Election bannerElection banner
Published:Updated:

சின்ன சேமிப்பு... பெரிய லாபம்!

ஏலச் சீட்டில் ஜெயிக்கும் ரகசியங்கள்!

சின்ன சேமிப்பு... பெரிய லாபம்!
##~##
சீ
ட்டு கட்டி பணம் சேர்ப்பது நடுத்தர வீட்டுக் குடும்பத்தினரின் மாத பட்ஜெட்டில் தவறாமல் இடம் பெறும் விஷயமாக மாறிவிட்டது. மகளின் திருமணச் செலவு, மகனின் படிப்புச் செலவு, பிஸினஸ் விரிவாக்கம் என ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பலரும் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

வங்கியில் அல்லது தனிநபர்களிடம் கடன் வாங்கி, அநியாய வட்டி தருவதைவிட சீட்டு கட்டுவதன் மூலம் எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்பது பற்றி பார்க்கும் முன், சீட்டு கட்டுவதைப் பற்றி பொதுவான சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.

பல வகை சீட்டுகள்!

சின்ன சேமிப்பு... பெரிய லாபம்!

நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு என பல வகையான சீட்டுகள் உண்டு. நகைச் சீட்டில் நாம் கட்டும் பணத்துடன் கூடுதலாக ஒருமாத தவணை பணத்தை நகைக் கடைகள் கொடுக்கும். இப்படி சேர்க்கும் பணத்தை எந்த நகைக் கடையும் பணமாகத் தராது. நகையாகதான் வாங்கிக்கொள்ள முடியும்.

தீபாவளி, பொங்கல் சீட்டு என்பவை ஏதாவது ஒரு பண்டிகையின்போது தொடங்கப்படுகிறவை. இந்த சீட்டில் சேருகிறவர்களுக்கு தீபாவளியின்போது பட்டாசு, பண்ட பாத்திரங்கள், இனிப்பு வகைகள் பரிசாக அளிக்கப்படுகின்றன.

குலுக்கல் சீட்டு என்பது ஒரு குழுவில் இடம் பெற்றிருக்கும் பலரில் ஒருவரை குலுக்கல் மூலம் தேர்வு செய்து, அவருக்குப் பணம் தருவது. ஒருமுறை குலுக்கலில் தேர்வாகிறவரின் பெயர் அடுத்த குலுக்கலில் இடம் பெறாது. இந்த முறையில் ஆரம்பத்தில் நமக்கு பணம் கிடைத்தால் மட்டுமே லாபம். ஆனால், குலுக்கலில் நம் பெயர் முதலில் வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம், இது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.  

ஏலச் சீட்டு!

மேற்சொன்ன சீட்டு முறைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது ஏலச் சீட்டு. பத்து, பதினைந்து, இருபது என பலரும் ஒரு குழுவில் சேருவார்கள். பத்தாயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை சீட்டின் மதிப்பு இருக்கும். பத்து பேர் கொண்ட பத்தாயிரம் ரூபாய் ஏலச் சீட்டு எனில், முதல் மாதம் 500 ரூபாயிலிருந்து சீட்டை ஏலம்விட ஆரம்பிப்பார்கள். இந்த ஏலத்தில் பங்குகொள்கிறவர்கள் தங்களின் தேவையைப் பொறுத்து சீட்டை எடுப்பார்கள். உதாரணமாக, 500, 1,000, 2,000 என கேட்டுக் கொண்டே செல்வார்கள். இருப்பதில் அதிகமாகக் கேட்கிறவர் யாரோ அவருக்கே அந்த மாதத்திற்கான சீட்டுப் பணம் தரப்படும்.

ஒருவர் 10,000 ரூபாய் சீட்டை 6,000 ரூபாய்க்கு எடுக்கிறார் எனில் மீதமுள்ள 4,000 ரூபாய் கசடு என அழைக்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்கு 30 ரூபாய் கமிஷன் என பத்தாயிரத்துக்கு ரூ.300 சீட்டு நடத்துபவர் எடுத்துக்கொள்வார். 4,000 ரூபாயில் 300 ரூபாய் போக 3,700 ரூபாயை பத்து பேருக்கும் பிரித்தால் வரும் 370 ரூபாயை, அந்த மாதச் சீட்டு தொகையான 1,000 ரூபாயிலிருந்து கழித்து, மீதி 630 ரூபாயைக் கட்ட வேண்டும். இதுதான் ஏலச் சீட்டின் அடிப்படை.

ஏலச் சீட்டில் ஆரம்பத்தில் குறைவான தொகைக் கட்டவேண்டும். நடுவில் கொஞ்சம் அதிகமாகவும், கடைசி மாதங்களில் கிட்டத்தட்ட முழு தொகையையும் கட்ட வேண்டியிருக்கும்.

சின்ன சேமிப்பு... பெரிய லாபம்!


வட்டியா? சீட்டா?  

மாதச் சம்பளக்காரர்கள், பிஸினஸ் செய்பவர்களுக்கு எப்போது பணம் தேவைப்படும் என்று சொல்ல முடியாது. திடீரென பணம் தேவைப்படும்போது வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்படி வாங்கும்போது எவ்வளவு சதவிகிதம் வட்டி என்று பார்க்க முடியாது. உதாரணமாக, ஒருவர் 50,000 ரூபாயை 48 சதவிகித வட்டிக்கு கடன் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் வட்டியாக 2,000 ரூபாய் கட்டவேண்டும். சுமார் 12 மாதம் இந்த வட்டியைக் கட்டினால்கூட 24,000 ரூபாயை நாம் இழக்க வேண்டியிருக்கும்.

வங்கிக் கடன் பெட்டரா?

இப்போது பல வங்கிகள் தனிநபர் கடன்களை வழங்குகின்றது. இந்த கடனுக்கு வங்கிகள் 16 முதல் 22% வரை வட்டி வசூலிக்கிறது. தனிநபர்கள் வசூலிக்கும் வட்டியைவிட இது மிகவும் குறைவு என்பதால் வங்கியில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 50 ஆயிரம் ரூபாயை 16 சதவிகித வட்டி விகிதத்தில் வங்கியில் கடன் வாங்கினால் மாதமொன்றுக்கு 800 ரூபாய் வட்டியாக கட்டினாலே போதும். ஓராண்டு காலத்திற்குக் கட்டினால்கூட அதிகபட்சம் 9,600 ரூபாய் கட்டினால் போதும். ஆனால், அசல் நிலுவையில் இருக்கும்.

சின்ன சேமிப்பு... பெரிய லாபம்!


ஏலச் சீட்டில் எப்படி?

இதையே ஏலச் சீட்டில் எப்படி என்று பார்ப்போம். உதாரணமாக 45,000 ரூபாய், பதினைந்து மாதங்கள், பதினைந்து நபர்கள் கொண்ட சீட்டில் கடைசி மாதத்தில் எடுத்தால் கிடைக்கும் தொகை 45,000 ரூபாய், அதாவது முழுத் தொகை. நாம் எடுத்துக்கொண்டிருக்கும் உதாரணத்தில் இதற்கு நீங்கள் கட்டவேண்டிய தொகை 35,800 ரூபாய்தான். அதாவது, கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு லாபமாக கிடைக்கும். ஏலச் சீட்டின் நடுவில் எடுத்தாலும் நீங்கள் திரும்பச் செலுத்தும் தொகை தனிநபர், வங்கி வட்டியோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். ஆனால், ஏலச் சீட்டின் ஆரம்பத்திலேயே பணத்தை எடுத்தால் மிகக் குறைந்த அளவு பணமே கிடைக்கும். இப்படி செய்வதால் நமக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்பதையும் மறக்கக்கூடாது.  

லோக்கல் நிறுவனங்கள்!

இப்படி பல நன்மைகள் தரும் ஏலச் சீட்டை பதிவு செய்யப்பட்ட சீட்டு நிறுவனங்களில் தொடங்குவது பாதுகாப்பானது என்றாலும் பெரிய நிறுவனங்களில் செக்யூரிட்டி, கேரண்டி போன்ற நிறைய கண்டிஷன்கள் இருக்கும் என்பதால் பலரும் அங்கு ஆரம்பிப்பதில்லை. தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தனிநபர்கள் நடத்தும் சீட்டுகளிலேயே சேர்ந்து சேமிக்கின்றனர்.  

எப்படி நம்புவது?

சின்ன சேமிப்பு... பெரிய லாபம்!

தனிப்பட்ட நபர்கள் நடத்தும் சீட்டில் சேரும்முன் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என சென்னை தண்டையார்பேட்டையில் சீட்டு நடத்தும் கலாவதியிடம் கேட்டோம்.

''சீட்டு நடத்தும் நபரை நம்பித்தான் நாம் பணத்தைக் கட்டுகிறோம். எனவே, அவரே உங்கள் பணத்திற்கு முழுப் பொறுப்பு. அவரைப் பற்றி அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் நன்கு விசாரித்துவிட்டு, திட்டத்தில் சேர்வது அவசியம். சீட்டு நடத்தும் நபர் உங்களுக்கு அதிகபட்சம் ஐந்து வருடங்களாவது தெரிந்தவராக இருக்கவேண்டும். உங்கள் பகுதியில் அல்லது வீட்டுக்கு அருகில் புதிதாக வரும் நபர்களிடம் சீட்டு போடாதீர்கள். சீட்டு நடத்தும் நபர்களுக்கு அசையாச் சொத்துக்கள் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர்கள் நடத்தும் சீட்டில் சேராமல் இருப்பது நல்லது. திடீரென வீட்டைக் காலிசெய்து போய்விட்டால் சிக்கிக்கொள்வோம்'' என்று எச்சரித்தார் அவர்.

''அலுவலகத்தில் சீட்டு நடத்துபவர் எனில், அவர் நிரந்தரப் பணியில் இருப்பவராக இருந்தால் நல்லது. வேலைக்குப் புதிதாக வந்த நபரிடம் சீட்டு போடுவதைத் தவிர்ப்பது நல்லது'' என்று சொல்கிறார் அனுபவஸ்தர் ஒருவர்.

அவசரத் தேவைக்கு வட்டிக்கு கடன் வாங்க நினைப்பவர்கள் சீட்டின் ஆரம்பத்தில் ஏலம் எடுத்தால் வட்டித் தொகை லாபமாகும். சேமிப்பு அடிப்படையில் சீட்டில் சேருபவர்கள் சீட்டின் இறுதி மாதங்களில் எடுக்கும்போது கசடு குறைவாகதான் போகும். இதனால் முழுத் தொகை கிடைக்கும். வட்டி கட்டுவதைவிட சீட்டு கட்டிவிடலாம் என நினைப்பது சரியான விஷயம்தான். ஏலச் சீட்டு தவறில்லை. ஆனால், எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் பணத்திற்குப் பாதுகாப்பு என்பதை மறக்க வேண்டாம்.

-பானுமதி அருணாசலம்,
படங்கள்: சிவபாலன், ஜெ.வேங்கடராஜ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு