மியூச்சுவல் ஃபண்ட்
நடப்பு
Published:Updated:

பிஸினஸ் சமூகம் - நாடார்கள்!

ஏ.ஆர்.குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.ஆர்.குமார்

அன்று சிவகாசியில் முதல் தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்தவர். இன்று அந்தப் பகுதியில் 649 தொழிற்சாலைகளாக உயரக் காரணம் அவர் விதைத்த விதைதான்...

குட்டி ஜப்பான் - பிரதமர் நேரு சிவகாசி நகரத்திற்கு இட்ட செல்ல பெயர். இந்த குட்டி ஜப்பான் 1900-ம் ஆண்டு வரை தமிழகத்தின் பல்வேறு சிறு நகரங்களைப் போல சாதாரணமாகவே இருந்தது. ஆனால், 1920-க்குப் பிறகு புயல் வேகத்தில் வளர ஆரம்பித்த இந்த நகரம் இன்றுவரை தன் வேகத்தைக் கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளவில்லை. இந்த புல்லட் வேக வளர்ச்சிக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் அய்ய நாடார்.

சிவகாசியில் 1905-ல் பிறந்தார் அய்ய நாடார். அப்பா, பழனியப்ப நாடார்; அம்மா, நாகம்மாள். இந்த குடும்பத்தில் முதல் குழந்தை அய்ய நாடார்தான்.

அன்றைக்கு சிவகாசி நகரம் ஏறக்குறைய ஒரு சிற்றூராகவே இருந்தது. சிறிய அளவில் விவசாயம், பொதிமாட்டு வண்டிகளில் பலசரக்கு ஏற்றிக் கொண்டு ஊர் ஊராகப் போய் விற்கும் வியாபாரம், புகையிலையைக் கருப்பட்டி நீரில் ஊறவைத்து, அதன்பின் காயவைத்து சுவை உண்டாக்குதல், கை இயந்திரத்தால் பஞ்சு அரைத்தல், கமலைத்தோல் செய்தல், நெசவு செய்தல், மண் பானை செய்தல், கயிறு திரித்தல், பால்மாடு வளர்த்தல் போன்ற விவசாயத் தொழில்கள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன.

ஏ.ஆர்.குமார்
ஏ.ஆர்.குமார்

ஆனால், இயந்திரமயமாக்கல் இத்தொழில்களை சிதைக்க ஆரம்பித்தது. இதனால் பலரும் வேலை கிடைக்காமல் திண்டாட ஆரம்பித்தனர்.

கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு ஏதாவது உதவ முடியாதா என்று நினைத்த அய்ய நாடாருக்கு அப்போது வெறும் பதினேழு வயதுதான். அப்பா செய்துவந்த குடும்பத் தொழிலை அவரும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் புத்தம்புது வாய்ப்புகள் எப்போதுமே உற்றார் உறவினர், நண்பர்கள் மூலம் வரும். அப்படி வரும் வாய்ப்புகளை சட்டென பிடித்துக் கொள்வது நாடார் சமூகத்தினருக்கே உரிய புத்திசாலித்தனம். அய்ய நாடாருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது.

அய்ய நாடாரின் மதிப்புமிக்க உறவினர் சின்னா நாடார். வணிகரான இவர் பத்திரிகைகளை தேடித் தேடிப் படிப்பார். அப்படி படித்தபோது, ஒருநாள் தீப்பெட்டி தயாரிப்பு பற்றிய கட்டுரை ஒன்றை படித்தார்.

படித்துவிட்டு, ''பேசாமல் நீயும் உன் தம்பி சண்முகவேலும் கொல்கத்தா போய் தீப்பெட்டி தயாரிப்பைப் பற்றி கற்றுக் கொண்டு வாங்களேன்'' என்று சின்னா நாடார் புதிய யோசனை ஒன்றை எடுத்துச் சொல்ல, சகோதரர்கள் இருவரும் 1922-ல் கொல்கத்தாவுக்கு புறப்பட்டனர்.

அந்த காலத்தில் பெரிய அளவில் பஸ் வசதி ஏதுமில்லை என்றபோதும், வங்காள மொழி சரியாகத் தெரியாது என்றபோதும், தடைகளை நினைத்து தயங்கி நிற்காமல், புதிய வாய்ப்பைத் தேடி துணிந்து கொல்கத்தாவுக்கு சென்றனர் சகோதரர்கள். அங்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தங்கி இருந்து, தீப்பெட்டி தயாரிப்பு பற்றிய அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டனர். 1923-ல் இரண்டு சகோதரர்களும் இணைந்து சிவகாசியில் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையை தொடங்கினார்கள்.

ஏ.ஆர்.குமார் மனைவியுடன்
ஏ.ஆர்.குமார் மனைவியுடன்

ஆங்கிலேயர்கள் அதிகம் இருந்ததால், கொல்கத்தாவில் இயந்திரமயமாக்கல் வெகுவாக இருந்த நேரமிது. தீப்பெட்டி தயாரிப்பதில் பாதி வேலையை இயந்திரத்திலும், மீதி வேலையை ஆட்கள் மூலமும் அங்கே செய்துவந்தனர். அய்ய நாடாரும் இதேபோல தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை ஜெர்மனி நாட்டிலிருந்து வாங்கினார்.

இயந்திரம் மூலம் தீப்பெட்டி தயார் செய்தபோது உற்பத்தி அதிகமிருந்தாலும் செலவும் அதிகமாகவே இருந்தது. தவிர, அப்போது சிவகாசியைச் சுற்றி வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.

செலவையும் குறைத்து, மக்களுக்கு வேலை தர என்ன வழி என்று யோசித்தார். ஜெர்மனியிலிருந்து வாங்கிய இயந்திரத்தை இலங்கைக்காரர் ஒருவருக்கு விற்றார். சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் ஆண்கள், பெண்கள் பலரையும் அழைத்து, அவர்கள் மூலம் தீப்பெட்டி தயாரித்தார். தொழிற்சாலையாக இயங்கிவந்த தீப்பெட்டி தயாரிப்பை குடிசைத் தொழிலாக மாற்றியதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பைத் தந்தவர் அய்ய நாடார்.

அந்த சமயத்தில், 'விம்கோ’ (Western Inida Match Company) நிறுவனம் தயாரித்த  தீப்பெட்டிகள் அய்ய நாடாருக்கு பெரிய சவாலாக இருந்தது. தீப்பெட்டி தயார் செய்ய ஆரம்பித்த அடுத்த ஆண்டே 'விம்கோ’ நிறுவனத்தின் தீப்பெட்டிகளைவிட தரமான தீப்பெட்டிகளை தயார் செய்து, அந்நிறுவனத்தின் தலைவரே பாராட்டும்படி செய்தார்.

அடுத்து, பட்டாசு தயாரிப்பி லும் இறங்கி, வெற்றி கண்டார்கள் அய்ய நாடார், சண்முகவேல் நாடார் சகோதரர்கள். அந்த நேரத்தில் சகோதரர்கள் இருவரும் பாகப்பிரிவினை செய்துகொண்டனர். பட்டாசு தயாரிக்கும் நேஷனல் நிறுவனத்தை அய்ய நாடார் ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டார். இந்நிறுவனம் தயார் செய்யும் சிங்கம் மார்க் பட்டாசு இந்தியா முழுக்க பிரபலம்.  

அந்த சமயத்தில் பட்டாசு தொழில் என்றாலே பலரும் பயந்து ஒதுங்கினர். திடீரென ஏற்படும் தீ விபத்துகளே இதற்கு காரணம். என்றாலும் இந்த சவாலை கண்டு அஞ்சாமல், வெற்றிகரமாக சமாளிக்கும்  வழிகளைக் கண்டுபிடித்தார்.  பட்டாசுகள் எளிதில் தீப்பிடித்து விபத்து நேராமல் தடுக்க, 'கரிமருந்துக் கலவை’யை  உருவாக்கினார். இதனோடு தரமும் சேரவே, சிங்கம் மார்க் பட்டாசுகள் மக்கள் மனதில் இடம் பிடித்தது.

தீபாவளியின்போது மக்கள் வாங்கும் பட்டாசில் ஏதாவது ஒரு பாக்கெட் தரமில்லாமல் இருந்தால், அதை வாங்கிக் கொண்டு, தரமான வேறு ஒரு பட்டாசு பாக்கெட்டைத் தந்தார். தரமில்லாத பட்டாசு பாக்கெட் எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து, அதில் தவறேதும் இருந்தால், உடனே  திருத்திக் கொண்டார். வண்ணமயமான புதிய பட்டாசுகளை உற்பத்தி செய்ய அந்த காலத்திலேயே பதினைந்து லட்ச ரூபாய் செலவில் ஆய்வகம் ஒன்றை நடத்தினார் அய்ய நாடார்.

பிஸினஸ் சமூகம் - நாடார்கள்!

ஆனாலும், சீனாவில் இருந்து வந்த பட்டாசுகள் அய்ய நாடாருக்கு பெரும் போட்டி தருவதாகவே இருந்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து பட்டாசுகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது குறைந்தது. இதனால் சிவகாசியில் தயாரான பட்டாசுகளுக்கு இந்தியா முழுவதும் மவுசு ஏற்பட்டது. தவிர, கிறிஸ்துமஸ், ஓணம், தசரா போன்ற பண்டிகைகளுக்கும், மணவிழாக்களுக்கும் பட்டாசு வெடிக்கும் வழக்கம் வரவே, அய்ய நாடாரின் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சி கண்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசியலிலும் சமூகத்தின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் அய்ய நாடார். 1955-63 வரையிலான எட்டு ஆண்டுகள் சிவகாசி நகராட்சியின் தலைவராக இருந்தார். சிவகாசி நகரம் எப்போதும் தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கும் நகரம். இந்நகரத்தின் தாகத்தைப் போக்க, வைப்பார்-வேம்பக்கோட்டை குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இவர் கல்வியிலும் கவனம் செலுத்தியதன் காரணமாக, 1963-ல் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை, அறிவியல் கல்லூரியை சிவகாசியில் திறந்தார். அய்ய நாடாருக்கு நான்கு மகன்கள், நான்கு மகள்கள். 1985-ல் அய்ய நாடார்

இறப்பதற்கு முன்பே பட்டாசு உற்பத்தித் தொழிலில் இறங்கினார்கள் அவரது மகன்கள். இன்றைக்கு அய்ய நாடாரின் பேரப்பிள்ளைகள் தீப்பெட்டி உற்பத்தி, பட்டாசு தயாரிப்பு, அச்சுத் தொழில் என பல்வேறு பிஸினஸ்களை வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர்.

அய்ய நாடார் 1923-ல் சிவகாசியில் முதல் தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித் தார். இன்றைக்கு சிவகாசி பகுதியில் அந்த இண்டஸ்ட்ரி 649 தொழிற்சாலைகளாக உயரக்  காரணம் அவர் விதைத்த வித்துதான் என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள்.

(அறிவோம்)