Published:Updated:

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

பிஸினஸ் வரலாறு

பிரீமியம் ஸ்டோரி
பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!


கோவை நகரம் இன்றைக்கு ஒரு டெக்ஸ்டைல் சிட்டியாக மட்டுமல்ல, ஒரு மெடிக்கல் சிட்டியாக மாறக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கே.கோவிந்தசாமி நாயுடு. இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் எவருக்கும் ஒரு பிஸினஸ்மேனாக வரவேண்டும் என்கிற நம்பிக்கையும் உற்சாகமும் நிச்சயம் வரும்.

##~##
கோ
வைக்கு அருகே சிற்றூரான பீளமேட்டில் 1907-ல் பிறந்தார் கோவிந்தசாமி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அவருக்கு பதினாறு வயதான சமயத்தில் அவர் குடும்பம் கோவைக்குப் பக்கத்தில் இருக்கிற அன்னூருக்கு இடம் பெயர்ந்தது. ஆரம்பத்தில் ஒரு சிறிய கடை யில் வேலை பார்த்தார். பிறகு ரோடு கான்ட்ராக்ட் போடும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் கோவையில் பெரிதாக நடந்துவந்த பருத்தி பிஸினஸில் அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. 1932-ல் பஞ்சை வாங்கி விற்கும் தொழிலை செய்ய ஆரம்பித்தார். கோவிந்த சாமியின் திறமையால் இந்த தொழிலில் நல்ல லாபம் பார்க்க முடிந்தது.

பருத்தி வர்த்தகம் தந்த அனுபவம் காரணமாக பஞ்சாலையைத் தொடங்கி நடத்தும் எண்ணமும் கோவிந்த சாமிக்கு வந்தது. 1942-ல் தன்னுடைய முதல் ஜின்னிங் ஃபாக்டரியைத் திறந்தார் கோவிந்தசாமி. பருத்திக் கொட்டையிலிருந்து பஞ்சை தனியாகப் பிரித்து எடுக்கும் இந்த ஜின்னிங் ஃபாக்டரி மூலம் கோவையைச் சுற்றி இருக்கிற பஞ்சாலைகளுக்கு பஞ்சை உற்பத்தி செய்து தந்தார்.

பிஸினஸ் நடத்துவது கோவிந்தசாமிக்கு இயற்கை யாகவே வந்தது. அந்த  நேரத்தில் பலரும் ஜின்னிங் ஃபாக்டரியை நடத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, கோவிந்த சாமியோ அடுத்தடுத்து புதிய ஜின்னிங் ஃபாக்டரிகளைத் திறந்து கொண்டே போனார். அடுத்த இருபதாண்டுகளில் அவர் மேலும் மூன்று புதிய ஜின்னிங் ஃபாக்டரிகளைத் திறந்ததே அந்தத் தொழிலில் அவருக்கு இருந்த நிபுணத்து வத்தைக் காட்டியது.

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

ஜின்னிங் ஃபாக்டரியில் அவருக்குக் கிடைத்த லாபத்தில் 4 லட்ச ரூபாயை கோவையில் இருந்த ஒரு மில்லில் டெபாசிட் செய்து வைத்திருந்தார். ஆனால், அந்த மில் நிர்வாகமோ டெபாசிட் பணம் தராததோடு, வட்டியையும் தர மறுத்தது. இந்த நிலையில், அந்த மில்லின் பங்குகளை கொஞ்சம்                        கொஞ்சமாக வாங்கி, பிற்பாடு அந்த மில்லையே வாங்கினார். தனது ஜின்னிங் ஃபாக்டரியிலிருந்து தயாரான பஞ்சை வைத்து அந்த மில்லையை வெற்றிகரமாக நடத்தினார்.

பொதுவாக பஞ்சாலையைத் தொடங்க நினைப்பவர்கள் புதிதாக இடம் வாங்கி, இயந்திரங்களை வாங்கியே செய்ய நினைப்பார்கள். ஆனால், கோவிந்தசாமியோ நலிவுற்ற நிலையில் இருந்த  பஞ்சாலைகளை வாங்கி, அவற்றைப் புதுப்பித்து, வெற்றிகரமாக நடத்தி, லாபம் சம்பாதித்தார். அவர் வாங்கிய கண்ணபிரான் மில்லும், கத்ரி மில்லும் 1945-லேயே தொடங்கப்பட்டது என்றாலும், பிற்பாடு கோவிந்தசாமியைத் தேடி வந்தவை.  

கோவிந்தசாமியின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அவரது புதல்வர் கள். கோவிந்தசாமி நாயுடுவுக்கு ஐந்து மகன்கள், இரண்டு மகள்கள். கோவிந்தசாமி பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்தை அமைத்தவர் எனில், அவரது வாரிசுகள் அந்த ராஜ்ஜியத்தை சாம்ராஜ்ஜியமாக மாற்றி அமைத்தனர்.

கோவிந்தசாமி நாயுடுவின் முதல் மகன் பாலகிருஷ்ணன், கே.ஜி. டெனிம் லிமிடெட் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இன்றைய இளையதலைமுறைக்குத் தேவையான ஜீன்ஸ் துணிகள் மற்றும் ஆடைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். 'ட்ரிகர்' என்கிற பிராண்ட் இந்நிறுவனத்தின் புகழ் பெற்ற தயாரிப்பு.

மூன்றாவது மகனான ராமசாமி, டெக்ஸ்டைல் துறை யில் மிகப் பெரிய பிஸினஸ்மேன். கத்ரி மில்லை இவர்தான் நடத்தி வருகிறார். நான்காவது மகனாக விஜய்குமார் கே.ஜி. கார்மென்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஐந்தாவது மகனான கண்ணப்பன், சாரதா டெர்ரி புராடக்ட்ஸ் லிமிடெட்டை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் உலகத் தரத்தில் தர்க்கி டவல்களை தயாரிக்கிறது.

கோவிந்தசாமியின் மகன்களில் பலரும் டெக்ஸ்டைல் தொழிலிலேயே இருக்க, இரண்டாவது மகன் பக்தவச்சலம் மட்டும் மருத்துவத் துறையில் நுழைந்து கோவையில் மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தி வருகிறார். டாக்டர் பக்தவச்சலம் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்தவர். 1970-ல் அமெரிக்காவில் மருத்துவ உயர்படிப்புக்காகச் சென்ற தனது மகனை அழைத்து, கோவையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கும்படி சொன்னார் கோவிந்தசாமி நாயுடு. தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது பெயரிலேயே மருத்துவ மனையைத் தொடங்கினார் டாக்டர் பக்தவச்சலம். 1974-ல் வெறும் 25 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்றைக்கு அறுநூறுக்கும் அதிகமான படுக்ககைகள் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனையாக சிறந்து விளங்குகிறது.

தன் தந்தை பற்றி டாக்டர் பக்தவச்சலம் இப்படி சொன்னார். ''நேர்மை, நாணயம், நேரந்தவறாமைக்கு ஒரு உதாரணமாகவே திகழ்ந்தார் என் அப்பா. அவர் ஒரு மிகச் சிறந்த காந்தியவாதி. ஒருமுறை ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதிலிருந்து சிறிதும் விலக மாட்டார். டெக்ஸ்டைல் மில்கள் டெபாசிட் வாங்கும்போது அதற்கான வட்டியைக் கட்டாயம் தர வேண்டும் என்பார். டெபாசிட் பணத்தை திரும்பத் தரமுடியும் என்கிற நம்பிக்கையும் உறுதியும் இருந்தால் மட்டுமே மக்களிடமிருந்து வாங்க வேண்டும் என்பார். அவர் அமெரிக்காவுக்குச் சென்று ஜவுளித் துறையில் புதிதாக வந்துள்ள தொழில்நுட்ப மாற்றங்களை தெரிந்துகொண்டு, அதை உடனடியாக கோவைக்கு கொண்டு வந்தார்.

பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!

தங்களை இந்த அளவுக்கு உயர்த்திய சமூகத்திற்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என்கிற சிந்தனை அவருக்கு நிறையவே இருந்தது. அதனால் நிறைய பள்ளிகளை கட்டினார். கோயில்களை கட்ட நிதி உதவி செய்தார். மருத்துவமனை கட்டினார். இன்றைக்கு 'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி’ என்று சொல்லப்படுவதை அன்றே சிறப்பாகச் செய்தார். அந்த அற்புதமான மனிதர் நேர்மையாகவும் நெறிமுறைகள் தவறாமல் நடந்ததன் விளைவாக தான் இத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ முடிந்தது'' என்றார்.

பஞ்சாலை, நவீன ஆடைகள் தயாரிப்பு, மருத்துவம் என பல்வேறு துறைகளில் கால் பதித்து, இன்றைக்கு கோவையில் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது கே.ஜி. குழுமம். இந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி நிலைத்து நிற்கச் செய்த பெருமை கோவிந்தசாமி நாயுடுவையே சாரும்.

கோவை நகரத்தின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்காற்றிய நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பல பிஸினஸ்மேன்களின் வாழ்க்கை வரலாற்றை கடந்த சில வாரங்களாகப் பார்த்தோம்.

இன்றைக்கும் இந்த சமூகத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள் பிஸினஸில் தொடர்ந்து கொடி கட்டிப் பறந்து வருகிறார்கள். இனிவரும் காலத்திலும் அந்த பிஸினஸ் பாரம்பரியம் தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.

(அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு