Published:Updated:

ஹோம் லோன் இ.எம்.ஐ. யாருக்கு எது பெஸ்ட்?

கவர் ஸ்டோரி

ஹோம் லோன் இ.எம்.ஐ. யாருக்கு எது பெஸ்ட்?

கவர் ஸ்டோரி

Published:Updated:
ஹோம் லோன் இ.எம்.ஐ. யாருக்கு எது பெஸ்ட்?

வீட்டுக் கடனை வாங்குகிற பலர் அதை கட்டி முடிப்பதற்குள் படாதபாடு படுகிறார்கள். இதற்குக் காரணம், கடனுக்கான திரும்பச் செலுத்தும் மாதத் தவணை (இ.எம்.ஐ.) குறித்து சரியாகத் திட்டமிடாமல் இருப்பதுதான். நமக்கேற்ற மாதத் தவணைத் திட்டம் எது என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டன் வாங்கும் சமயத்தில், வங்கி மேலாளர் சொல்வதன் அடிப்படையில் அல்லது தெரிந்தவர்கள், நண்பர்கள் சொல்வதன் அடிப்படையில் ஏதாவது ஒரு திட்டத்தைத் தேர்வு செய்துவிடுகிறோம். ஆனால், அது சரியான திட்டமாக இல்லாதபட்சத்தில் நமக்கு ஏற்படுவது மன உளைச்சல்தான். தவிர, வட்டி நஷ்டமும் ஏற்படலாம்.

இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு, வீட்டுக்கான கடனை வாங்கும் முன்பே நமக்கேற்ற மாதத் தவணைத் திட்டம் எது என்பதைக் கண்டறிந்து, அதை தேர்வு செய்வதுதான். நமக்கேற்ற மாதத் தவணைத் திட்டத்தைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியது என்ன என, வீட்டுக் கடன் அளிக்கும் வங்கி அதிகாரிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவன அதிகாரிகளிடம் விசாரித்த போது அவர்கள் அளித்த பயனுள்ள டிப்ஸ்கள் இனி:

சுலபமாக கட்ட முடியுமா?

மாதத் தவணையைத் தேர்வு செய்யும்போது, அது உங்களால் சுலபமாக கட்டும் தொகையாக இருப்பது அவசியம். மாதா மாதம் வாயையும் வயிற்றையும் கட்டி, மாதத் தவணைக்கான பணத்தைக் கட்டுகிற மாதிரி இருக்கக் கூடாது.

உதாரணத்துக்கு, வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. ஆக உங்களால் ஒவ்வொரு மாதமும் 18,000 ரூபாய் கட்ட முடியும் என்றால், 15,000 ரூபாய் வரை இ.எம்.ஐ. கட்டுகிற மாதிரி கடன் வாங்கலாம். ஆனால், மாதம்தோறும் 18,000 ரூபாயை நீங்கள் கட்டலாம். இ.எம்.ஐ.யாக கட்ட வேண்டிய தொகையைவிட அதிகமாக கட்டினால் அதை வங்கிகள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும். அதேநேரத்தில், திடீரென செலவு வந்தால் இ.எம்.ஐ. தொகையான 15,000 ரூபாயை மட்டும் கட்டிவிடலாம். இப்படி செய்வதனால் நம் கடனை சரியாகக் கட்டுபவராக  நாம் இருப்போம்.

ஹோம் லோன் இ.எம்.ஐ. யாருக்கு எது பெஸ்ட்?


எப்படிப்பட்ட தவணை?

அண்மைக் காலமாக வீட்டுக் கடன் வாங்குபவர்களின் வசதிக்கு ஏற்ப வங்கிகளும் மற்றும் வீட்டு வசதி நிறுவனங் களும் பல வகையான இ.எம்.ஐ. திட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இதில் ஏறுமுக மாதத் தவணை, இறங்குமுக மாதத் தவணை என்று இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு தவணைகள் பற்றி இனி பார்ப்போம்.

ஹோம் லோன் இ.எம்.ஐ. யாருக்கு எது பெஸ்ட்?

ஏறுமுக மாதத் தவணை!

இளம் வயதில் அல்லது வேலைக்குச் சேர்ந்து சில ஆண்டுகளில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு இந்த ஏறுமுக (ஸ்டெப் அப்) மாதத் தவணை திட்டம் பலன் அளிக்கும். அதாவது, ஆரம்பத்தில் குறைவான மாதத் தவணை, சம்பளம் கூடக்கூட அதிகரிக்கும் மாதத் தவணை என்பது இதன் சிறப்பு அம்சம்.

உதாரணத்துக்கு, ஒருவருக்கு முதல் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் 12,000 ரூபாய் என்பது போல மாதத் தவணை இருக்கும். அதன்பிறகு அது 15,000 ரூபாயாக உயரும். இம்முறையில் ஒருவருக்கு அதிக கடன் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, அடுத்துவரும் ஆண்டுகளில் கூடுதலாக கட்டப் போகும் மாதத் தவணைக்கு ஏற்ப கூடுதல் கடன் கிடைக்கும்.

இறங்குமுக மாதத் தவணை!

பணி ஓய்வு பெறுவதற்கு குறைவான ஆண்டுகள் இருப்பவர்களுக்கு, இந்த இறங்குமுக (ஸ்டெப் டவுண்) மாதத் திட்டம் ஏற்றதாக இருக்கும். இதில் ஆரம்பத்தில் அதிக மாதத் தவணையும், பணி ஓய்வு பெறும்  காலம் நெருங்க நெருங்க குறைந்த மாதத் தவணையுமாக இருக்கும்.

நடுத்தர வயதைத் தாண்டிய நிலையில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் கல்யாணச் செலவு இருப்பதால், அந்த கால கட்டத்தில் வீட்டுக் கடன் தவணை குறைவாகக் கட்டுவது பல வகையில் உதவிகரமாக இருக்கும்.  

ஹோம் லோன் இ.எம்.ஐ. யாருக்கு எது பெஸ்ட்?


மொத்தத் தொகை..!

இந்த இரு முறைகள் தவிர இடையில் உங்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைத்து, சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் பட்சத்தில் மாதத் தவணையை மாற்றி அமைத்து அதிகமாக கட்டும் வசதி இருக்கிறது. இதே போல், வருடத்துக்கு சுமார் 20% தொகையை கூடுதலாக அபராதம் இல்லாமல் மொத்தமாக கட்ட பல வங்கிகள் சம்மதிக்கின்றன. கையில் போனஸ், ஊக்கத் தொகை போன்றவை வரும்போது அதைக் கட்டினால் அசல் உடனடியாக குறையும். இது போல சில ஆண்டுகள் கட்டி வந்தால் கடனுக்கான தவணைக் காலம் வெகுவாகக் குறைந்துவிடும்.

மேலும், தற்போது வீட்டுக் கடனை முன்கூட்டியே (ப்ரி பேமென்ட்) கட்டுவதற்கான அபராதம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்பது வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு சந்தோஷமான செய்தி..!

தவணை எவ்வளவு?  

ஹோம் லோன் இ.எம்.ஐ. யாருக்கு எது பெஸ்ட்?

வட்டி விகிதத்தைக் கவனிக்கும் அதே நேரத்தில், அந்த வட்டி எவ்வளவு நாளைக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது என்பதையும் கவனிப்பது அவசியம். வட்டி என்பது ஆண்டுக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒரு முறை என வீட்டுக் கடனுக்கு கணக்கிடப்படுகிறது.

இதில் மாதத்துக்கு ஒரு முறை வட்டி கணக்கிடும் முறையில் வீட்டுக் கடன் வாங்குவதே கடன் வாங்குபவருக்கு லாப கரமாக இருக்கும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

ஒருவர் 20 லட்ச ரூபாயை 13% நிலையான வட்டியில் 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக  வைத்துக் கொள்வோம். இவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிட்டால் இ.எம்.ஐ. ரூ.23,726 கட்ட வேண்டும். இதுவே மாதத்துக்கு ஒருமுறை வட்டி என்று கணக்கிட்டால் இ.எம்.ஐ. ரூ.23,432 ரூபாய் கட்ட வேண்டும்.

அந்த வகையில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கீட்டு முறையில் வட்டியாக மட்டும் கட்டும் தொகை 36.94 லட்ச ரூபாயாக இருக்கும். மாத வட்டி கணக்கீடு முறையில் வட்டிக்கு மட்டும் கட்டும் தொகை 36.23 லட்ச ரூபாயாக இருக்கும். இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் 71,000 ரூபாய்.

அந்த வகையில் கடனுக்கு எந்த முறையில் வட்டிக் கணக்கிடுகிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம். இப்போது முன்னணி பொதுத் துறை வங்கிகள் கடனைக் கட்ட கட்ட பாக்கி இருக்கும் அசல் தொகைக்கு வட்டி(Reducing balance) கணக்கிடும் முறையை கொண்டு வந்திருக்கின்றன. இந்த முறையில் கடன் வாங்கி னால் நாம் கட்ட வேண்டிய வட்டி இன்னும் குறையும்.

வட்டி எவ்வளவு?

பொதுவாக கடனுக்கான வட்டி விகிதம் பொதுத் துறை வங்கிகளில் குறைவாக இருக்கின்றன. தனியார் வங்கிகளில் இதைவிட சில சதவிகிதம் அதிகமாக இருக்கின்றன. ஆனால், தனியார் வங்கிகளில் சுலபமாக கடன் கிடைப்பதோடு, அதிக தொகையும் கடனாக கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், பொதுத் துறை வங்கிகளில் கடன் கிடைப்பதும் கஷ்டம்; அதிக தொகையும் கிடைக்காது.

நிறைய கடன் எளிதாக கிடைக்கிறதே என பலரும் தனியார் வங்கியில் கடன் வாங்கி,  பிற்பாடு கடனுக்கான பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். அலைச்சலையும், கால தாமதத் தையும் பொருட்படுத்தாமல் பொதுத் துறை வங்கிகளின் வாசல்படியை பலமுறை ஏறி இறங்கினால், ஆயுளுக்கும் நிம்மதியாக இருக்கலாம் என்பதே அனுபவஸ்தர்களின் வாக்கு.

வீட்டுக் கடன் வாங்கும்போது மேற்சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களையும் மனதில் கொண்டிருந்தால், உங்களுக்கு எந்த சிக்கலும் வராது!

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism