மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

''இன்று மாலை ஏழு மணிக்கு ஜிம்கானா கிளப்புக்கு வரமுடியுமா?'' என்று செல்போனில் அழைப்பு விடுத்திருந்தார் ஷேர்லக். நாம் சரியாக ஏழு மணிக்கு ஆஜரானோம். அந்த நேரத்தில் நீச்சல் குளத்தில் சிலர் குளித்துக் கொண்டிருக்க, ஒரு ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து சினாக்ஸ் அயிட்டங்களை கொரித்துக் கொண்டிருந்தார். நாம் அவரை பார்த்தவுடன் கேட்டது: ''சென்செக்ஸ் 439 புள்ளிகள் ஏறிவிட்டது. அடுத்த வாரமும் ஏறுமா?''

##~##
''இ
த்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு சாதகமான முடிவு வந்தது, ஜெர்மனி கொஞ்சம் இறங்கி வந்தது போன்ற காரணங்கள் இருந்தாலும், மார்கன் ஸ்டேன்லி இந்தியாவைப் பற்றி கொடுத்திருந்த ஒரு ரிப்போர்ட்டும் வெள்ளிக்கிழமை சந்தை உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்த அறிக்கைபடி, அடுத்த ஆறு மாதத்துக்குள் 20 முதல் 40 சதவிகிதம் வரை இந்திய சந்தைகள் வருமானம் கொடுக்கும் என்று சொல்லி இருக்கிறது. ஓ.என்.ஜி.சி. இந்தியன் ஆயில், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் ஏர்டெல் போன்ற பங்குகள் நல்ல லாபம் கொடுக்கும் என்றும், எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.யூ.எல். போன்ற பங்குகள் கணிசமாக சரியும் என்றும் அந்த ரிப்போர்ட் சொல்லி இருக்கிறது. இப்போது தொடங்கி இருக்கும் இந்த ஏற்றம் நீண்ட காலத்துக்கு தொடரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், ஒரு சின்ன ஏற்றம் உண்டு. ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் அதை தவறவிட வேண்டாம்'' என்றவர், டேபிள் மீது தட்டி லிருந்த சினாக்ஸை கொரிக்க ஆரம்பித்தார்.

''கடந்த வாரத்தில் சிமென்ட் நிறுவனங்களின் கூட்டுச்சதிக்கு காம்ப்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அபராதம் விதித்த மாதிரி, இன்னொரு துறை மீதும் அபராதம் விதிக்கலாமா என விசாரித்து வருகிறதாம். டயர் மற்றும் பாலியஸ்டர் உற்பத்தியில் முன்னணியிலுள்ள நிறுவனங்களும் இதுபோன்ற சதியில் ஈடுபட்டிருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து சி.சிஐ. அமைப்பு சி.பி.ஐ. ரேஞ்சுக்கு புலன் விசாரணை நடத்தி இருக் கிறதாம். இந்நிறுவனங்களுக்கு விரைவில் அபராதம் விதிக்கப்படலாம் என்கிற பேச்சு பலமாக அடி படுகிறது. இத்துறை பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது'' என்று கண் சிமிட்டினார்.

''இந்திய ரியல் எஸ்டேட் துறை மந்தநிலையில் காணப் படுகிறது. ஆனால், கட்டுமானத் துறை நிறுவனமான என்.சி.சி. பங்குகளில் பலரும் முதலீட்டை அதிகரித்து வருகிறார்கள். அண்மையில், இந்நிறுவனத்தின் 7.5 லட்சம் பங்குகளை திரு மற்றும் திருமதி ஜுன்ஜுன்வாலாக்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் ஜுன்ஜுன்வாலா வசம் மட்டும் சுமார் 1.97 கோடி என்.சி.சி. பங்குகள் இருக்கிறதாம். அண்மைக்காலமாக ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் நிறுவனமும் இந்நிறுவனத்தில் தன் முதலீட்டை அதிகரித்து வருகிறது. 52 வார உச்சபட்ச விலையில் பாதி அளவுக்கு தற்போது வர்த்தகமாகி கொண்டிருக்கும் இந்தப் பங்கு மீது இன்னும் பலர் கண் வைத்திருப்பதாகத் தகவல்..! ரிஸ்க் எடுக்கும் வாசகர்கள் இந்த பங்கை கொஞ்சம் ஃபாலோ பண்ணலாம்!'' என்றவர், பைபேக் அறிவிப்பு செய்திருக்கும் ஆல்கார்கோ நிறுவனம் பற்றிய செய்தியைச் சொன்னார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''75 கோடி ரூபாய்க்கு தன் பங்குகளை திரும்ப வாங்கப் போகிறது ஆல்கார்கோ நிறுவனம். இதன் புரமோட்டர் தற்போது 69.81 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். 75 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்குவதன் மூலம் புரமோட்டரிடம் இருக்கும் பங்கு அளவு 72.74 சதவிகிதமாக உயரும். ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை இந்த பைபேக் நடக்க இருக்கிறது. கடந்த வெள்ளி மாலை இந்த பங்கின் விலை 132 ரூபாய். இதை அதிகபட்சமாக 142.50-க்கு வாங்கப் போவதாக இந்நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த பங்கு விலை உயர ஆரம்பித்திருக்கிறது'' என்றார்.

''வெளிநாடுகளில் எக்கச்சக்கமாக கடன் வாங்கி சில நிறுவனங்கள் முழிக்கிறதே!'' என்றோம்.

''ஆமாம், இப்படி மாட்டித் தவிக்கும் முக்கியமான இந்திய நிறுவனங்களை காப்பாற்ற அரசாங்கமும், ஆர்.பி.ஐ.யும் சேர்ந்து ஒரு நிதியை உருவாக்கினால் என்ன என்று யோசித்து வருகிறது. ஜே.எஸ்.டபிள்யூ, ஸ்ட்ரைட்ஸ் ஆர்கோலேப், ரோல்டா இந்தியா போன்ற கம்பெனிகள் சமீபத்தில்தான் தங்கள் வெளிநாட்டுக் கடனை திருப்பிக் கட்டியது. ஆனால், டாடா மோட்டார்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டாடா ஸ்டீல், சுஸ்லான் எனர்ஜி, ஜியோதேசிக், ப்ளிதிகோ பார்மா போன்ற கம்பெனிகள் வெளிநாட்டுக் கடனை எப்படி திரும்பக் கட்டுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இதில் டாடா மோட்டாருக்கு மட்டும் 624 கோடியும் ஜெய் பிரகாஷ§க்கு 524 கோடியும் கடன் இருக்கிறது'' என்றவர், மூன்று முக்கிய செய்திகளையும் சொன்னார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''கடந்த வெள்ளிக்கிழமை அன்று சந்தை அத்தனை தூரம் உயர்ந்தும், டாடா மோட்டார்ஸ் பங்கு விலை மட்டும் பெரிய அளவில் உயரவில்லை. காரணம், மூன்று நாட்களுக்கு டாடா மோட்டார்ஸின் ஜாம்ஷெட்பூர் பிளான்டில் உற்பத்தி நிறுத்தப் பட்டது. விற்பனை குறைவாக இருப்பதையே இது காட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் விற்பனை குறித்த தகவல்கள் வெளிவர இருக்கின்றன. பெரும்பாலான அனலிஸ்டுகளின் கருத்துபடி, இது நெகட்டிவ்வாகவே வர வாய்ப்பு இருக்கிறது.

அதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தின்போது இந்த பங்கின் விலை பற்றி கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. டாடா மோட்டார்ஸ் விலை குறைந்தால், மற்ற ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் பங்கு விலையும் குறைய வாய்ப்புண்டு ஜாக்கிரதை.

டெல்லி அரசாங்கம் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. இதன் காரணமாக பி.டி.சி., ஆர்.இ.சி. பி.எஃப்.சி. மற்றும் டாடா பவர் உள்ளிட்ட பங்குகள் உயர வாய்ப்பு இருக்கிறது. இதிலும் குறிப்பாக, பி.டி.சி. பங்கில் டெக்னிக்கலாக இன்வெர்டட் ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் உருவாகி இருப்பதால் இந்த பங்கு 95 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது.

வங்கிச்சாரா நிதி நிறுவனங் களான முத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனங்கள் தங்க நகைக் கடனை கடந்த காலத்தில் அள்ளித் தந்தது. தங்கத்தின் விலை வேகமாக குறைந்துவரும் நிலையில், அதிக தொகையை கடனாக வாங்கியவர்கள் தங்கத்தை திருப்பாமலே போகும் அபாயம் இருக்கிறது.

இது உண்மையில் நடந்தால், இந்த நிறுவனங்கள் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, இந்நிறுவனப் பங்கு முதலீடுகளில் உஷாராக இருப்பது நல்லது'' என்றவர், ''இந்த வாரம் நோ டிப்ஸ்'' என்றார். அடுத்த வாரமாவது தருவாரா என்று பார்ப்போம்.