பிரீமியம் ஸ்டோரி
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!


தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம், நெசவுத் தொழிலுக்கும் பெயர் போனது. ஒரு காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெய்த பருத்தி புடவைகள் மிகவும் பிரபலமாக இருந்தது
.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

கிராமங்களில் வாழும் கைவினைக் கலைஞர் களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் ஸ்ரீஜித் பணி செய்து கொண்டிருந்தபோது, அரசு அலுவலர் ஒருவருடன் தஞ்சாவூர் மாவட்ட கிராமங் களில் உள்ள பல்வேறு நெசவுத் தொழிலாளர்களைச் சந்தித்தார்.

அந்த நெசவாளர்கள் மிக நலிந்த நிலையில் இருந்தனர். அவர்கள் உருவாக்கிய சேலை கள் விற்காததால் மிகவும் சோர்ந்து போயிருந்தனர். நெசவுத் தொழிலுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்ற விரக்தியில் இருந்தனர். அப்படி ஒரு கிராமத்தைப் பார்த்துவிட்டு திரும்பும்போது, அங்கு வசித்த நெசவாளர்கள் விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்துவந்து அவரிடம் நீட்டினார்கள்.

##~##
'தம்பி, உங்களை மாதிரி கொஞ்ச நாளைக்கு முன்னால் இந்த அம்மா வெளிநாட்டி லிருந்து வந்தாங்க. நாங்க நெஞ்ச புடவையின் தரமும், வடிவமைப்பும் அவங்களுக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு. அவங்க கேட்கும் போதெல்லாம் அவங்களுக்கு நாங்க நெஞ்ச புடவைங்கள அனுப்பி வைக்க முடியுமான்னு கேட்டாங்க. நாங்களும் சரின்னுட்டு அவங்க கேக்குறப்ப சேலைகளை அனுப்புறோம்' என்றார்கள் சில நெசவாளர்கள்.

'அந்த தருணம்தான் என் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு ஒரு கருவாக இருந்தது. இந்திய கைவினைக் கலைஞர்களின் கைநுணுக்கமும், அவர்கள் உருவாக்கும் பொருட்களும் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆனால், அவர்கள் கண்டுகொள்ளப்படாமல் போனதற்குக் காரணம், காலத்திற்கேற்ப தாங்கள் தயாரிக்கும் பொருட்களை புதுப்பிக்காததே' என்றார் ஸ்ரீஜித்.

இன்று இந்தியாவில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை கலைஞர் களிடமிருந்து வாங்கி அதை நகரங்களிலோ அல்லது மேல்நாடுகளுக்கோ ஏற்றுமதி செய்யும் தொழிலில் பல நிறுவனங்கள் இறங்கியிருக் கின்றன.

ஆனால், கைவினைக் கலைஞர்களையும் அவர்கள் செய்துவரும் தொழிலையும் காப்பாற்ற இது மட்டுமே போதாது. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை அவர்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் அதாவது, வாடிக்கையாளர்களின் ஆர்டர் களை பெறுவது, அதற்கேற்ப அவர்களுக்குத் தரமான மூலப் பொருட்களை வாங்கித் தந்து, இன்றைய தேவைக்கேற்ப வடிவமைப்பது, தயாரான பொருட்களை தரம் பார்த்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது  நல்லதொரு பிஸினஸ் வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்தார் ஸ்ரீஜித். உடனே அத்தகைய ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் முயற்சியில் ஆயத்தமானார்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

நிறுவனம் ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டால், ஆரம்ப முதலீடும் பிறருக்குச் சொல்ல ஒரு விலாசமும் தேவை. எந்த பிஸினஸ் பின்புலமும் இல்லாதவர்கள் இவ்விரண்டு வசதிகளையும் எளிதில் பெற  நாடலாம் இன்குபேஷன் நிறுவனங்களை.

ஜூலை 2007-ல் ஐ.ஐ.டி. சென்னையில் இயங்கிக் கொண் டிருந்த கிராமியத் தொழில்நுட்ப பிஸினஸ் இன்குபேஷன் ஸ்ரீஜித்தை ஆதரிப்பதற்கு ஒப்புக்கொண்டது. அதன் மூலம் ஸ்ரீஜித் 'ரோப்' (ROPE - Rural Outsourced Production Enterprise) என்கிற நிறுவனத்தை தொடங்கினார்.

இன்குபேஷன் இயக்கத்தி லிருந்து ஐந்து லட்சம் ரூபாய் அவருக்கு விதை மூலதனமாக (Seed Fund) கிடைத்தது. தவிர, அந்த இன்குபேஷன் நிலையத்தில் இருந்த அலுவலக இடத்தில் இருந்து அவருடைய நிறுவனத்தையும் நடத்த முடிந்தது.

நிறுவனம் ஆரம்பித்தவுடன் செய்ய வேண்டிய முதல் காரியங்களுள் ஒன்று, உரிமையாளர் (Proprietorship) என்கிற பெயரில் நிறுவனத்தைப் பதிவு செய்வது. ஸ்ரீஜித்தும் தன் நிறுவனத்தை முதலில் அந்த முறையிலேயே பதிவு செய்தார். ஆனால், அந்த முறையில் பதிவு செய்தால், வெளி முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுவது கடினம். அதனால் அப்படி முதலீடு பெறும்போது, உங்கள் நிறுவனத்தைக் குறைந்தபட்சம் ஒரு தனியார் லிமிடெட் நிறுவனமாகவாவது மாற்ற வேண்டும். ஸ்ரீஜித்தும் அதையேதான் செய்தார். டிசம்பர் 2007-ல் ரோப் நிறுவனத்தை ஒரு தனியார் லிமிடெட் நிறுவனமாக மாற்றினார்.

நீங்கள் தொடங்கும் பிஸினஸ் நிறுவனம் கம்பெனி வடிவில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நிறுவனம் வளர வளர வெளி முதலீட்டாளர் களின் வருகைக்கேற்ப அதை கம்பெனியாக மாற்றலாம்.  

'இன்குபேஷன் நிறுவனம் உங்களுக்கு எவ்விதமான பலன்களைத் தந்தது?' என்று ஸ்ரீஜித்திடம் கேட்டேன்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

'இன்குபேஷன் நிலையத்தில் நாங்கள் இயங்கியதால் வங்கிக் கணக்குத் தொடங்கியதில் இருந்து, அரசாங்க ஏற்றுமதிப் பதிவு எண் பெறும் வரை எல்லாமும் எங்களால் எளிதில் செய்ய முடிந்தது.'

'உதாரணம்...'

'பிஸினஸ் ஆரம்பித்தபோது நான் 'ரோப்’ நிறுவனம் அளிக்கும் சேவைகளை பல இணையதளங்களில் பதிவு செய்ய ஆரம்பித்திருந்தேன். ஆரம்பித்த இரண்டாவது மாதத்திலேயே நியூயார்க் நிறுவனம் ஒன்றிலிருந்து வினவல் ஒன்று வந்தது. 'ரோப்’ அப்போது ஒரு மிகச் சிறிய நிறுவனம். நாங்கள் ஐ.ஐ.டி.யில் உள்ள இன்குபேஷன் இயக்கத் தில் இருந்ததால் மட்டுமே எங்களுக்கு அந்த ஆர்டர் கிடைத்தது.  

இந்த நியூயார்க் நிறுவனத் திடம் இருந்து ஆர்டர் வந்த பிறகுதான் தெரிந்தது, தயாரான பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு DGFT முகமையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று. அந்த பதிவு எண் பெற பல வாரங்கள் ஆகும் என்று கேள்விப்பட்டேன். ஆனால், வாடிக்கையாளருக்கோ நான் உடனடியாக பொருட்களை அனுப்ப வேண்டும். தவிர, எங்களுக்கு அது முதல் ஆர்டர். அதை இழக்க எனக்கு மனமில்லை.

நான் நேரடியாக DGFT அலுவலரைச் சென்று பார்த்தேன். என்னைப் பற்றி, என் பிஸினஸ் சூழ்நிலைப் பற்றிச் சொல்லி, எனக்கு உடனடியாக பதிவு எண்ணை அளிக்குமாறு கேட்டேன். என் வேண்டுதலை ஏற்று, அன்று மாலையே நாங்கள் அந்தப் பதிவு எண்ணைப் பெற வழி செய்தார் அந்த அதிகாரி. தனியாளாகச் சென்றால் இவ்வளவு சீக்கிரம் என்னால்  அதை வாங்கியிருக்க முடியாது.''

'ம்...'

'இன்குபேஷன் நிலையத்தில் இருந்தது, பிற இயக்கங்களில் இருந்து முதலீடு பெறுவதற்கும் ரொம்ப உதவியாக இருந்தது. ஆரம்பித்த இரண்டு வருடங் களுக்குள் இன்னும் அதிகமான ஒரு முதலீட்டை ஒரு ஏஞ்சல் முதலீட்டாளரிடம் இருந்து எங்களால் பெற முடிந்தது. ஏப்ரல் 2011-ல் வென்ச்சரீஸ்ட் (Ventureast) என்கிற துணிகர முதலீட்டு நிறுவனத்திடமிருந்து எங்களால் மேலும் கணிசமான நிதி திரட்ட முடிந்தது.''

'அப்புறம்...'

'நாங்கள் ஐ.ஐ.டி. சென்னையைச் சார்ந்த அமைப்புகளில் ஒன்றாக கருதப்பட்டோம். ஐ.ஐ.டி.யில்  நடந்த பல கருத்தரங்குகளுக்கு எங்கள் பொருட்களை தயாரித்து சப்ளை செய்தோம். அதன் மூலம் எங்களால் இன்னும் பல வாடிக்கையாளர்களைக் கைப்பற்ற முடிந்தது. இதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் வாணிபமும் நன்றாக வளர்ந்தது.'

'பலதரப்பட்ட முதலீட்டா ளர்களிடமிருந்து நிதி பெற்றிருக் கிறீர்களே, ஒவ்வொருவரின் அணுகுமுறையிலும் நீங்கள் எந்த வகையான உபாயங்களைப் பெற்றிருக்கிறீர்கள்?'

சிறிது நேரம் யோசித்து, எண்ணங்களைத் தொகுத்துக் கொண்டு அவருடைய கருத்தைப் பகிர்ந்து கொள்ள தொடங்கினார் ஸ்ரீஜித்.

(முனைவோம்)

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

நான் 20 வருடங்களாக எலெக்ட்ரானிக் பொருட்களை சர்வீஸ் செய்து தருகிறேன். ஒரு நல்ல செல்போன் சர்வீஸ் ஷோரூம் வைக்கலாம் என்று நினைக்கிறேன் சென்னையில் எங்கு வைக்கலாம்?

-குரல்பதிவு மூலமாக.

''ராமன் எத்தனை ராமனடி என்கிற மாதிரி இந்த மொபைல் போனில்தான் எத்தனை ரகங்கள், எத்தனை வகைகள்! ஆயிரம் ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் விலை வரை இன்று  மொபைல் போன்கள் கிடைக்கின்றன. மாளிகையில் வசிக்கும் கோடீஸ்வரர்களிடமிருந்து சாதாரண மக்கள் வரை பயன்படுத்தும் ஒரு சாதனமாக, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் ஒரு உன்னத கருவியாக இன்று மொபைல் போன் இருக்கிறது.

இந்தியாவின் மொபைல் போன் தொழிற்துறையின் வளர்ச்சி உலகளவில் மூக்கில் விரல் வைத்து வியக்க வைக்கும் வளர்ச்சி.

எந்த மாதிரியான மொபைல் போன் உங்கள் கடையில் விற்க விருப்பப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் முடிவு செய்யுங்கள். விலை உயர்ந்த போனா அல்லது பட்ஜெட் மாடல் போனா? விலை உயர்ந்த போன் என்றால் அதை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் வருகைத் தரும் இடங்களான ஆடம்பர அங்காடிகளில் உங்கள் கடை இருக்க வேண்டும். பட்ஜெட் மாடல் போன் என்றால் மக்கள் அல்லது மாணவர் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் உங்கள் கடை இருக்க வேண்டும். சர்வீஸ் கடையில் இருந்து மொபைல் ஷோரூமிற்கு முன்னேறப் போகும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்."

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!


இவருக்கு இல்லை நாற்காலி ஆசை!  

கமதாபாத் ஐ.ஐ.எம். வெற்றியின் சிற்பி, 1965 முதல் 1972 வரை இதன் இயக்குநராகப் பணியாற்றிய ரவி மத்தாய். தன் சாதனைகளின் உச்சத்தில் இருந்த ரவி மத்தாய் தன் பதவியை 1972-ல் ராஜினாமா செய்தார். தன் பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்ட காரணம்:

''இந்தியாவின் பெரும் பாலான நிறுவனங்கள் வளர்ச்சியை இழந்து தேக்கநிலையில் இருப்பதற்கு இரண்டு காரணங்கள். அடிக்கடி சி.இ.ஓ.க்கள் மாறுவது: அல்லது வெற்றிகரமான சி.இ.ஓ.கள் நாற்காலியிலிருந்து இறங்க மறுப்பது.''

ரவி மத்தாய்க்குப் பின் புது இயக்குநராக சாமுவேல் பால் பதவியேற்றார். ரவி மத்தாய் அப்போது ஒரு புதுமையைச் செய்தார். சாமுவேல் தலைமையின் கீழ் ரவி மத்தாய் பேராசிரியராகப் பணியாற்றினார். பதவி ஆசையே இல்லாமல் இப்படியும் சில தலைவர்கள்!

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு