Published:Updated:

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!

பிரீமியம் ஸ்டோரி

கோடியைக் காட்டி லட்சம் சுவாஹா!

என் பணம்; என் அனுபவம்!
##~##
ன் நெருங்கிய தோழியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இரண்டு மாதத்துக்கு முன் அவளுடைய செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. 'நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்கள் செல்போன் நம்பர் லக்கி நம்பராக செலக்ட் ஆகியிருக்கிறது. ஒரு கோடி ரூபாய் உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது. அந்த தொகையைப் பெற உடனடியாக ஒரு 1.60 லட்ச ரூபாயை இந்த அக்கவுன்ட் நம்பரில் கட்டுங்கள்’ என்று சொல்லி இருந்தார்கள். ஒரு கோடி கிடைக்குமே என்று ஆசைப்பட்டு, அம்மா போட்ட நகைகளை அடமானம் வைத்து எஸ்.எம்.எஸ்-ல் சொல்லி இருந்த அக்கவுன்டில் பணத்தைச் செலுத்தினாள் என் தோழி. ஆனால், ஒரு கோடியும் கிடைக்கவில்லை. தகவல் அனுப்பியவர்களைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. வீட்டில் யாரிடமும் இதுபற்றி அவள் சொல்லவில்லை. இப்போது நகை எங்கே என்று அவள் மாமியார் கேட்க,  எதையோ சொல்லி சமாளிக்கிறாள். இதுபற்றி போலீஸில் புகார் செய்யப் போனால், விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்று நினைத்து பயப்படுகிறாள். பணத்தை இழந்து நிம்மதி இல்லாமல் தவிக்கும் என் தோழியின் நிலை யாருக்கும் வரக்கூடாது!  

-பிரேமா, சென்னை.

குடிகார மோசடி!

என் பணம்; என் அனுபவம்!

மீபத்தில் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏற நின்று கொண்டிருந்தேன். அப்போது சுமாரான தோற்றத்தில் நடுத்தர வயது ஆள் ஒருவர் திடீரென வயிற்றைப் பிடித்துக் கொண்டு துடித்தார். அவர் கையெல்லாம் ஒரே ரத்தம். ஆனால், சுற்றி நின்றவர்கள் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. நான் பதறிப்போய், அவரிடம் என்னாச்சு என கேட்டேன். மூன்று நாட்களுக்கு முன்பு வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும், தையல் பிரிந்து ரத்தம் வருவதாகவும் சொன்னார். உடனே அவரை ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினேன். ஆட்டோவுக்கான காசை ஆட்டோக்காரரிடம் தந்தேன். ஆனால், மூன்றே நிமிடத்தில் அந்த ஆட்டோக்காரர் திரும்ப வந்துவிட்டார். ''அட போங்க சார், அந்த ஆளு கொஞ்ச தூரம் போனவுடனேயே இருபது ரூபாய் எடுத்துக்கிட்டு மீதியைக் கொடுன்னு சண்டை போட்டு வாங்கிட்டு டாஸ்மாக் கடைக்குள்ள நுழைஞ்சிட்டான்...'' என்றார். மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நான் மட்டும் அவசரப்பட்டு உதவி செய்ததை நினைத்து அவமானமாக இருந்தது!

-எம்.சந்திரசேகரன், கோவை.

முதலில் படிவம்; அப்புறம் பணம்!

என் பணம்; என் அனுபவம்!

ண்மையில் வங்கியில் பணம் செலுத்துவதற்காகச் சென்றேன். அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து வரிசையில் நின்றேன். கேஷியர் படிவத்தைக் கேட்டதும், படிவத்துடன் சேர்த்து பணத்தையும் கொடுத்தேன். வழக்கமாக அப்படித்தான் செய்வேன். படிவத்தை செக் பண்ணிய கேஷியர் நான் கையெழுத்து போடவில்லை என்பதால் படிவத்தைத் திரும்ப என்னிடமே கொடுத்து போடச் சொன்னார். இடையில் இன்னொரு வாடிக்கையாளருக்குப் பரிவர்த்தனையை முடித்து அனுப்பினார். நான் கையெழுத்து போட்ட படிவத்தை மீண்டும் கொடுத்தபோது, பணம் தரும்படி கேட்டார். பணத்தைக் கொடுத்துவிட்டதாக எவ்வளவோ சொல்லியும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. வேறு வழியில்லாமல் திரும்பவும் பணத்தைத் தந்தேன். இப்போதெல்லாம் எந்த வங்கிக்குப் போனாலும் முதலில் படிவத்தைக் கொடுத்துவிட்டு, அவர்கள் கேட்கும்போது மட்டுமே பணத்தைத் தருகிறேன்!

-பி.மேரி விக்டோரியா, சேலம்.

நல்லவேளை, லஞ்சம் தரவில்லை!

என் பணம்; என் அனுபவம்!

ன் கணவர் அரசுப் பணியில் இருக்கிறார். அவருக்கு இரண்டு வருடங்களாக எதிர்பார்த்த புரமோஷன் வரவில்லை. என் கணவர் மனவருத்தத்தை தன் நண்பரிடம் சொல்லவே, அவர் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் அழைத்துப் போனார். அமைச்சரின் உறவினரிடம் விஷயத்தைச் சொன்னதும், ஒரே மாதத்தில் புரமோஷன் வாங்கித் தருவதாகச் சொல்லி, 50 ஆயிரம் பணம் கொடுங்க என்றார். என் கணவருக்கோ ஒரே மனப்போராட்டம். லஞ்சம் கொடுத்து சிபாரிசு செய்து புரமோஷன் வாங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. கடைசியாக வரும்போது வரட்டும் என்று சும்மா இருந்துவிட்டார். அடுத்த பத்து நாட்களில் அந்த குறிப்பிட்ட அமைச்சரின் பதவி பறிபோனது. நல்லவேளையாக நாங்கள் பணம் தரவில்லை. தந்திருந்தால் எங்கள் பணம் பறி போயிருக்கும். யார் செய்த புண்ணியமோ எங்கள் பணம் தப்பித்தது. என் கணவருக்கு வரவேண்டிய புரமோஷனும் வந்துவிட்டது!

-ஆர்.லஷ்மி, ஈரோடு.

என் பணம்; என் அனுபவம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு