Published:Updated:

வேல்யூ இன்வெஸ்டிங்!

வேல்யூ இன்வெஸ்டிங்!

பிரீமியம் ஸ்டோரி
வேல்யூ இன்வெஸ்டிங்!
##~##
து வேல்யூ இன்வெஸ்டிங் என்பதற்கு இந்த வாரம் ஒரு கம்பெனியை உதாரணமாகச் சொல்லப் போகிறேன். ஆனால், இந்த கம்பெனியின் பெயரை நான் சொல்ல மாட்டேன். நான் தரும் பல்வேறு குறிப்புகளிலிருந்து வாசகர்கள்தான் கம்பெனியின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், ஆர்வம் கொண்ட வாசகர்கள் இந்த தொடரைப் படித்து முடிப்பதற்குள் கண்டுபிடித்துச் சொல்லிவிடுவீர்கள். என்ன டீலுக்கு ரெடியா?

தொட்ட விலையில் எல்லாம் தொட்டவர்களுக்கெல்லாம் பொன்னான லாபம் தந்த குரோத் கம்பெனி இது. 1992-ல் பப்ளிக் இஷ்யூ வந்த கம்பெனி; 1999-ல் ஒரு 1:1 போனஸ்; இடையில் 1:5 ரைட்ஸ்; 2000-த்தில் 10 ரூபாய் ஷேர் 2 ரூபாயாக ஸ்பிலிட்; 2006-ல் ஒரு 1:1 போனஸ் என்ற பிரமாதமான ட்ராக் ரெக்கார்டுடைய கம்பெனி அது.

10 ரூபாய் ஷேராக 1992-ல் தரப்பட்ட ஷேர் அதிலிருந்து ஆகஸ்ட் 2000-த்திற்குள் 2,600 ரூபாய் என்ற இலக்கை எட்டியது. பின்னர் பெரியதொருப் பிரச்னையைச் சந்தித்தது. ஏகப்பட்ட சிக்கல்கள், கம்பெனி இருக்குமா, இருக்காதா என்கிற அளவுக்கு படுபயங்கரமான குழப்பம். ஆனால், அந்த நிலையெல்லாம் தாண்டி வந்தது இந்த கம்பெனி. இப்போதைய விலை சுமார் 450 ரூபாய்க்கு மேல். (10 ரூபாய் முக மதிப்பு கணக்கில்)

இந்த பங்கில் முதலீடு செய்த ஒரு முதலீட்டாளருக்கு கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பின்னால் என்ன கிடைத்தது என்று ஒரு குத்துமதிப்பான கணக்கைப் பார்ப்போம்.

100 ஷேரை 1,000 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தால் இன்றைக்கு அது ரூபாய் 1,80,000 ஆக இருக்கின்றது. இடையில்தான் எத்தனை பிரச்னைகள். என்னதொரு ஏற்றஇறக்கம்! இத்தனைக்கும் அப்பால் அது ஓரளவுக்கு ரிட்டர்னையும் கொடுத்திருக்கின்றது.

இதிலென்ன ஆச்சரியம் என்கின்றீர்களா? ரூபாய் 1,80,000 என்பது இருபது வருடம் கழித்து கிடைத்த லாபம். இடைப்பட்ட காலத்தில் (அதாவது எட்டு வருடத்திலேயே) அது போன உயரம் ரூபாய் 2,60,000. (இடையில் ஒரு ரைட்ஸ் இருந்தது. கணக்கு சுலபமாக இருக்க அதை இப்போதைக்கு ஒதுக்கிவிடுவோம்). அடேயப்பா!

அது மாதிரி இன்னுமொரு ஷேரை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதுதானே நீங்கள் இப்போது கேட்க விரும்பும் கேள்வி. அது வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கான கேள்வியில்லை. அது வேல்யூ இன்வெஸ்டிங்கிற்குத் தேவையுமில்லை.  

ஒரு முதலீட்டாளர் ரூபாய் 2,600-ல் விலை இருக்கும்போது அந்த பங்கில் முதலீடு செய்திருந்தால் என்னவாகும் என்பதுதான் வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கான கேள்வி. கார்ப்பரேட் பேராசைக்கு உதாரணம் இந்த கம்பெனி. உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் முட்டாள்தனமான, தகுதியில்லாத, ஏமாற்றும் நடவடிக்கைகொண்ட நிர்வாகிகள், ஆடிட்டர்கள், டைரக்டர்கள், அனலிஸ்ட்கள், டிரேடர்கள் என பல பேரை கலவையாகக்கொண்டது.

கணக்கில் தில்லுமுல்லு செய்து வியாபாரத்தை உயர்த்தி, லாபத்தை அதிகப்படுத்திக் காண்பித்து, கடனைக் குறைத்து எழுதி, இல்லாத டெபாசிட்டை கணக்கில் காட்டி என பல தில்லுமுல்லுகளைச் செய்கின்றார்கள் இந்த சந்தையில். இதனால் முதலீட்டாளர்களுக்கு சந்தையின் மீதான நம்பிக்கை போய்விடுகின்றது. பல சமயம் கம்பெனியில் வேலைபார்க்கும் ஊழியர்களும்கூட இதில் கூட்டாக இருந்துவிடுகின்றார்கள். ஏனென்றால், ஷேர் விலை ஏறினால் அவர்களுடைய ஸ்டாக் ஆப்ஷனில் கிடைத்த ஷேர்களின் விலை ஏறுமே!

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? இப்படி திருட்டுத்தனங்கள் குவிந்திருந்த ஒரு கம்பெனியை அனைவரும் ஏன் கொண்டாடினார்கள்? ஒருவருக்குக் கூடவா இந்த உண்மை தெரியவில்லை? கொஞ்சம்கூட சந்தேகப்பட முடியவில்லையே! என்று பலர் குமைந்த காலமும் உண்டு.

இந்த கேள்விக்கு பதிலைத் தெரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் வேறு ஆங்கிளில் யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் வேல்யூ இன்வெஸ்டிங்கில் போய் நீங்கள் நிற்பீர்கள். இந்த பங்கு கொண்டாடப்பட்ட காலத்தில் அந்த இண்டஸ்ட்ரி மேல்நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. இதுபோல பறந்த காலகட்டத்தில் இந்த கம்பெனி 1995-2000-ம் காலகட்டத்தில் வெல்த் கிரியேட்டட் அளவீட்டில் டாப் 5 இடத்தைப் பிடித்திருந்தது.

எத்தனையோ அனலிஸ்ட்கள் அந்த கம்பெனியை ட்ராக் செய்தார்கள். வாங்கு என்றார்கள். பெஸ்ட் என்றார்கள். பரிசு கொடுத்தார்கள். ஆனால், ஒருவரால்கூட இந்த கம்பெனி சரியான பாதையில் செல்லவில்லை என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியவில்லை. கம்பெனியே எங்களால இதுக்கு மேல முடியல சாமி என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் வரை எல்லாமே நன்றாகத்தான் போனது.

ஒரு வெறுமையான சூதாட்டம் நிறைந்த சந்தைச் சூழலில் அடிப்படைகளை அனைவரும் மறந்துவிடுவதுதான் இதற்கான முக்கிய காரணம். சந்தையில் ஏற்றம் நிரந்தரமானது என்று அனைவரும் கருதும் வண்ணம் சந்தையின் செயல்பாடோ அல்லது ஒரு தனி கம்பெனியின் செயல்பாடோ இருந்தால் ஸ்டாக் மார்க்கெட் ஒரு ரிஸ்க் உள்ள இடம் என்பதே அனைவருக்கும் மறந்து போய்விடும். இந்த கம்பெனியில் தனிநபர்களும், எஃப்.ஐ.ஐ.களும் சரமாரியாக ஷேர்களை வாங்கிக் குவித்து வைத்திருந்தார்கள். அனைவரும் ஏமாறவே செய்தார்கள். அனைவரும் சந்தை முதலீட்டில் ரிஸ்க் இருக்கிறது என்பதை மறந்துபோனார்கள். இதனால் மேலே மேலே மேலே என போய்க்கொண்டிருந்தது அந்த கம்பெனியின் பங்குகள்.

ஏன் அந்த கம்பெனியின் விலை தாறுமாறாக ஏறியது? சம்பாதிக்கும் திறனை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு விலைகள் நிர்ணயிக்க பட்டதுதான். சம்பாதிக்கும் திறனை அதிகமாகக் காட்டிக்கொண்டேயிருந்த அந்த கம்பெனி கடைசியாகச் சொன்ன தகவலும் அதுதான்.

சம்பாத்தியத்தைக் குறைவாகக் காண்பித்தால் அவமானமாகப்பட்டது அந்த கம்பெனிக்கு. அதனால், சம்பாத்தியத்தை உயர்த்தினோம். சம்பாத்தியம் உயர்ந்தால் லாபம் உயரும். வந்த லாபம் எங்கே போனது எனக் கேட்பார்கள். அதனால், முதலீட்டையும் உயர்த்தினோம். சம்பாத்திய அளவு இப்ப சரியாகிவிடும், அப்ப சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஒரு நாளும் சரியாவதைப்போல் தெரியவில்லை. அதனால் வராத லாபத்தை வந்த மாதிரி காண்பித்து, அதை பேலன்ஸ் செய்ய முதலீட்டை உயர்த்தி ஒரு சமயத்தில் கைதூக்கி சரண்டராக வேண்டியதாயிற்று என்று சொன்னது.

லாபம், அதுவும் தொடர்ந்து லாபம், அதுவும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபம் என்பது எந்த ஒரு தொழிலிலும் உத்தரவாதம் தரமுடியாது. வேறு யாரும் அந்த தொழிலுக்குள் வரமுடியாது என்கிற நிலை இருந்தால் மட்டுமே பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக லாபம் என்பது சாத்தியம்.

போட்டி நிறைந்த பொருளாதாரத்தில் லாபத்தை அதிவேகத்தில் தொடர்ச்சியாகக் கூட்டிக்கொண்டு நெடுநாட்களுக்குப் போக முடியாது. ஏனென்றால், நிச்சயமாக அவ்வளவு லாபம் தரும் தொழிலில் புதிதுபுதிதாகப் போட்டிகள் முளைக்கவே செய்யும். ஒரு வேல்யூ இன்வெஸ்டர் என்பவர் வெறும் அதிவேக வளர்ச்சியை மட்டும் பார்க்க மாட்டார். அப்படிப்பட்ட வளர்ச்சி எவ்வளவு நாட்களுக்கு சாத்தியம் என்று பார்ப்பதில்தான் ஆர்வமாக இருப்பார்.

தலையில அடிச்சு சொல்றேன், கம்பெனியின் பேரை கண்டுபிடிச்சிருப்பீங்களே!

(முதலிடுவோம்)

வேல்யூ இன்வெஸ்டிங்!

எப்படி மாற்றலாம்?  

மெரிக்காவில் இருக்கும் ஆம்ஜென் (Amgen) உலகின் மிகப் பெரிய பயோடெக் மருந்து  நிறுவனம். இதன் சி.இ.ஓ. கெவின் ஷேரர் (Kevin Sharer) தன் 75 முக்கிய அதிகாரிகளிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி, 'என் செயல்பாடுகளில் எவற்றை நான் மாற்றிக்கொள்ள வேண்டும்?' இதே கேள்வியை அந்த 75 பேரும் தங்களின் கீழே பணிபுரிபவர்களிடம் கேட்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் பதிலை வைத்து வித்தியாசமான முயற்சிகளை எடுக்க மிகவும் உதவியாக இருக்கிறதாம்!

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு