சேதி?'' என்றோம்.

''3ஐ. இன்ஃபோடெக், ஏ.ஆர்.எஸ்.எஸ். இன்ஃப்ரா உள்ளிட்ட சில  நிறுவனங்கள் தங்களது கடனை மறுசீரமைப்பு செய்கிறது. இது சரியான பாதையாகத் தெரியவில்லை. இந்த அறிவிப்பு வந்தவுடன் அந்த பங்கு விலை ஏறினாலும் அதுபோன்ற பங்குகளை தவிர்ப்பதே நல்லது.

ஆனால், டி.டி.ஹெச். துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வாய்ப்புகள் வரப் போவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக டிஷ் டிவி மற்றும் ஹாத்வே கேபிள் போன்றவை உயர வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதால் வாசகர்கள் இந்த பங்குகளை வாங்க அதீத அவசரம் காட்ட வேண்டாம்!'' என்றார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''மத்திய நிலக்கரித் துறை அமைச்சர், பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொன்ன பதிலைக் கவனித்தீரா?'' என்று கேட்டோம்.

##~##
''கொஞ்சம் ஜாஸ்திதான். நிலக்கரிக்கான விலையை நிர்ணயிப்பதில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்கிறது கோல் இந்தியா நிறுவனத்தில்   1 சதவிகித பங்கு வைத்திருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த சில்ட்ரன் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட். அதெல்லாம் முடியாது, வேண்டுமானால் அந்த ஃபண்ட் 1 சதவிகித பங்கை விற்றுவிட்டு போகட்டும் என்று அமைச்சர் சொல்லிவிட்டார். விற்கச் சொல்ல அமைச்சருக்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த நிறுவனம் மட்டும் பங்குகளை விற்றால் கோல் இந்தியா பங்கு விலை பாதியாக குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். எதற்கும் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணுவது நல்லது!'' என்றவருக்கு, சில்லென்று தண்ணீர் குடிக்கத் தந்தோம்.

''அல்கோரிதமிக் டிரேடிங் பற்றி செபி புதிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறதே!'' என்றோம்.

''மனிதர்களின் உதவி இல்லாமல் கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆட்டோ மேட்டிக்காக பங்குகளை வாங்கி விற்பதே அல்கோரிதமிக் டிரேடிங். இதுநாள்வரை பலரும் செபிக்கு தெரியாமலே இதை செய்து வந்தார்கள். இனி இந்த முறையை பயன்படுத்தி, பங்கு வாங்குபவர்கள் நிச்சயம் செபியிடம் அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும் என்றதோடு, அதற்கான பல்வேறு நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. இது பங்குச் சந்தைக்கு நல்லதே!'' என்றார்.

''எவரான் நிறுவனத்தைத் தொடங்கிய கிஷோர் புரமோட்டர் நிலையிலிருந்து இறக்கப்பட்டு இருக்கிறாரே!'' என்றோம்.

''இந்நிறுவனத்தின் 38 சதவிகித பங்குகளை துபாயைச் சேர்ந்த வர்கி குரூப் வைத் துள்ளதால், நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், கிஷோருக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்நிறுவனத்தில் 18.70 சதவிகித பங்கு இருக்கிறது. இதனால் நிறுவனத்தின் உயர் மட்டக்குழு நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைத்திருக்கிறது. இதன் படி 38 சதவிகித பங்குகளை வைத்துள்ள வர்கி நிறுவனத்தை புரமோட்டராக கொண்டு செயல்பட உள்ளது. இதனால் இப்போது கிஷோர் குடும்பத்தினரின் செயல் பாடுகள் நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஏதோ ஒரு தப்பை செய்யப்போய் எவ்வளவு பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது பார்த்தீரா?'' என சோகத்தோடு சொன்னவரிடம், ''தனலட்சுமி வங்கியிலும் ஏதோ பிரச்னை என்கிறார்களே!'' என்று இழுத்தோம்.

''கடந்த சில மாதங்களாகவே பல பிரச்னைகளில் சிக்கி தவித்தது தனலஷ்மி வங்கி. அதன் சி.இ.ஓ.வும் பதவியில் இருந்து விலகினார். சில காலமாகவே இந்த வங்கியை யாராவது கையகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு இருந்து வந்தது. இப்போது ஹிந்துஜா குழுமம் இந்த வங்கியை வாங்கப் போவதாகச் செய்தி வந்திருக்கிறது.

ஷேர்லக் ஹோம்ஸ்

இதன் காரணமாகவே வெள்ளிக்கிழமை இந்த பங்கு 16 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தது. இப்போதைக்கு 68 ரூபாய்க்கு வர்த்தகமாகும் இந்த பங்கை 85 ரூபாய்க்கு இந்த குழுமம் வாங்கப் போவதாகத் தெரிகிறது. இதற்காக 85 ரூபாயை இலக்கு விலையாக வைத்துக் கொண்டு காத்திருக்கத் தேவை இல்லை. கிடைத்தவரை லாபம் என்று அறுத்துவிட்டு ஓடத் தெரிந்தவர் மட்டுமே இதை வாங்கலாம்'' ஏறக்குறைய கிளம்பத் தயாரானவரிடம், ''பங்குகள் எதுவும் சொல்ல வில்லையே..!'' என்று நினை வூட்டினோம்.

''சந்தை இருக்கிற நிலையில் பங்கு எதையும் வாங்கச் சொல்லும் நிலையில் நானில்லை. என்றாலும் நீண்ட கால முதலீட்டுக்கு மட்டும் இரண்டு பங்குகளை சொல்கிறேன்.

ரேமண்ட்: இந்த பிராண்ட் கிராமப்புறங்களுக்கும் செல்லத் தயாராகிவிட்டது. டயர் 2 மற்றும் 3 நகரங்களில் அதிக கிளைகளை திறக்க இருக்கிறது. பங்கின் விலை 450 ரூபாயைத் தாண்டினால் புதிய உச்சத்துக்கு போக அதிக வாய்ப்பிருக்கிறது. நீண்டகால இலக்கு விலை 700 ரூபாய்..!

சத்பவ் இன்ஜினீயரிங்: இந் நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை துறையிடமிருந்து அதிக ஆர்டர் கிடைத்திருக்கிறது. மேலும், பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு திட்டங் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது இந் நிறுவனத்துக்குச் சாதகமான அம்சம். இந்த பங்கின் விலை டெக்னிக்கல்படி வலிமையாக இருக்கிறது. 165 ரூபாயைத் தாண்டினால் நீண்ட காலத்தில் 250 ரூபாய்க்குப் போகக்கூடும். எதற்கும் விலை இறங்கும்போது வாங்குவது நல்லது'' என்றவர், புறப்படும் முன்னர் கமாடிட்டி பற்றி ஒரு செய்தி சொன்னார்.

''அக்ரி கமாடிட்டிகளான பிளாக் பெப்பர், மஸ்டர்ட் ஆயில், உருளைக்கிழங்கு, மெந்தா ஆயில், சென்னா, சோயா பீன், கார்டமம் உள்ளிட்டவைகளின் விலை ஃப்யூச்சர்ஸ் சந்தையில் கடந்த மூன்று மாதத்தில்                                      100% - 189% வரை உயர்ந்திருக் கிறது. அண்மையில் கொத்தவரங்காய் (கார் கம்) ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட் விலை பயங்கரமாக விலை உயரவே, அதன் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. அது போன்ற நிலை, மிகவும் விலை அதிகரித்துள்ள இந்த அக்ரி கமாட்டிகளுக்கு வந்தாலும் வரலாம். எதற்கும் உஷாராக இருப்பது நல்லது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு