மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

பிஸினஸ் சமூகம் - நாடார்கள்!

வி.ஜி.பன்னீர்தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
வி.ஜி.பன்னீர்தாஸ்

சொந்தக் காலில் நின்று முன்னேறத் துடிக்கும் அத்தனை பேருக்கும் உற்சாக டானிக் தரும் வி.ஜி.பி.யின் வெற்றி ரகசியம்..!

வி.ஜி.பி!

நூறு ரூபாய்க்கும் குறைவான பணத்தில் பிஸினஸை ஆரம்பித்து, இன்றைக்கு நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பாதித்தவர்கள் நாடார் சமூகத்தில் அதிகம். அது மாதிரியானவர்களில் ஒருவர்தான் வி.ஜி.பி. குழுமத்தை ஆரம்பித்த வி.ஜி.பன்னீர்தாஸ்.

நெல்லை மாவட்டம் வள்ளியூருக்குப் பக்கத்தில் உள்ள அழகப்பா புரத்தில் 1932-ல் பிறந்தார் வி.ஜி.பன்னீர்தாஸ். ஏழ்மையான குடும்பம் அவருடையது. பிழைக்க வழிதேடி தனது பன்னிரண்டாவது வயதில் வெறும் 25 ரூபாயுடன் சென்னைக்கு வந்தார். முதலில் சைதாப்பேட்டையில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த வேலையில் நாலு காசு சம்பாதித்தவுடனே, ஊரில் இருந்த தன் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்தார்.

தினம் தினம் காலணா, அரையணா என அவர் சேர்த்தப் பணத்தில் சைதாப்பேட்டையிலேயே ஒரு டீக்கடையும், பக்கத்திலேயே வெற்றிலை பாக்குக் கடையும் திறந்தார். வி.ஜி.பன்னீர்தாஸ்,  டீக்கடையை பார்த்துக் கொள்ள, அவர் சகோதரர் வி.ஜி.சந்தோஷம் வெற்றிலை பாக்குக் கடையைக் கவனித்தார்.

வி.ஜி.பன்னீர்தாஸ்.
வி.ஜி.பன்னீர்தாஸ்.

வெற்றிலை பாக்குக் கடையில் காலண்டர்கள் விற்கும் வழக்கம் அப்போதுதான் ஆரம்பமானது. இந்த வாய்ப்பை சட்டென பிடித்துக் கொண்ட வி.ஜி.பன்னீர்தாஸ் (இனி சுருக்கமாக வி.ஜிபி.) சிவகாசியிலிருந்து மொத்தமாக காலண்டர்களை வாங்கிக் கொண்டுவந்து, சிறு வியாபாரிகளுக்கும் மற்ற கடைக்காரர்களுக்கும் விற்க ஆரம்பித்தார்.

அந்த சமயத்தில் 'தாமரை குறுக்கெழுத்துப் போட்டி’ கூப்பன்கள் தமிழகம் முழுக்க சுடச்சுட விற்பனையாகத் தொடங்கின. இந்த குறுக்கெழுத்துப் போட்டிக்கான ஒரு கூப்பன் 1 ரூபாய். ஆனால், இந்த கூப்பனை விற்றால்       25 பைசா கமிஷன். அதாவது, 25% லாபம். விடுவாரா வி.ஜி.பி. அண்ணாச்சி? தன் தம்பியை துணைக்கு அழைத்துக் கொண்டு, சைக்கிளிலேயே சென்னை முழுக்க சுற்றிவந்து கூப்பன்களை விற்றார். ஆனால், இது சூதாட்டத்திற்குப் பயன்படுவதாகச் சொல்லி, தமிழக அரசாங்கம் இந்த கூப்பனை ஒழித்தது.

அருமையான பிஸினஸ் வாய்ப்பு போச்சே என்று தவித்த வி.ஜி.பி.க்கு அடுத்த பிஸினஸ் வாய்ப்பு தேடி வந்தது. மார்வாடி சேட்டு ஒருவர், 'அனசோனியா’ என்னும் கடிகாரத்தை விற்பனை செய்யச் சொன்னார். இந்த கடிகாரத்தில் ரேடியம் இருந்ததால், இரவில் ஒளி வீசும். இதனைப் பார்க்கவே பலரும் இந்த கடிகாரத்தை வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு கடிகாரத்தின் விலை 16 ரூபாய். 1955-ல் இது பெரிய தொகை. யார் அவ்வளவு பணம் தந்து கடிகாரத்தை வாங்கப் போகிறார்கள் என்று அண்ணனும், தம்பியும் பேசிக் கொண்டிருக்க, திடீரென ஒரு பளிச் ஐடியா.

16 ரூபாய் ஒரே நேரத்தில் தரவேண்டாம். வாரம் 1 ரூபாய், 2 ரூபாய் தந்தால் போதும்; சில மாதங்களிலேயே பணம் வந்துவிடுமே என்று நினைத்தார்கள். அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களை தவணை முறையில் விற்கும் வழக்கம் தமிழகத்தில் தோன்றியது இப்படித்தான். எல்லா பொருட்களையும் தவணை முறையில் விநியோகித்ததுதான் வி.ஜி.பி.யின் வெற்றி ரகசியம்!

கடிகாரங்களின் விற்பனையை அதிகப்படுத்த கூடவே இன்னொரு புதுமையையும் வி.ஜி.பி. செய்தார். அது சீட்டு கட்டும் திட்டம். மாதத்துக்கு 10 ரூபாய் வீதம் 12 மாதங்கள் சீட்டு கட்ட வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பரிசுக் குலுக்கல் போட்டி நடக்கும். இந்த குலுக்கலில் தேர்வு செய்யப்படுபவர்     120 ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை வாங்கலாம். தவிர, மேற்கொண்டு எந்த பணத்தையும் செலுத்தத் தேவையில்லை.

இந்த அறிவிப்பு சாதாரண மக்களைச் சுண்டி இழுத்ததால் விற்பனை சூடு பிடித்தது. கடிகாரம், சுவர்க் கடிகாரம், கைக் கடிகாரம் பொருட்களின் எண்ணிக்கைக் கூடியது. ஒவ்வொரு பொருளிலும் கணிசமான லாபம் கிடைத்தது.

இந்நிலையில் தமிழக அரசாங்கம் குலுக்கல், பரிசுப் போட்டி என அனைத்துக்கும் தடை விதித்தது. இந்த திடீர் திருப்பத்தால் கொஞ்சம்கூட பாதிப்படையாத வி.ஜி.பி. மக்களுக்குத் தேவையான சைக்கிள், மின் விசிறி, ரேடியோ போன்ற பொருட்களையும் தனது சைதாப்பேட்டை கடையில் குவித்தார். 'இன்று ரொக்கம், நாளை கடன்’ என்பது பொதுவான வழக்கு. ஆனால், 'இன்றே கடன்... இன்றே பொருள்...’ என்று வித்தியாசமாக விளம்பரம் செய்தார் வி.ஜி.பி.

தன் கடையில் பல பொருட்கள் இருந்தும் ரேடியோ இல்லையே என்று நினைத்த வி.ஜி.பி., அப்போது மவுண்ட் ரோட்டில் இருந்த இப்ராஹீம் அண்டு கோ நிறுவனத்தை அணுகி, ரேடியோக்களை விற்பனை செய்ய அனுமதி கேட்கப் போனார். அங்கிருந்த காவலாளி அவரை உள்ளே விடவில்லை. மர்ஃபி ரேடியோவை விற்க அந்நிறுவனத்திடம் அனுமதி கேட்டார், கிடைக்கவில்லை. அதுபற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், நான்கு ரேடியோக்களை வாங்கி தன் கடையில் வைத்தார். ரேடியோ வாங்க வருகிறவர்கள் எந்த மாடல் வேண்டும் என்றவுடன்,  மறுநாள் அந்த ரேடியோவை வாங்கித் தந்தார். இதனால் ரேடியோ விற்பனையும் சூடு பிடித்தது. இதைப் பார்த்த இப்ராஹீம் அண்டு கோ நிறுவனத்தின் உரிமையாளர் சுலைமான் சேட், வி.ஜி.பி.யை அழைத்து மர்ஃபி. ரேடியோ விற்பனை செய்யும் சப்-டீலர் உரிமையைத் தந்தார்.  

1960-ல் முன்பின் தெரியாத ஒருவர் சைதாப்பேட்டையில் இருக்கும் 30 கிரவுண்டு நிலத்தை விற்றுத் தரச் சொல்லி கேட்டார். ஒரு கிரவுண்ட் விலை 900 ரூபாய். தனக்குத் தெரிந்த பல ஆயிரம் கஸ்டமர்களிடம் நில விற்பனை பற்றி எடுத்துச் சொல்ல, சில வாரங்களில் எல்லா இடங்களும் விற்றன. அவருக்கு ஐந்து பிளாட்டுகள் லாபமாக கிடைத்தது.

வி.ஜி.பி.
வி.ஜி.பி.

இதன்பிறகு வி.ஜி.பி.யின் இளைய சகோதரர் வி.ஜி.செல்வராஜும் பிஸினஸில் சேர்ந்து கொள்ள, விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டது. மாதாமாதம் விற்பனை அளவை வி.ஜி.பி. உயர்த்திக் கொண்டே போனார். ஒரு வேனில் எல்லா பொருட்களையும் வைத்து, அதை எல்லா பகுதி மக்களுக்கும் கொண்டு சென்று காட்டுவதன் மூலம் வியாபாரத்தை அதிகரித்தார்.

இடைப்பட்ட காலத்தில் மவுண்ட் ரோட்டில் உள்ள தனது கடையை வி.ஜி.பி.க்கு தந்தார் சுலைமான் சேட்.  

1972-ல் அடுத்த ரியல் எஸ்டேட் வாய்ப்பும் வி.ஜி.பி.யைத் தேடி வந்தது.  வீரபத்திரராவ் என்பவர், சென்னை வேளச்சேரியில் 30 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தார். இந்த இடத்தை வாங்கிக் கொள்ளும்படி வி.ஜி.பி.யை வற்புறுத்த, ஒரு ஏக்கர் 1,000 ரூபாய் என்கிற கணக்கில் நிலத்தை வாங்கி, பிளாட் போட்டார். இந்த பிளாட்டையும் தவணை முறையில் விற்கத் தொடங்கவே, சீக்கிரத்திலேயே விற்றது.  

இதனைத் தொடர்ந்து வேளச்சேரி பகுதியில் பல இடங்களில் பிளாட் போட்டு விற்றார். இந்த செய்தி தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவ, கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் நிலம் வாங்கி, பிளாட் போட்டு, தவணை முறையில் விற்றார். இந்த சமயத்தில் மயிலாப்பூரில் இருந்த ஒரு பெண், தனக்கு கிழக்கு கடற்கரை சாலையில் 109  ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்தை வி.ஜி.பி. நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த, அந்த இடத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமலே வாங்கினார். ஆனால், பிற்பாடு வி.ஜி.பி. யுனிவர்சல் கிங்டம் என்னும் தீம் பார்க் தொடங்க அந்த இடம் பேருதவியாக இருந்தது.

சில்லறை வர்த்தகத்தில் தொடங்கி, இன்றைக்கு ரியல் எஸ்டேட்டில் மிகப் பெரிய நிறுவனமாக மாறக் காரணமாக இருந்த வி.ஜி.பன்னீர்தாஸின் வாழ்க்கை வரலாறு, சொந்தக் காலில் நின்று முன்னேறத் துடிக்கும் அத்தனை பேருக்கும் உற்சாக டானிக்.

(அறிவோம்)