மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

திருமதி எஃப்.எம்.

ஒரு குடும்பம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருக்கிறது எனில் அந்த குடும்பத்தின் தலைவி அதற்கு முக்கியமான காரணமாக இருந்திருப்பார். நாகப்பட்டினத்துக்கு அருகே இருக்கும் பொறையாரில் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஹேமாதேவி, அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தலைவி. பள்ளியைவிட்டு வீட்டுக்கு வந்தபிறகும் உழைத்த களைப்பு துளிகூட இல்லாமல், தனது நிதி நிர்வாகம் பற்றி பேச ஆரம்பித்தார் ஹேமா.

##~##
''எ
ங்களுக்கு கல்யாணம் முடிந்து இருபது வருடம் ஆகிறது. என் மனசுக்கு பிடித்த மாதிரி  என்னை புரிந்து கொள்ளும் கணவர் கிடைத்தது ஆண்டவர் எனக்கு அளித்த பரிசு. கல்யாணத்துக்கு முன்பு நான் பி.எஸ்.சி. இயற்பியல் மட்டும்தான் படிச்சு இருந்தேன். திருமணத்துக்கு பிறகு என் கணவர்தான் என்னை மேலும் படிக்க வைத்து, வேலையும் வாங்கித் தந்தார். திருமணமாகி ஆறு மாதம் வரை சேமிப்பு என்று இல்லாமல், வரும் பணத்தை எல்லாம் தண்ணீர் போல செலவு செய்தோம்.

என் உறவினர் ஒருவர் ஒரு முறை, திருமணம் ஆகி இதுவரை என்ன சேமிச்சு இருக்கீங்கன்னு கேட்டார். அப்பதான் எதிர்காலத்துக்குன்னு ஒண்ணும் சேமிக்கலைன்னு தெரிஞ்சது. என் திருமணத்துக்குப் பிறகு என் கணவரின் கிராமத்தில் நாங்கள் இருந்ததால், தபால் நிலைய சேமிப்புதான் எங்களுக்கு உடனடியாக கை தந்தது. நான் தபால் நிலையத்தில் ஒரு ஆர்.டி. எடுத்து பணம் கட்டினேன். என் கணவர் காவல் துறையில் பணிபுரிபவராக இருந்தாலும், எங்கள் சேமிப்பு முழுவதும் போஸ்ட் ஆபீஸில்தான் தொடர்ந்தது.

என் இரண்டாவது பொண்ணு பிறந்தபிறகு அவளுடைய பெயருல ஒரு மியூச்சுவல் ஃபண்டில் 10,000 பணம் போட்டோம். அந்த பணம் அவளுக்கு 21 வயது ஆகும்போது இரண்டு லட்சத்திற்கு மேல் கிடைக்கும். அப்போது அவளது படிப்புச் செலவுக்கு அது உதவும். என் கணவர் சம்பளம் மற்றும் என் சம்பளம் இரண்டையும் சேர்த்து கொஞ்ச, கொஞ்சமா நகையாக வாங்கினோம்.

திருமதி எஃப்.எம்.

1992-ம் வருடம் 2,400 சதுர அடியில் ஒரு நிலத்தை 17,000 ரூபாய்க்கும், அதைத் தொடர்ந்து மூன்று வருடத்துக்குப் பிறகு 2,400 சதுர அடியில் ஒரு நிலத்தை தவணை முறையிலும் கட்டி 36,000 ரூபாய்க்கும் வாங்கினோம். அந்த இடத்தை இப்ப லட்சக்கணக்குல பணம் கொடுத்து வாங்க நிறைய பேர் தயாரா இருக்காங்க.

என்னதான் நானும், என் கணவரும் அரசுப் பணியாள ராக இருந்தாலும், போன வருடம் வரை வாடகை வீட்டில்தான் இருந்தோம். பசங்களோட படிப்பு, நான் பணிபுரியும் பள்ளி என எல்லாத்தையும் கவனத்தில் கொண்டு 2011-ல்தான் பள்ளிக்கு அருகிலேயே வசதியாக ஒரு இடம் வீடு கட்டுவதற்காக வாங்கினோம். நாங்க வாங்கின மனை ரொம்ப மெயின் ரோடாக இருந்தாலும் பள்ளமான இடம் என்பதால் வீடு கட்டுவதற்கு அதிக செலவு ஆனது.

இப்போது பிள்ளைகளும் வளர்ந்துட்டாங்க. பெரிய பொண்ணு தேவகாயத்ரி; பி.எஸ்.சி கணிதம் மூன்றாம் ஆண்டு படிக்கிறா; இரண்டா வது பொண்ணு, ஓவியா 11-ம் வகுப்பும், மகன் ஏழாம் வகுப்பும் படிக்கிறான். எங்களுக்கு வர்ற வருமானத்துல சேமிப்பு, செலவு போக மத்தது அவங்க படிப்புக்கு சரியா இருக்கு.

திருமதி எஃப்.எம்.

இரண்டு பொண்ணுங்க இருக்கிறதால, ஆரம்பத்துலயே நகையில் முதலீடு செஞ்சோம். என் பெரிய பொண்ணுக்கு பத்து வயது இருக்குறப்ப, ஐந்து வருடத்திற்கு எடுத்த ஆர்.டி பத்தாயிரம் ரூபாய் முதிர்வுத் தொகையா கிடைச்சுது. அப்ப ஒரு பவுன் மூன்றாயிரம் ரூபாய் தான். ஆர்.டி. பணத்தில் நகையை வாங்கி, அதே நகையை அடகு வைத்து மீண்டும் அந்த பணத்துல ஒரு ஆர்.டி. போட் டோம். நகைக்கு நகையாகவும் ஆச்சு, மேலும் ஒரு சேமிப்பும் தொடர்ந்தது. இப்ப தங்கம் விற்கிற விலைக்கு, அன்னைக்கு நான் வாங்கின மூன்று பவுன் உதவியா இருக்குது.

எங்களோட வருமானத்தில் நகை, நிலம் என ஓரளவு சேமிச்சிருக்கோம்.

எதிர்காலத்துல எங்களுக்கு ஒரு தனி வீடு வேண்டும் என்றும் 21 லட்சம் செலவில் ஒரு மாடி வீடு கட்டிருக்கோம். இருவரும் சேர்ந்து லோன் மற்றும் சேமித்த பணம் போன்றவற்றை போட்டு கட்டினோம். என் பெரிய ஆசை அந்த வீட்டுல என் மகள்கள் - மகன் திருமணத்துக்குப் பிறகு ஒரு 'அமைதி இல்லம்’ என்ற பெயரில் ஒரு முதியோர் இல்லம் வைத்து நடத்தணுங்கிறதுதான். அதுக்கான பணத்தையும் இப்பவே சேமிக்க ஆரம்பிச் சுட்டோம்.

மகள், மகன் என அவங்க ளோட எதிர்காலத் தேவை களுக்காக இப்போதே நாங்கள் சேமிக்கிறோம். அதேபோல் என் பிள்ளைகளும் இப்பவே பணத்தின் மதிப்பை அறிந்து, தேவையற்ற செலவுகளை விரும்ப மாட்டாங்க. ஒருமுறை என் பெரிய பொண்ணு சேர்த்த உண்டியல் காசு 4,000 ரூபாயில் குடும்பத்தோடு திருப்பதி சென்று வந்தோம்.

இப்பவும், போஸ்ட் ஆபீஸ், வங்கி சேமிப்பு என அனைத்து பணத்தையும் அவள்தான் பொறுப்பாக மாதந்தோறும் எடுத்து சென்று கட்டி வர்றா. இதனால் சேமிப்பின் அருமையும் அவளுக்கு தெரிகிறது.

நான் பணிபுரியும் பள்ளி யிலும் மாணவ - மாணவியரை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்த்து அவர்களுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயைகூட பள்ளி யிலே சேமிக்க வைக்கிறேன். இப்ப இருக்குற விலைவாசிக்கு, எவ்வளவு சேமிச்சாலும் பத்தாது போல. முடிஞ்ச அளவுக்கு தேவையற்ற செலவு களை குறைச்சு, இன்னும் சிக்கனமாக இருக்கணும்'' என்று புன்னகையுடன் முடித்தார் ஹேமாதேவி.

- மா.நந்தினி

திருமதி எஃப்.எம்.


நேரம் மூன்று வகை!

பிஸினஸ் செய்பவர்களுக்கு முக்கிய பிரச்னை நேரப் பற்றாக்குறை. தினமும் 24 மணி நேரமும் போதாத நிலை. இதற்கு என்ன செய்யலாம்? அமெரிக்காவின் ஹியூமன் பிஸினஸ் ஒர்க்ஸ் (Human Business Works) கம்பெனி தலைவரும், மேனேஜ்மென்ட் ஆலோசகருமான கிறிஸ் புரோகன் (Chris Brogan) காட்டும் வழி இதுதான்:

''எத்தனை மணி நேரம் குடும்பத்துக்கு, எத்தனை மணிநேரம் ஆபீஸ் வேலைக்கு என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஆபீஸ் வேலைக்குச் செலவிடும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு புதிய வாடிக்கையாளர்கள் தேட; இன்னொரு மூன்றில் ஒரு பங்கு தற்போதைய கஸ்டமர்களுக்காக; மீதமிருக்கும் மூன்றாவது பாகம், ஊழியர் பணி ஒருங்கிணைப்பு போன்ற கடமைகளுக்காக என பிரித்துக் கொள்ளுங்கள்.''

முயற்சித்துப் பாருங்கள், ஒர்க்அவுட் ஆகும்.

- அத்வைத்

திருமதி எஃப்.எம்.