Published:Updated:

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

பிரீமியம் ஸ்டோரி

ஜெயிக்க வைக்கும் மென்டரிங்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

'ஒருவேளை அந்த நேரத்தில் எங்களுக்கு சரியான 'மென்டரிங்’ கிடைத்திருந்தால் நாங்கள் ஆரம்பித்த முயற்சியை அவ்வளவு எளிதில் கைவிட்டிருக்க மாட்டோம்' - கடந்த காலத்தைப் பற்றி யோசித்தபடி பேச ஆரம்பித்தார் லட்சுமிநாராயணன். 'மென்டரிங்’ என்றால் என்ன என்று பார்க்கும் முன், அவரை பற்றி ஒரு சில வரிகள்...

##~##
கோ
வையில் தன்னுடைய பொறியியல் படிப்பை 1989-ம் ஆண்டு முடித்தார் லட்சுமி நாராயணன். அதன்பிறகு பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் சென்னையில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய கணினி பற்றியும், அதற்குத் தேவை யான ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் பற்றிய நுணுக்கங்களையும் அறிந்து கொண்டார்.

அச்சமயத்தில்தான் தகவல் தொழில் நுட்பமும், அதைச் சார்ந்த பிரிவுகளும் நல்ல வளர்ச்சிப் பாதையில் இருந்தன. தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றினால் தனது தொழில் வளர்ச்சி இன்னும் நன்றாக இருக்கும் என்று உணர்ந்த லட்சுமிநாராயணன், தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு ஒரு குறுகிய கால தகவல் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். அப்பயிற்சியை முடித்த பின்பு, 1994-ல் சென்னையில் உள்ள ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத் தில் வேலைக்குச் சேர்ந்தார்.

அடுத்த பத்து வருடங்கள் அந்நிறுவனத்தில் பணி புரிந்தார். மிகப் பெரிய மென்பொருள் பயன்பாடுகளை எப்படி உருவாக்குவது, அதில் வரும் சிக்கல்களை எப்படி சரி செய்வது என்பதில் அப்போது அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்தது.

2004...    

'திடீரென்று ஒரு நாள் நானும் என் நண்பரும் தனியாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்தோம். 'இதென்ன முட்டாள்தனம்?  பத்து வருடம் செய்து வந்த வேலையை இப்படி நொடியிலா உதறித் தள்ளுவது? குடும்பம் என்ன ஆவது?’  என்றெல்லாம்  பல கேள்விகளை பலரும் கேட்டார் கள். ஆனால், தீர்க்கமான முடிவுடன் வேலையிலிருந்து வெளியேறினோம்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

நாங்கள் வேலையை விடும்போது, நாங்கள் தொடங்கப் போகும் தொழில் பற்றிய திட்டங்கள் எதுவும் எங்கள் மனதில் சரியாக உருவாகி இருக்கவில்லை!' என்றார் லட்சுமிநாராயணன் புன்முறுவலுடன்.

'பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்கிற கவியரசர் கண்ணதாசனின் வரிகள் தொழில் முனைபவர் களுக்கு எவ்வளவு பொருத் தமாக இருக்கிறது! ஒவ்வொரு வரும் தொழில் தொடங்கும் விதத்தில்தான் எத்தனை வித்தியாசம். நன்கு ஆராய்ந்து, எப்போது, எங்கு, எப்படி ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பிப்போர் ஒரு ரகம். எடுத்தோம், கவிழ்த்தோம், ஆவது ஆகட்டும் என்று எதைப் பற்றியும் கவலைப்படாது தொடங்குவோர் இன்னொரு ரகம். இந்த அணுகுமுறைதான் சரி, இது தவறு என்று நாம் சொல்லி விட முடியாது. நன்கு ஆராய்ந்த பின்னும் பலர் கோட்டை விட்டிருக் கிறார்கள், எதைப் பற்றியும் நினைக்காமல் தொழில் ஆரம்பித்தவர்களிலும் பலர் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

'ஆரம்பித்த முதல் மூன்று வருடங்கள் என்ன செய்யலாம் என்று கண்டறிவதிலேயே சென்றுவிட்டது. தொடுதிரை தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து சில்லறை வர்த்தக தொழிலுக்கு உதவுகிற பயன்பாட்டினை வடிவமைத்தோம். மிகுந்த சிரமத்துடன் நாங்கள் அந்த பயன்பாட்டை உருவாக்கி இருந்தாலும், அதை விற்கச் சென்றபோதுதான் அதில் இருந்த ஒரு சில நெளிவுசுளிவுகள் எங்களுக்குத் தெரிந்தது. அதை சீர் செய்ய முயற்சிக்காமல், அதை  உடனடியாக கைவிட்டு விட்டோம். அந்த நேரத்தில் எங்களுக்கு தக்க அறிவுரை கூற யாரேனும் இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டோமோ என்று இப்போது  நினைக்கத் தோன்றுகிறது'' என்றார் லட்சுமிநாராயணன்.

சரி, 'மென்டரிங்’ என்றால் என்ன?

ஒரு வியாபாரச் சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். கடைப் பையனுக்கு வேலையில் ஏதாவது சந்தேகம் வந்தால் யாரை அணுகுவான்? கடை மேலாளரை. கடை மேலாளருக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் யாரை அணுகுவார்?  நிறுவன மேலாளரை. நிறுவன மேலாளருக்குச் சந்தேகம் வந்தால் யாரை அணுகுவார்? நிறுவன உரிமையாளரை. உரிமையாளருக்கே ஏதேனும் சந்தேகம் வந்தால், அவர் யாரை அணுகுவார்? நிறுவனத்தில் வேலை செய்பவர் அனைவரும் உரிமையாளரை நம்பி இருக்கும் போது பகவான் மேல் பாரத்தை போட்டுவிட்டு சும்மா இருக்க முடியுமா?

இத்தகைய தருணங்களில் தொழில் முனைவோர்கள் தங்களுக்கு நம்பிக்கை வாய்ந்தவர்களிடம் இருந்து பெறும் அறிவுரையையும், ஆலோசனையையுமே 'மென்டரிங்’ என்று சொல்கி றோம். ஆலோசனை தருபவரை 'மென்டர்’ என்றும், ஆலோசனை பெறுபவர்களை 'மென்டி’ என்றும் அழைக்கிறார்கள்.

'மென்டரிங் மூலம் நீங்கள் பெற்ற பயன்கள்தான் என்ன?' என்று லட்சுமிநாராயணனிடம் கேட்டேன்.

அவர் பதிலை அறிவதற்கு முன், ஒரு சிறிய விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இந்தியாவில் பல லட்சக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.) இயங்கி வருகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய அரசின் 2006 - 07-ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, பதிவு செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை 15,63,974.

இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் வெளியில் இருந்து முதலீடு பெற முடிவ தில்லை. விளைவு,  தொழில் உரிமையாளர்கள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இல்லை. லட்சுமிநாராயணன் கூறிய பதில் இக்கூற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!


இதுதான் தரம்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டை நம் ஊர்க் கடைகளில் பார்த்திருப்பீர்கள். உலகம் முழுக்க தினமும் 1.5 கோடி ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்கள் விற்பனையாகின்றன. இந்த சாக்லேட்டில் கரெக்ட்டாகப் பதினைந்து வேர்க்கடலைகள் இருக்கும். ஒன்று கூடினாலோ, குறைந்தாலோ, கம்பெனியின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதை நிராகரித்துவிடுவார்கள். ஸ்னிக்கர்ஸின் உலகளாவிய ரசிகர் கூட்டத்துக்கு இந்தத் தரக் கட்டுப்பாடு முக்கிய காரணம்!

- அத்வைத்

நான் கேட்ட கேள்விக்கு லட்சுமிநாராயணன், 'சுய முதலீட்டில் மட்டுமே இயங்கும் நிறுவனங்களுக்கு 'மென்டர்கள்’ ஒரு உந்துதலைத் தருகிறார்கள். 'மென்டர்’களால் கேட்கப்படும்  கடினமான கேள்விகள் தொழில் முனைவோர்களுக்கு உத்வேகத் தையும் தெளிவையும் தருகிறது. உதாரணமாக, என்னுடைய 'மென்டர்’ என்னிடம் இப்படி கேட்டார்.

''நீங்கள் எதற்காக பிஸினஸ் செய்கிறீர்கள்? காசுக்காகவா, சந்தோஷத்திற்காகவா, அல்லது நீங்கள் தயாரிக்கும் பொருளை பலரும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தினாலா..?’.  ஆற அமர செய்யலாம் என நினைக்கும் தொழில் முனைவோர்களை இத்தகைய கேள்விகள் உசுப்பேற்றி, ஓர் அவசரநிலையை ஏற்படுத்தும்' என்றார்.

'கேள்வி கேட்பது எளிது தானே?'

'திருவிளையாடலில் தருமி யும் அப்படித்தான் நினைத்தார். ஆனால், சரியான கேள்வி கேட்பது அவ்வளவு எளிதல்ல. கேள்வியைவிட கேள்வியின் விளைவுகள்தான் முக்கியம். இத்தகைய கேள்விகள் தொழில் முனைவோருக்கு அவருடைய இலக்கை தெளிவுபடுத்திக் காட்டும்.

எவ்வளவுதான் பெரிய ஓடுபாதை இருந்தாலும் விமானம் வானில் பறக்க வேண்டுமென்றால், அதற்கு அழுத்தம்  (த்ரஸ்ட்) தரவேண்டும். அதைப் போன்றுதான் 'மென்டர்’களும். அவர்கள் ஒரு அபாரமான அவசர நிலையை ஏற்படுத்துவார்கள். மிகுந்த அவசரத்தில் இருப்பவர்களின் கவனம் அவ்வளவு எளிதில் திசை திரும்பாது. அடுத்த நிமிடம் புறப்பட இருக்கும் ரயிலைப் பிடிக்க ஓடிக்கொண்டிருப்பவரின் கவனத்தை, எந்வொரு விஷயமாவது திசை திருப்புமா?' என்று கேள்வி எழுப்பினார் லட்சுமிநாராயணன்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

'மென்டர்’கள் கூறும் ஆலோசனை பொதுவானதாக இருக்குமா அல்லது உங்கள் நிறுவனத்தைக் குறிப்பிட்டு இருக்குமா?'

'மென்டர்’களின் வழி காட்டுதல் பொதுவானதாகவே இருக்கும். குறிப்பிட்ட தகவலைக் காட்டிலும், பொதுவான ஞானத்தைப் அவர்களிட மிருந்து பெறலாம். பல வருட அனுபவத்தால் அவர்களால் எதை விட்டுவிட்டு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்த முடியும். பொறியியல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் இரைச்சலில் இருந்து சமிக்ஞையை பிரித்தறிந்து ஆராயும் பக்குவத்தைப் பெற 'மென்டர்’கள் மிகுந்த உதவியாக இருப்பார்கள். பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் இத்தகைய ஞானத்தைப் பெறுவது கடினம்' என்ற அவர் 'ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்களை 'மென்டர்’கள் என்று கூறுவதைக் காட்டிலும் 'கோச்’ (Coach) என்று கூறலாம்' என்றார்.

அட! பிஸினஸிலும் 'கோச்’கள் வந்துவிட்டார்களா என்று நான் வியந்தேன்.

'நீங்கள் 'கோச்’களை வைத்துக் கொண்டதுண்டா?'

'யெஸ். நான் இரண்டு 'கோச்’களிடம் கலந்தாலோசித்து இருக்கிறேன்.'

'கோச்சிங்’ எவ்வகையான நன்மைகளை தந்தது?'

'முன்னோக்கு மாற்றம் என்று சொல்வார்களே, அதை நான் 'கோச்சிங்’ மூலம்தான் பெற்றேன். வெறும் பொறியாளராக இருந்த என்னை ஒரு புரொஃபஷனல் ஆக மாற்றியது 'கோச்சிங்’தான். முன்பெல்லாம், என் தயாரிப்பைப் பற்றிதான் நான் முதலில் வாடிக்கையாளரிடம் கூறுவேன். ஆனால், இப்போதோ வாடிக்கையாளரின் தேவையை முதலில் கேட்டு அறிகிறேன்!  

இரண்டாவதாக, 'கோச் மூலம் என் வேலைகளை எப்படி ஒழுங்குபடுத்திச் செய்வது என்று தெரிந்து கொண்டேன். இதனால் என் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக, நிமிடத்திற்கு ஒரு தரம் மின்னஞ்சல் சரி பார்ப்பது பலரின் வழக்கம். நான் 'கோச்சிங்’ பெற்ற பிறகு ஒரு நாளில் இரண்டு முறைதான் மின்னஞ்சல் பார்க்கிறேன். இதனால், கவனம் சிதறாமல் என்னால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.'

'சரி, 'மென்டரிங்’ மூலம் ஆதாயம் பெற 'மென்டி’களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?'

'வளமான நிலத்தில்தான் பயிர் விளையும். அதே போன்று 'மென்டரிங்’ மூலம் பயன் பெற வேண்டுமானால், 'மென்டர்கள்’ கூறும் ஆலோசனைகளை சரியான முறையில் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். கர்வத்தைக் கை விட்டு, 'மென்டர்கள்’ மேல் நம்பிக்கை வைத்து அவர்கள் கூறும் ஆலோசனையை மதித்து ஏற்க வேண்டும். இரு கை சேர்ந்தால்தான் ஓசை வரும். 'மென்டரிங்’ வெற்றி அடைய வேண்டுமானால் அதில் முக்கிய பங்கு 'மென்டர்’ களுக்கும் உண்டு. அவர்கள் மென்டிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டுமே தவிர, குறைகாணும் சாயலில் இருக்கக் கூடாது.'

லட்சுமிநாராயணனின் பதில் எனக்கு சரியாகவேப் பட்டது.

(முனைவோம்)

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு