Published:Updated:

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

பிரீமியம் ஸ்டோரி
திருமதி எஃப்.எம்.

''வாழ்க்கையில் கஷ்டம் வருவது சகஜம்தான். ஆனால், பொருளாதார ரீதியாக நெருக்கடி வரும்போது அதிலிருந்து மீண்டு வருவது மிகப் பெரிய சவால். எங்கள் வாழ்க்கையிலும் மிகப் பெரிய நஷ்டம் வந்தது. அதைச் சமாளித்து அந்த நஷ்டத்தினால் ஏற்பட்ட கடன்களை அடைத்து இன்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என தனது குடும்ப நிதி நிர்வாக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கோவையைச் சேர்ந்த விசாலாட்சி சண்முகசுந்தரம்.

##~##
''எ
னக்கும், எனது கணவருக்கும் சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால், பிஸினஸ் செய்வதற்காக கோயம்புத்தூர் வந்தார் எனது கணவர். அதனால் இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம். நான் பி.எஸ்.சி. படித்திருக்கிறேன். எனது கணவர் பி.காம். படித்திருக் கிறார்.

நாங்கள் கோயம்புத்தூர் வந்து இருபத்தைந்து வருடங் கள் ஆகிறது. என் கணவர் பருத்தியை வாங்கி மில்களுக்கு சப்ளை செய்யும் பிஸினஸ் செய்து வருகிறார். எனக்கு குடும்பப் பொறுப்பு. எங்களுக்கு இரண்டு மகன்கள். பெரியவன், சோமசுந்தரம் சென்னை ஐ.ஐ.டி.-யில் எம்.எஸ். படிக்கி றான். சின்னவன், சந்தோஷ் சுந்தரம் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

என் கணவர் ஸ்பின்னிங் மில் உரிமையாளராக இருந்தார். 2001-ம் ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஐம்பது லட்சம் ரூபாய் கடன் வந்தது. அதனால் அந்த கடனை அடைக்க எங்களிடம் இருந்த சேமிப்பு அனைத்தையும் கொடுத்து சரிகட்ட வேண்டியிருந்தது. அந்த கடனையெல்லாம் அடைத்து முடித்தபிறகு பருத்தியை வாங்கி ஸ்பின்னிங் மில்களுக்கு கொடுக்கும் பிஸினஸ் செய்து வருகிறார். எங்களது வாழ்வில் மறக்க முடியாத காலக்கட்டம் அது.  

நஷ்டத்திலிருந்து மீண்ட போது, மீண்டும் ஜீரோவிலிருந்து வாழ்க்கையைத் துவங்கினோம். அப்போது கடன் இல்லாமல் வாழ வேண்டும், சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதை சபதமாக எடுத்துக் கொண்டோம். அன்றிலிருந்து வருமானத்திற்கு மீறி எந்தவிதச் செலவுகளும் செய்வது கிடையாது.

திருமதி எஃப்.எம்.

எங்கள் பெரிய மகன் பி.இ. படிக்கும்போது கல்விக் கடன் வாங்கி படிக்க வைக்கலாம் என எல்லோரும் சொன்னார்கள். ஆனால், அவன் படித்து முடித்தபிறகு அவன் மேல் அந்த கடன் சுமை வந்து விழும் என்பதால் கல்விக் கடன் வாங்காமல் எங்களது முயற்சியிலே அவனை படிக்க வைத்தோம். அவனுக்கு வண்டி, மொபைல் போன் என எதுவும் வாங்கிக் கொடுத்தது கிடையாது.

திருமதி எஃப்.எம்.

எங்கள் இரண்டு மகன் களையும் பள்ளிப் படிப்பு முடியும்வரை டியூஷனுக்கு அனுப்பியது கிடையாது. அவர்களாகவே படித்துக் கொள்வார்கள்; அதை மீறி சந்தேகம் வந்தால் நானும் எனது கணவரும் பாடங்கள் சொல்லிக் கொடுப்போம்.  நாம் படித்த படிப்பு நம் குழந்தைகளுக்குகூட உதவவில்லை என்றால் படித்து என்ன பயன்?

என் கணவருக்கு மாதம் 35,000 ரூபாய் வருமானம் வரும். புளி, மிளகாய், மசாலா சாமான்கள், அரிசி என  வீட்டுச் சாமான்கள் ஒரு வருடத்திற்கு மொத்தமாக வாங்கிவிடுவேன். எங்கள் வீடு லோன் வாங்கி கட்டினதுதான். அதற்கு மாதா மாதம் தவணை கட்டி வருகிறோம். பெரிய பையனுக்கு மெரிட்ல ஐ.ஐ.டி. சீட் கிடைத்ததால அவனுக்கு உதவித் தொகை கிடைக்கிறது. அதில் அவனது செலவுகளை பார்த்துக் கொள்வான். சின்ன வனுக்கு மட்டும் பள்ளிக் கட்டணம் கட்டி வருகிறோம்.  

எங்கள் வீட்டிலிருக்கும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற அனைத்து பொருட் களும் மாத தவணையில் வாங்கியதுதான். மொத்தமாக வாங்க முடியாததால் ஒவ்வொரு பொருளாக வாங்கினேன். ஒரு பொருள் வாங்கி அதற்கு இ.எம்.ஐ. முடிந்தபிறகு அடுத்த பொருள் வாங்குவேன்.

ஆனால், வீட்டுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி குடோனில் போடும் பழக்கம் என்னிடம் கிடையாது. இலவச கிஃப்ட் என்ற பெயரில் மட்டமான பொருட்களை நம் தலையில் சுமத்திவிட்டு போகும் பொருட்களை வாங்கவே மாட்டேன். ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் போன்ற எந்த கவர்ச்சித் திட்டங்களையும் நான் ஆதரிப்பது கிடையாது. என் வீட்டிற்கு அவசியமான தேவை எதுவோ அதை மட்டுமே வாங்குவேன்.

திருமதி எஃப்.எம்.

எனக்கு தையல் தெரியும் என்பதால் எனது துணிகளை நானே தைத்துக் கொள்வேன். வெளியில் தைக்க கொடுக்க மாட்டேன். இதனால் கொஞ்சம் பணம் சேமிக்க முடிகிறது.

வீட்டுக்கு பின்னால் தென்னை மரங்கள், வாழை மற்றும் கொஞ்சம் காய்கறி செடிகளும் இருக்கிறது. நான் வீட்டில் இருப்பதால் இந்த செடிகளை பராமரித்து சீஸனுக்கு தகுந்த காய்கறிகளை வளர்த்து அதை சமையலுக்கு பயன்படுத்துவேன். வீட்டுச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தில் நகைச் சீட்டு மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறேன்.

எனக்கு இரண்டு பையன்கள்தான் என்றாலும், தங்கத்தில் முதலீடு செய்ய காரணம் எந்தவித நெருக்கடி நேரத்திலும் தங்கத்தை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்ய முடியும். நிலத்தின் ஆவணங்களை அடமானம் வைத்தும் பணம் ஏற்பாடு செய்ய முடியும்.

என் கணவரின் நண்பர் ஏஜென்டாக இருக்கிறார். அவர் சொன்ன யூலிப் பாலிசிகளில் நிறைய பணத்தைப் போட்டார் என் கணவர். அவர் போட்ட பணத்தில் பாதிதான் இன்றைக்கு இருக்கிறது. இதுபோன்ற யூலிப் பாலிசிகளில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம்; பாதுகாப்பான முதலீடுகளை செய்யலாம் என நான் சொன்னதால் இப்போது தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வருகிறோம்.

என் கணவர் கடன் வாங்கி பட்டகஷ்டங்களை 'கடன் வாங்காமல் கடன் வருமா’ என்று ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டிருக்கிறார். கடன் வாங்குவதற்கு முன்னால், நம்மால் அதை ஒழுங்காக கட்ட முடியுமா என ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் வாழ்க்கை இனிதாக இருக்கும்'' என்றார்.

-பானுமதி அருணாசலம்
படங்கள் : பாலநாக அபிஷேக்

திருமதி எஃப்.எம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு