Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
ஷேர்லக் ஹோம்ஸ்

மிகச் சரியாக 8.30 மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். வந்தவுடன், ''டிவியைப் போடும், ஃபேஸ்புக் பங்கு என்ன விலைக்கு போகத் தொடங்குகிறது என்று பார்ப்போம்!'' என்றார். நாமும் அடித்துப் பிடித்து டி.வி.யைப் போட, ஃபேஸ்புக்கின் பங்கொன்றின் விலை 42 டாலர் என்று ஆரம்பித்து, அதிகபட்சமாக 43 டாலர் வரை சென்றது. பிற்பாடு மெள்ள மெள்ள குறைந்து வெளியீட்டு விலையான 38 டாலர் வரை இறங்கியது.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சி
ல சமயம் சில ஐ.பி.ஓ.கள் சந்தை யின் போக்கை பாரதூர மாக மாற்றும். 2003-ல் நம் சந்தையைக் காளை ஓட்டத்திற்குக் கொண்டுவர காரணமாக இருந்தது மாருதி பங்கு. அதுபோல, கடந்த பல ஆண்டுகளாக கடுமையாக ஏற்ற, இறக்கம் கண்டிருக்கும் அமெரிக்க சந்தையை மீண்டும் காளையின் பிடிக்குள் ஃபேஸ்புக் பங்கு கொண்டு வரும் என பலரும் நம்புகிறார்கள். அமெரிக்க வரலாற்றிலேயே பெரிய ஐ.பி.ஓ. என்கிற அந்தஸ்த்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு வந்த ஐ.பி.ஓ.களில் பெரியது ஜெனரல் மோட்டார்ஸும் வீஸா கார்டும்தான். பார்ப்போம், ஃபேஸ்புக் சந்தையைத் தூக்கி நிறுத்துமா, இல்லை கவிழ்க்குமா என்று?'' என்றபடி நம் சந்தைக்கு வந்தார்.

''எதிர்பார்த்தபடியே இந்த வாரத்தில் சந்தை கணிசமாக இறங்கியது. வாரத்தின் கடைசி நாளான இன்றுகூட காலையில் சந்தை மிகவும் குறைந்தே வர்த்தகமானது. ஆனால், மதியத்திற்குப் பிறகு வந்த எஸ்.பி.ஐ.யின் ரிசல்ட் நன்றாக இருந்துவிடவே, அதையே சாக்காக வைத்து சந்தை உயர்ந்தது. ஆனால், டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துவரும் வேளையில், சந்தையின் சரிவு மேலும் தொடரும் என்றே என் மும்பை நண்பர்கள் சொல்கிறார்கள். 4800 புள்ளிகளுக்கு கீழே சந்தை செல்லும்பட்சத்தில் 4650, 4500 வரைகூட சந்தை குறையலாம் என்கிறார்கள்.

இந்த இறக்கத்தைக் கண்டு கவலைப்படத் தேவையில்லை என்பதே என் கருத்து. 2008-ல் நாம் பார்க்காதச் சரிவா? அந்த நிலையிலிருந்து சந்தை மேலேறி வரத்தானே செய்தது. எனவே, இன்று சந்தை சரிந்தாலும் சில காலம் கழித்து, நிச்சயம் மேலே வரும். எனவே, நீண்ட கால நோக்கில் நல்ல பங்குகளை வாங்கி, முதலீடு செய்தால், நம் முதலுக்கு நிச்சயம் மோசம் வராது.

தவிர, இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களில் கிடைத்த நிலவரப்படி, பி.எஸ்.இ.யில் 392 பங்குகள் 52 வார குறைந்த விலையை அடைந்தன. இதில் ரிலையன்ஸ், என்.டி.பி.சி., பி.ஹெச்.இ.எல். உள்பட பல புளுசிப் கம்பெனிகளின் பங்குகளும்  அடக்கம். இந்த பங்குகளில் இருந்து எதிர்காலத்தில் நல்ல லாபம் தரக்கூடிய பங்குகளை பொறுக்கி எடுத்து, அதில் முதலீடு செய்யலாம். உலக அளவில் கமாடிட்டி பொருட்களின் விலை இறங்குவதால் இனி நிறுவனங்களின் செலவு குறைந்து லாபம் பெருகும்'' என நம்பிக்கையோடு பேசியவருக்கு ஒரு சிறிய தட்டில் மிளகாய் பஜ்ஜியும், தேங்காய் சட்னியும் வைத்துத் தந்தோம்.

''ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரன்ட் ஐ.பி.ஓ. முழுவது மாக சப்ஸ்கிரைப் ஆகி ஆச்சரியம் தந்திருக்கிறதே!'' என்றோம்.

''உண்மைதான். ஆனால், பல நிறுவனங்கள் இந்த பங்கிற்குத் தந்த ஆதரவுதான் இதற்கு காரணம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். ஆனால், லிஸ்ட் ஆகிற சமயத்தில் என்ன விலைக்கு ஆகிறது என்று பார்ப்பது அவசியம். ஐ.பி.ஓ.வில் பங்கு கிடைக்காதவர்கள் அவசரப்பட்டு லிஸ்ட் ஆகிற தினத்தன்று போய் வாங்க வேண்டாம். லிஸ்ட் ஆகி, விலை நிலை பெற்றபிறகு வாங்கலாம். நான் இப்படி சொல்வதற்கு காரணம், ஐ.பி.ஓ. என்றாலே மக்கள் வெறுத்து ஓடக்கூடிய காலமாக இருக்கிறது இது.

ஷேர்லக் ஹோம்ஸ்

2011 ஜனவரி முதல் கிட்டத்தட்ட 46 நிறுவனங்கள் சந்தை சரியில்லாத காரணத்தினால் ஐ.பி.ஓ. வருவதைத் தள்ளிப் போட்டிருக்கிறது. எனவே, ஜாக்கிரதை'' என்றவர், குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். பஜ்ஜியை சாப்பிட்டபடியே சில பங்குகளைப் பற்றிய செய்திகளை அடுக்க ஆரம்பித்தார்.

''ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய 3ஜி சேவைகளுக் கான கட்டணத்தை 70 சதவிகிதம் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று சந்தை  எதிர்பார்ப்புகள் சொல்கிறது. இதனால் இந்த பங்கு கொஞ்சம் வீக்காக இருக்கிறது. அதனால் 260 ரூபாய்க்கு கீழே செல்ல வாய்ப்பு இருக்கிறது.

எல் அண்ட் டி சிறப்பாக செயல்படும் நிறுவனம் என்பது தெரிந்ததே. ஆனால், பொருளாதாரச் சூழ்நிலைகள் சரி இல்லாதது, இன்ஃப்ரா துறையில் முதலீடு குறைந்தது போன்ற காரணங்களால் அந்த பங்கு 1,000 ரூபாய்க்கு கீழே கூட செல்ல வாய்ப்பிருக்கிறது. அதனால் கவனமாக இருக்கவும்.

ஷேர்லக் ஹோம்ஸ்

பத்னி கம்ப்யூட்டர் நிறுவனம் மே 21 முதல் என்.எஸ்.இ.யிலிருந்து டீலிஸ்ட் ஆகிறது. தப்பித் தவறி இந்த பங்கை வைத்திருப்பவர்கள் இந்த தேதிக்குள் விற்றுவிடுவது நல்லது.

கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் லாபம் குறைந்துள்ளதால் இந்த பங்கு களிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது.

பஜாஜ் ஆட்டோவின் நிகர லாபம் 772 கோடியாக குறைந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இதே காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக 1,400 கோடி ரூபாய் சம்பாதித் தது. ஆட்டோ துறைக்கு இப்போது சிரம தசை என்பதே இதற்கு காரணம். டாடா மோட்டார்ஸ், டி.வி.எஸ். மோட்டார்ஸ் என ஆட்டோ துறை நிறுவனங்கள் அனைத்துமே கஷ்ட காலத்தில் தான் இருக்கிறது.

எஸ்.பி.ஐ. வங்கியின் நிகர லாபம் ஏகத்திற்கும் எகிறி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இதே காலாண்டில் வெறும் 21 கோடி ரூபாய் மட்டுமே லாபம் சம்பாதித்த இந்த நிறுவனம், இந்த காலாண்டில் 4,050 கோடி ரூபாயை சம்பாதித்திருக்கிறது. வட்டி வருமானம் உயர்ந்ததும் வாராக் கடன் குறைந்ததுமே இதற்கு காரணம். இந்த செய்தியால் இந்த பங்கின் விலை வெள்ளிக்கிழமை அன்று ஐந்து சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்தது. ஆனால், இந்த ஏற்றம் தொடருமா என்பது சந்தேகமே!'' என பல தகவல்களை சொன்னவருக்கு  சில்லென்று நன்னாரி சர்பத் தந்தோம். அதை ரசித்துக் குடித்தவர் அடுத்த முக்கியமான செய்தியைச் சொன்னார்.

''பிரணாப் முகர்ஜியை குடியரசு தலைவர் பதவிக்கு காங்கிரஸ் நிறுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரிய வில்லை. ஆனால் ரூபாய் சரிவு, பங்குச் சந்தை சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் நிதி அமைச்சராக அவரது செயல்பாடுகள் திருப்தி இல்லை என்பது போன்ற பேச்சு சந்தையில் எழுகிறது. எனவே, அடுத்த குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டால், இரண்டு பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். அதில் முதலாமவர் ஆர்.பி.ஐ.யின் முன்னாள் கவர்னர் சி.ரங்க ராஜன், இரண்டாமவர் தற்போது ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ். பார்ப்போம், யாருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறதென்று!'' என்றவரிடம், இந்த வார இலவச இணைப்பான ரியல் எஸ்டேட் ஸ்பெஷலை காண்பித்தோம். அடடா, அமர்க்களம் என்று பாராட்டியவர், ரியல் எஸ்டேட் தொடர்பான ஒரு செய்தியைச் சொன்னார்.

''உலகின் முக்கியமான முதலீட்டாளரான ஜிம்ரோஜர் ரியல் எஸ்டேட் குறித்து கருத்து சொல்லி இருக்கிறார். அதாவது உலகில் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும் சமயத்தில் ரியல் எஸ்டேட்க்கு அதிக தேவை இருக்கும். அதனால் அதில் இப்போதே முதலீடு செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த ரியல் எஸ்டேட் சிறப்பிதழில் சொல்லி இருக்கிற விஷயங்கள்படி சிக்கல் இல்லாத இடத்தை வாசகர்கள் வாங்கிப் போட்டால் பிற்காலத்திற்கு உதவும்'' என்றவர், கிளம்பும் முன் சொன்ன விஷயம் முக்கியமானது.

''நாணயம் விகடன் டிவிட்டர் பக்கத்தைத்  தொடர்ந்து பார்த்து வருகிறேன். வாசகர்களுக்கு பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் டிவிட்டரில் தருகிறீர்களே! பலே பலே என் பாராட்டுகள். வாசகர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டிவிட்டரில் இதுவரை நாணயம் விகடனை ஃபாலோ செய்யாதவர்கள்

(http://twitter.com/NanayamVikatan) உடனடியாக ஃபாலோ செய்யுங்கள்'' என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism