பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி

தங்கம்!

##~##
தங்கத்தின் விலை சென்ற வார ஆரம்பத்தில் 1,622 டாலருக்கு வர்த்தகமாகத் தொடங்கி, வார இறுதியில் 1,614 டாலருக்கு வர்த்தகமானது. சீனாவின் பணவீக்க விகிதம் கடந்த முப்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்ததைத் தொடர்ந்து பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்க முன்வந்துள்ளது சீனா. தனது நிதிக் கொள்கையை பணவீக்கத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைக்கவும் சீனா யோசித்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என முதலீட்டாளர்கள் நினைத்ததால் தங்கம் மேல் நோக்கி சென்றது. இதன் விளைவாக டாலரின் மதிப்பும் 0.4% குறைந்தது.

டிசம்பர் 2008 முதல் ஜூன் 2011 வரை தங்கம் 70% விலை அதிகரித்துள்ளது. சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதைத் தொடர்ந்து 0.8% கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தது.

உலகளவில் தங்கத்தின் தேவை இரண்டாவது காலாண்டில் 15% குறைந்துள்ளதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில், இந்தியாவிலிருந்து 30%, சீனாவில் 9 சதவிகித தேவையும் குறைந்துள்ளது. இந்தியாவில் தங்கத்தின் தேவை குறையக் காரணம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததே. வரும் வாரத்தில் தங்கத்தின் விலை நடுநிலையாக வர்த்தகமாகும். கடந்த வெள்ளியன்று மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் பத்து கிராம் தங்கம் அக்டோபர் கான்ட்ராக்ட் 30,142 ரூபாய்க்கு வர்த்தகமானது.  

கமாடிட்டி


அடிப்படை உலோகம்!

அமெரிக்காவில் வீடு கட்டும் கட்டுமான சந்தை நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது காப்பருக்கு சாதகமாக அமைந்தது. ஆகஸ்ட் 2008-ம் வருடத்திற்குப் பிறகு 8,12,000 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக வர்த்தகத் துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக உலோகங்களுக்கு 40 சதவிகிதத் தேவை ஏற்படும் என காப்பர் டெவலப்மென்ட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு போன்ற காரணத்தால் காப்பரின் விலை இந்த காலாண்டில் 2.9% விலை குறைந்துள்ளது. அமெரிக்காவில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கியிருப்பது அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறை வலுவடையச் சான்றாக கூறப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பில்டர்களிடையே நம்பிக்கை வந்துள்ளதாகத் தனியார் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காரணங்களால் வரும் வாரத்திலும் அடிப்படை உலோகங்கள் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

கமாடிட்டி


கச்சா எண்ணெய்!

அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை வலுவடைந்து வருவதும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற செய்தியால் மத்திய கிழக்கு பகுதிகளிலிருந்து சப்ளை செய்யப்படும் கச்சா எண்ணெய் குறைந்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 95 டாலர் வரை சென்றது. இது கடந்த மூன்று மாதங்களில் இல்லாத விலை. மே 14-ம் தேதிக்குப் பிறகு ஒருநாள் அதிக விலையாக 95.67 டாலரை கடந்த வியாழக்கிழமையன்று நியூயார்க் சந்தையில் தொட்டது. எண்ணெய் ஸ்டாக் எதிர்பார்த்ததைவிட குறைந்ததைத் தொடர்ந்து நிமிக்ஸ் கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் விலை அதிகரித்தது. கடந்த வெள்ளியன்று மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் செப்டம்பர் கான்ட்ராக்ட் 5,342 ரூபாய்க்கு வர்த்தகமானது.    

வெள்ளி!

தங்கத்தின் விலை அதிகரிப்பு மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்து வர்த்தகமானது. சென்ற வெள்ளிக்கிழமை அன்று தின வர்த்தகம்

28 டாலருக்கு ஒரு அவுன்ஸ் வர்த்தகமானது. ஆனால், டாலரின் மதிப்பு அன்றைய தினம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மேலும் விலை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. கடந்த வெள்ளியன்று மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ வெள்ளி செப்டம்பர் கான்ட்ராக்ட் 0.1% அதிகரித்து 53,880 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கமாடிட்டி


இயற்கை எரிவாயு!  

இயற்கை எரிவாயுவின் இன்வென்ட்டரி அதிகரித்ததைத் தொடர்ந்து விலை குறைந்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இயற்கை எரிவாயு இருப்பு 20 பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்து, 3.261 டிரில்லியனாக உள்ளது என அமெரிக்காவின் எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு ஆகஸ்ட் கான்ட்ராக்ட் 152.50 ரூபாய்க்கு வர்த்தகமானது.

-பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு