பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக் ஹோம்ஸ்

ரிலையன்ஸின் காலாண்டு முடிவுகள் டிவி-யில் ஃபிளாஷாகி முடிந்த அரை மணி நேரத்தில் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். பிரஷ்ஷாக உள்ளே வந்தவர், எடுத்த எடுப்பிலேயே முழுமூச்சில் பேச ஆரம்பித்தார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''ரிலையன்ஸின் ஏற்றம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே பெரும்பாலான அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். 2010-11-ம் ஆண்டின் வருமானம் 2.48 லட்சம் கோடி ரூபாய், மார்ச் 12-வுடன் முடிந்த நிதி ஆண்டில் 3.29 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந் திருக்கிறது. ஆனால், நிகர லாபம் கடந்த நிதி ஆண்டைவிட 200 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. (20,286-20,040). இந்த லாபம்கூட இதர வகைகளில் கிடைத்த வருமானத்தால்தான் வந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த வகைகளில் கிடைத்த வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. (2011-3,052, 2012-6,192) அதாவது, முக்கியமான பிஸினஸ்களில் இருந்துவரும் வருமானம் குறைந்துகொண்டே இருக்கிறது.

தவிர, 2011-ன் நான்காவது காலாண்டு லாபத்தைவிட 2012-ன் இதே காலாண்டில் லாபம் 21% குறைந்திருக்கிறது. அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு இந்த நிலையே தொடரும்'' என்றவரிடம், ''எல்.ஐ.சி. நிறுவனத்தை எப்படி தட்டிக்கேட்பது என்று தெரியாமல் கட்டுப்பாட்டு வாரியங்கள் தவிப்பதாகச் சொல்கிறார்களே'' என்றோம்.

''எல்.ஐ.சி. வங்கிப் பங்குகளை வாங்கிக் கொண்டே போகிறது. ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் எந்த பங்கிலும் 10 சதவிகிதத்திற்கு மேல் முதலீடு செய்யக் கூடாது என ஐ.ஆர்.டி.ஏ. விதிமுறை சொல்கிறது. அதையும் தாண்டி ஒரு டஜன் நிறுவனப் பங்குகளில் எல்.ஐ.சி.யின் பங்கு முதலீடு 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது.

இந்தப் பட்டியலில் அண்மை யில் சிண்டிகேட் வங்கியும் சேர்ந்துள்ளது. இந்த வங்கியின் 2.8 கோடி பங்குகளை (4.7%) எல்.ஐ.சி. சமீபத்தில் வாங்கியது. இதையும் சேர்த்தால் இந்த பங்கில் மட்டும் எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடு 14.5%. எல்.ஐ.சி.யின் இந்த போக்கை செபியோ, ஐ.ஆர்.டி.ஏ.வோ கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. எல்.ஐ.சி. ஆபத்பாந்தவனாச்சே, அதை எப்படி தட்டிக் கேட்பது என்று கையைப் பிசைகிறார்கள்''.

உற்சாகமாகப் பேசியவருக்கு ஒரு தட்டில் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியும் வைத்து கொடுத்தோம். அதை ரசித்து சாப்பிட்டவர், ''கௌசிக் பாசு அந்தர் பல்டி அடித்த விஷயம் தெரியுமா?'' என்று சொல்ல ஆரம்பித்தார்.

''வாஷிங்டன் போன  பிரதமரின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, 'இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நடக்க வாய்ப்பு இல்லை. 2015-ம் ஆண்டுக்கு பிறகு புதிய அரசு பொறுப்பேற்று சீர்திருத்தங்களை செய்தபிறகு இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும்’ என்று பேசினார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

இப்படி பேசியபிறகு யார் என்ன சொன்னார்களோ, அடுத்த நாளே 'நான் அப்படிப் பேசவில்லை, என் பேச்சினை மீடியாக்கள் திரித்துவிட்டன’ என்றார். பாசு ஏன் இப்படி பல்டி அடித்தார் என்று தெரியாமல் குழம்பிக் கிடக் கிறார்கள்'' என்றவர், சிக்கலில் இருக்கும் பங்குகள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

''நிதிச் சிக்கலில் இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம், வெளிநாடுகளிலிருந்து நேரடியாக விமான எரிபொருளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த அனுமதியால், கிங்ஃபிஷரின் எரிபொருள் செலவு சுமார் 10% குறையும். இந்த செய்தி வந்தும் கிங்ஃபிஷர் பங்கின் விலை உயரவில்லை. இந்த பங்கின் மீது முதலீட்டாளர்களுக்கு  நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது.  

எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனம் வாங்கப் போவதாக பெரும் புரளி. எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் புரமோட்டர் ஹோல்டிங் 27%தான் இருக்கிறது. அதனால், அந்நிறுவனத்தைக் கையகப்படுத்தப் போவதாக செய்திகள் கசிகின்றன. ரிலையன்ஸ் கேப்பிட்டல்  வைத்திருக்கும் 8 சதவிகித பங்குகளை வாங்க பேச்சு நடத்தி வருவதாக தகவல். இதில் காமெடி, மஹிந்திராக்கு தனது நிறுவனத்திலேயே 25 சதவிகிதம்தான் பங்கு மூலதனம் உள்ளது.

எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி குறைந்துவிட்டது. நிர்வாகமும் சரி இல்லை. இந்நிறுவனத்தை வேறு யாராவது கையகப்படுத்தினால் இந்த பங்கின் விலை (100 ரூபாய்க்கு மேல்) உயரும் என்று அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள்.

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத் தின் புரமோட்டர் குரூப் தங்களிடமுள்ள பங்குகளை தொடர்ந்து அடமானம் வைத்திருக்கிறது. புரமோட்டர் குரூப்களில் ஒன்றான டான்டி ஹோல்டிங்ஸ் அதன் 1.30 கோடி பங்குகளை அடமானம் வைத்துள்ளது. கடந்த டிசம்பரில் இதே புரமோட்டர் குரூப் அடமானம் வைத்ததையும் மறந்துவிடக்கூடாது. எதற்கும் முதலீட்டாளர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.

ஆடை விற்பனை நிறுவனமான குட்டான்ஸ் பங்கு கடந்த வாரத்தில் மட்டும் ஒரேநாளில் 15% வீழ்ச்சிக் கண்டு 10.33 ரூபாய்க்கு குறைந்து போனது. லிஸ்டிங் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் இந்த பங்கு வர்த்தகமாக என்.எஸ்.இ. தடை விதித்துள்ளது. ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்ட இந்த நிறுவனத்தின் பங்குகளை ஆஃப் மார்க்கெட்டில் மலிவான விலையில் கிடைக்கிறது என்று யாரும் வாங்கிவிட வேண்டாம்.

சிமென்ட் பங்குகள் மீது கொஞ்சம் கவனமாக இருக்கவும். குஜராத்தில்  சிமென்ட் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்னும் சில நாட்களில் மழைக்காலம் ஆரம்பிப்பதால் சிமென்ட்கான தேவை குறையும். அப்போது சிமென்ட் துறை பங்குகளின் வருமானம் இன்னும் குறைய ஆரம்பிக்கும். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும்'' என பல செய்திகளை சொன்ன வருக்கு சில்லென்று எலுமிச்சை பழச்சாறு தந்தோம்.

'அட!’ என்று உறிஞ்சிக் குடித்தவரிடம், ''சந்தை இனி எப்படி இருக்கும்?'' என்றோம். ''முதலீட்டாளருக்கு கொண்டாட்டம்தான் என்று உமது அனலிஸ்ட் ஸ்ரீராமே சொன்னபிறகு நான் வேறு சொல்ல வேண்டுமா?'' என்றவர், லெமன் ஜூஸை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தார்.

##~##
''சந்தையின் போக்கு இரு விஷயங்களை பொறுத் திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. வரும் மாதத்தில் ஒரு டாலர் 54 - 56 ரூபாய்க்குகூட அதிகரிக்கக் கூடும். அப்படி உயர்ந்தால் ஆயில், உரம், நிலக்கரி போன்றவற்றின் இறக்குமதிச் செலவு அதிகரிக்கும். இதனால், விலைவாசி அதிகரித்து பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்து, ஸ்பெயின் பற்றி வரும் தகவல்கள். அங்குள்ள பல வங்கிகளின் வாராக் கடன் 9%க்கு மேல் அதிகரித்திருப்பது  கவலை அளிக்கிற விஷயமாக இருக்கிறது. வங்கி திவால் போன்ற ஏதாவது மோசமான தகவல் வந்தால் நிச்சயம் இந்தியச் சந்தையைப் பாதிக் கும்'' என்றவர் கிளம்பத் தயாரானார்.

ஒரு கணம் நின்றவர், ''ஏதேது, உமது ஃபேஸ்புக்கை ஃபாலோ பண்ணுகிறவர்களின் எண்ணிக்கை நாலாயிரத்தை தொட்டுவிடும் போலிருக்கிறதே! நிறைய நல்ல விஷயங்களை போடுகிறீர்கள்.

இதுவரை இந்த ஃபேஸ்புக்கை ஃபாலோ பண்ணாதவர்கள் http://www.facebook.com/#!/pages/Nanayam-Vikatan/204945246245336 என்கிற முகவரிக்குச் சென்று பயன் பெறவும்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு