Published:Updated:

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

பிஸினஸ்

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

பிஸினஸ்

Published:Updated:
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

நிறுவனத்தை விற்கத் தயாரா?

இந்த கட்டுரைத் தொடரில் கடைசி அத்தியாயம் இது. பிஸினஸ் ஆரம்பித்தல், வளர்ச்சி, நிதி திரட்டுவது என பல தலைப்புகளை இக்கட்டுரைத் தொடரில் நாம் இதுவரை பார்த்தோம். இந்த இறுதி அத்தியாயத்தில், தொடங்கிய நிறுவனத்திலிருந்து எப்படி வெளியேறுவது என்று பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ன்னது, நாம் தொடங்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதா? வியர்வையும் ரத்தமும் சிந்தி கடுமையாக பாடுபட்ட நிறுவனத்தில் இருந்து ஏன் வெளியேற வேண்டும்? அந்த முடிவை எப்படி எடுப்பது? என்றுதானே கேட்கிறீர்கள்?

நாம் தொழிலை ஆரம்பித்தப் பிறகு நம் பிஸினஸுடன், தயாரிக்கும் பொருட்களுடன், இடத்துடன், மக்களுடன் நமக்கு ஒரு இணைப்பு உண்டாகிவிடுகிறது. இது மனித இயல்பு. பல நேரங்களில் அந்தத் தொடர்பை துண்டிப்பது தற்காலிக வேதனையைத் தந்தாலும், பிற்கால நலனை கருதி அதை எடுக்கத்தான் வேண்டும். காரணம், பிரிவு என்பது காலத்தால் தவிர்க்க முடியாதது. தொழில் முனைவர்கள் தாங்கள் தொடங்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை வரும்போதும் இம்மனப்பான்மையை கடைப் பிடிக்கலாம்.  

##~##
ஹரியும் இதையேதான் சொன்னார். 'உணர்ச்சி பல சமயம் நம் கண்களை மறைத்து விடுகிறது. தொழில் முனைவதை நாம் ஒரு தொழிலாக மட்டும் கருதினால் பல சமயங்களில் நம்மால் சரியான முடிவை எடுக்க முடியும்' என்று தெளிவாகச் சொன்னார் ஹரி.

யார் இந்த ஹரி? என்ன செய்தார் அவர்? என்று நீங்கள் கேட்கும் முன் அவரைப் பற்றி ஒரு சில வரிகள்.

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் ஹரி. கல்லூரியில் படிக்கும்போதே அவரும் அவருடைய நண்பர்களும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டியிழுக்கப்பட்டார்கள். கல்லூரிப் படிப்பின்போது பல தொழில் முனைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்புகள் அவர்களின் உந்துதலை மேலும் அதிகரித்தது.

2002-ல் கல்லூரிப் படிப்பை முடித்த அவர் இரண்டு ஆண்டுகள் மென்பொருள் சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். பணியில் இருந்தபடியே நேரம் கிடைக் கும் போதெல்லாம் அவர் நண்பர்களுடன் சேர்ந்து பிஸினஸ் திட்டத்தை செரிவுப் படுத்தினார். திட்டங்கள் ஓரளவு தெளிவடைந்தவுடன் 2004-ல் தன் வேலையை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து தன்னுடைய நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

சுய முதலீடாக சுமார் ஒன்பது லட்சம் ரூபாயை அவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து முதலீடு செய்தார்கள். சுமார் ஒரு வருடத்துக்கு பிறகு ஒரு என்.ஆர்.ஐ. ஏஞ்சல் முதலீட்டாளர் ஒருவர் ஐம்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.  

2008-ல் சென்னை               ஏஞ்சல்ஸ் என்ற இயக்கத்திடம் இருந்து சென்றமுறை பெற்ற முதலீட்டைக் காட்டிலும் மேலும் அதிகமான ஒரு தொகையை முதலீடாகப் பெற்றார்கள். அதன் மூலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் தங்கள் சேவைகளை விரிவுப்படுத்தினார்கள்.

2010-ல் அவரது நிறுவனம் 1.2 கோடி வருவாயும், நானூறு ஊழியர்களையும் கொண்ட நிறுவனமாக வளர்ந்திருந்தது. இத்தகைய சிறப்பான வளர்ச்சி யடைந்திருந்தும் 2010-ம் ஆண்டு வேறொரு பெரிய நிறுவனத்திற்கு அவர்கள் நிறுவனத்தை விற்றுவிட்டு தாங்கள் தொடங்கிய பிஸினஸை விட்டு வெளியேறினார்கள் ஹரியும் அவரது நண்பர்களும்.

உழவில் நல்ல மகசூல் பெற வேண்டுமானால் நல்ல பயிர் வைத்தால் மட்டும் போதாது; அதைத் தக்க சமயத்தில் அறுவடையும் செய்ய வேண்டும். பிஞ்சுக்கும் முற்றலுக்கும் சந்தையில் விலை கம்மியாகத்தான் கிடைக்கும்.

சமுதாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தொழில் முனைபவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்குதல், புதுமையைக் கொண்டு வருதல் என பல முக்கியப் பங்காற்றினாலும் அவர்களின் தலையாய பங்கு செல்வத்தை உருவாக்குவதுதான். அந்த வகையில் பார்த்தால் தாங்கள் தொடங்கிய நிறுவனம் பிறர் மேலாண்மையில் இன்னும் அதிகம் செல்வத்தை உருவாக் கும் என்ற நிலைமை வந்தால், தொழில் முனைபவர் தன் நிறுவன மேலாண்மையை தகுதியான நபர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் உரிமையையும் நல்ல விலை கிடைத்தால் விற்று விடுவதில் தவறில்லை.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ஒரு நிறுவனத்தை உருவாக்கு வதற்குத் தேவையான திறன்கள் வேறு, அதன் வளர்ச்சிக்குத் தேவையான திறன்கள் வேறு. உருவாக்குவதற்கு ஐடியா ஜெனரேஷன் திறமை இருந்தால் போதும். ஆனால், ஒரு நிலைக்கு மேல் வளரச் செய்வதற்குச் செயலாக்கம் அல்லது அமல்படுத்தும் திறன் வேண்டும்.

'நாங்கள் தொழில் செய்வதில் இறங்கிய பிறகுதான் தெரிந்தது ஐடியாவை ஜெனேரட் செய்வது எளிது, ஆனால் அதை செயலாக்குவது கடினம் என்று' என்றார் ஹரி.

ஸ்கூல்மேட் (Schoolmate) என்ற பெயரைக் கொண்ட ஹரியின் நிறுவனம் பள்ளி மற்றும் வகுப்பு அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தும் சேவையை அளித்து வந்தது. ஹைதராபாத்தில் தங்கள் சேவையை தொடங்கிய அந்த நிறுவனம், பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

'ஆனால் மூன்று நகரங் களுக்கு எங்கள் சேவையை விரிவு படுத்துவதற்கு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆனது. ஆரம்பித்த ஐந்து வருடங் களில் ஐம்பது நகரங்களில் ஊடுருவ நினைத்திருந்த எங்களுக்கு நாங்கள் அடைந்த முன்னேற்றத்தில் திருப்தி இல்லை. நாங்கள் வைத்திருந்த வளர்ச்சி இலக்கை அடையும் ஆற்றல் எங்களுக்குள் இல்லை என்றும் புரிந்தது. அந்தச் சமயத்தில் எங்களுக்கு இரண்டு வழிதான் தெரிந்தது.

ஒன்று, அனுபவம் வாய்ந்த ஒருவரை எங்கள் நிறுவனத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் நியமிப்பது. நாங்கள் அனைவரும் இளம் வயதில் இருந்ததால், ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த ஒருவரை எங்களால் மேலாண்மை செய்ய முடியுமா என்ற ஐயம் எழுந்தது. அதனால் இம்மார்க்கத்தை கைவிட்டோம். இரண்டாவது, எங்கள் நிறுவனத்தையும் நாங்கள் உருவாக்கியிருந்த தொழில் நுட்பத்தையும் ஒரு பெரிய நிறுவனத்திடம் விற்று விட்டு, நாங்கள் தொடங்கிய நிறுவனத்தைவிட்டு வெளி யேறுவது. அந்த சமயத்தில் எங்கள் சேவைகள் சற்று பிரபல மடைந்திருந்ததால், எங்கள் நிறுவனத்தை வாங்குவதில் ஆர்வம் இருந்தது. சிறந்த மதிப்பீடு அளித்த ஒரு நிறுவனத்திடம் எங்கள் பிஸினஸை விற்றுவிட்டு நாங்கள் வெளியேறினோம்' என்ற ஹரியிடம் இப்படி கேட்டேன்.

'ஐந்து வருடங்கள் உங்கள் நிறுவனம் வளர கடுமையாக உழைத்த நீங்கள், இப்படி திடீரென்று வெளியில் வந்தது எப்படி?'

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

'நாங்கள் நன்கு யோசித்தே எடுத்த முடிவு இது. எங்கள் நிறுவனம் அளித்து வந்த சேவைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பது புலப்பட்டது. நாளை பொருள் பலம் கொண்ட ஒரு நிறுவனம் சந்தையில் புகுந்து மார்க்கெட் ஷேரை அபகரித்துக் கொண்டால், இப்போது இருப்பதைவிட எதிர்காலத்தில் எங்கள் நிறுவனத்தின் மதிப்பு குறைந்து போகலாம் என்பதை உணர்ந்தோம். அவ்வாறு நேர்ந்தால் அந்த இக்கட்டான நேரத்தில் நல்ல மதிப்பீடும் கிடைக்காது. உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்ற பரிதாப நிலையில் நாங்கள் இருக்க விரும்பவில்லை.'

'தொழில் முனைபவராக இருந்தபோது கிடைத்த அனுபவங்கள் உங்களுக்கு இப்போது உதவுகிறதா?' என்றேன் நான்.

'இன்று நான் வேறொரு கம்பெனியில் பணியாற்றி வருகிறேன். தொழில் முனையும் போது பெற்ற அனுபவங்கள் இப்போதும் எனக்கு நல்ல உதவியாக இருக்கிறது. குறிப்பாக, மூன்றைச் சொல்வேன். முதலாவது, என்னால் வேகமாக முடிவுகள் எடுக்க முடிகிறது. இரண்டாவது, என்னுடைய மேலதிகாரியின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்காமல் என்னால் தன்னிச்சையாகச் செயல்பட முடிகிறது. மூன்றாவது, பணத்தின் மதிப்பை என்னால் நன்கு உணர முடிகிறது' என்றார் ஹரி.

'எப்படி?'

'நான் தொழில் தொடங்கு வதற்கு முன் பணியில் இருந்த போது இரண்டு, மூன்று ஆயிரம் எல்லாம் அவ்வளவு பெரிதாக தெரிந்ததில்லை. ஆனால், எங்கள் நிறுவனத்தில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது இரண்டு, மூன்று ஆயிரம் ரூபாய் இருந்தால் ஒரு ஊழியரின் மாதச் சம்பளத்தை தக்க நேரத்தில் கொடுக்க முடியுமே என்பதை உணர்ந்தேன்.'

கடைசியாக நான் சொல்வது ஒன்றைத்தான்: எது எப்படியானாலும் சரி, தொடங்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதை ஒரு முடிவாகக் கருதாமல், அடுத்த கட்டப் பயணத்தின் ஆரம்பமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பாடலாசிரியர் கங்கை அமரனின் வரிகளில் சொல்லப் போனால், 'ஒரு கதை என்றும் முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம், இனியெல்லாம் சுகமே!'

(முற்றும்)

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!


சூப்பர் ஃபாஸ்ட் ரிப்பேர்!  

சாதாரணமாக லேப்டாப் ரிப்பேருக்குக் கொடுத்தால் நம் கைக்குத் திரும்பி வர பதினைந்து நாட்களாகிறது. அமெரிக்காவில் தோஷிபா கம்பெனி, தன் லேப்டாப்கள் ரிப்பேர் ஆவதை கணிசமாக குறைத்ததால் கஸ்டமர்கள் மதிப்பீட்டிலும் விற்பனையிலும் மற்ற கம்ப்யூட்டர் நிறுவனங் களை பின்னுக்குத் தள்ளி முன்னேறலாம் என்று கணக்குப் போட்டது.

திட்டம் சரி. எப்படி நிறை வேற்றுவது என்று யோசிக்கும் வேளையில், தோஷிபா அதிகாரி ஒருவர், யூ.பி.எஸ். என்னும் கூரியர் கம்பெனிக்குப் போனார். அப்போது அவர் மூளையில் வெட்டியது ஒரு மின்னல் ஐடியா. பொதுவாக, லேப்டாப்கள் ரிப்பேரானால் அது யூ.பி.எஸ். கம்பெனி மூலம் தோஷிபா நிறுவனத்திற்கு வரும். சரி செய்தபிறகு மீண்டும் யூ.பி.எஸ். மூலம் கஸ்டமரை அடையும். இதற்கு பதில் யூ.பி.எஸ். நிறுவனத்தில் தோஷிபா இன்ஜினீயர்களை இருக்க வைத்து, ரிப்பேருக்கு வரும் லேப்டாப்களை உடனுக்குடன் சரி செய்து தந்தால் என்ன..?

இந்த ஐடியாவை அமல்படுத்திய பிறகு ரிப்பேர் சரி செய்வதற்கான நாட்கள் பதினைந்திலிருந்து ஐந்தாக குறைந்தன. விற்பனை மீண்டும்களை கட்டியது.

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism