பிரீமியம் ஸ்டோரி
அக்ரி கமாடிட்டி

இந்த வாரம் ஏலக்காய் பற்றி விளக்கமாகக் கூறுகிறார் ஐ.டி.ஐ. கேப்பிட்டல் ஹோல்டிங் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் நேஹா.

அக்ரி கமாடிட்டி

''ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18 சதவிகிதமும், இந்த வாரத்தில் 6 சதவிகிதமும் விலை இறங்கி இருக்கிறது ஏலக்காய்.  சந்தைகளில் வரத்து அதிகரித்ததும், தேவை குறைந்த காரணத்தாலும் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் 4 சதவிகிதம் விலை குறைந்தது. வர்த்தகர்கள் எதிர்பார்த்த விலை வந்தவுடன் விற்று லாபம் பார்த்ததாலும் இதன் விலை குறைந்தது. ஏலக்காய் விளையும் பகுதிகளில் பருவமழை குறைந்ததால் ஆகஸ்ட் மாதத்தில் வரவேண்டிய புதிய வரத்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய் விலை மேலும் குறையாமல் இருக்க ஏலம்விடும் முறையைத் தவிர்த்து வெளிச்சந்தையில் அரசு விற்கவேண்டுமென இடுக்கி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வரத்து குறைந்து வருவதால் வரும் வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ ஏலக்காய் செப்டம்பர் கான்ட்ராக்ட் 1,142 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி


மிளகு (PEPPER)

இந்தியாவில் 2011-2012-ம் ஆண்டில் மிளகு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் 2012-2013-ம் வருடம் இந்திய மிளகு இறக்குமதி 50% அதிகரித்து 26,000 டன்னாக இருக்குமென வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுவே 2010-2011-ம் ஆண்டில் இந்தியா 16,100 டன் மிளகு இறக்குமதி செய்தது. இந்த புள்ளிவிவரங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் மிளகு விளைச்சல் இந்தாண்டு குறைவாக இருக்குமென தெரிய வருகிறது. கடந்த வாரத்தில் கொச்சி சந்தைக்கு 16 டன் மிளகு தினவரத்தாக இருந்தது. உற்பத்திக் குறைவாக இருப்பதால், வரும் வாரங்களில் விலை அதிகரிக்குமென  எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் மிளகு செப்டம்பர் கான்ட்ராக்ட் 42,050 ரூபாய்க்கு வர்த்தகமானது.

ஜீரா (JEERA)

முக்கிய ஜீரக சந்தைகளில் வரத்து குறைந்ததால் சென்ற வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமானது. ரம்ஜான் பண்டிகைக்குப் பிறகு ஜீரகத்திற்கு வெளிநாட்டு சந்தைகளில் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியா, மலேசியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் ரம்ஜான் பண்டிகையையட்டி ஜீரகத்திற்கானத் தேவை குறைந்துள்ளது. மேலும், குஜராத் சௌராஷ்ட்ரா பகுதியிலும் மற்றும் ராஜஸ்தானிலும் உள்ளூர் பண்டிகை காரணமாக கடந்த பத்து நாட்களாக ஜீரக ஏல மண்டிகள் மூடப்பட்டு, வரும் திங்கட்கிழமையில் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. எனவே அடுத்த வாரங்களில் வரத்து அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மழைப்பொழிவு வரும் வாரங்களில் இருக்குமென இந்திய வானிலை துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால்   மஞ்சள் செப்டம்பர் கான்ட்ராக்ட் 16,275 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி


மஞ்சள் (TURMERIC)

2012-2013-ம் ஆண்டுகளில் உற்பத்திக் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், அதிகரித்துவரும் ஏற்றுமதி ஆர்டர்களினாலும் மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகமானது. ரம்ஜான் விடுமுறைக்குப் பிறகு வெளிநாட்டு சந்தைகளிலிருந்து புதிய ஆர்டர்கள் இருக்கும் என்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் மஞ்சள் பரப்பளவு ஆகஸ்ட் 15-ம் தேதி நிலவரப்படி, 46,703 ஹெக்டேராக இருப்பதாக ஆந்திர மாநில விவசாயத் துறை தெரிவித்துள்ளது. (சென்ற இதழில் ஆகஸ்ட் 8-ம் தேதி நிலவரப்படி 44,130 ஹெக்டேர் பரப்பளவாக இருந்ததாக கூறியிருந்தோம்). இதுவே கடந்தாண்டில் 60,300 ஹெக்டேராக இருந்துள்ளது. கடந்த வாரத்தில் ஈரோடு சந்தையில் 5,300 பைகளும், நிஜாமாபாத் சந்தையில் 1,000 பைகளும் (ஒரு பை என்பது 70 கிலோ) தின வரத்தாக இருந்தது. ஈரோடு சந்தையில் நூறு கிலோ விரலி மஞ்சள் 6,500 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் செப்டம்பர் கான்ட்ராக்ட் 5,960 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி


மிளகாய் (CHILLI)

மத்தியப் பிரதேசத்தில் மழை குறைந்ததால் விளைச்சல் குறைந்துள்ளது. ஆனால், தற்போது மழை பொழிந்து வருவதால் அடுத்த சீசனில் விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2012-2013-ம் வருடத்தில் 6.5 மில்லியன் பைகளாக விளைச்சல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே சென்ற வருடத்தில் ஐந்து மில்லியன் பைகளாக (ஒரு பை என்பது 45 கிலோ) இருந்தது. ஆகஸ்ட் 15-ம் தேதி நிலவரப்படி, ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் மிளகாய் 37,070 ஹெக்டேராக இருக்குமெனவும் (சென்ற இதழில் 24,754 ஹெக்டேர் பரப்பளவு என குறிப்பிட்டிருந்தோம்) இதுவே இந்த காலகட்டத்தில் கடந்த வருடத்தில் 36,690 ஹெக்டேராக இருந்தது எனவும், அம்மாநில விவசாயத் துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் நூறு கிலோ மிளகாய் செப்டம்பர் கான்ட்ராக்ட் 5,856 ரூபாய்க்கு வர்த்தகமானது.

சோயாபீன் (Soybean)

சர்வதேச தேவை காரணமாக சோயாபீனின் விலை அதிகரித்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. செப்டம்பர் மாத சோயாபீன் கான்ட்ராக்ட் விலை குறைந்து, சென்ற வாரத்தில் மீண்டும் விலை அதிகரித்தது. இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை வரவிருப்பதால் தாவர மற்றும் சோயா எண்ணெய்யின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோயா விளையும் இடங்களில் நல்ல மழை பொழிவதால் ஹெக்டேர் பரப்பு அதிகரித்து 10.5-11 மில்லியன் டன்னாக இருக்குமென கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் சோயாபீன் அக்டோபர் கான்ட்ராக்ட் 3,996 ரூபாய்க்கு வர்த்தகமானது.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு